பசிப்பிணி போக்கும் அம்மா உணவகம்
- இந்தியாவிலேயே முதல்முறையாக மலிவு விலையில் உணவு வழங்கும் 'அம்மா உணவகம்' திட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2012-ல் தமிழகத்தில் தொடங்கினார். முதலில் சென்னையில் தான் அத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அவரது ஆட்சி காலத்தில் சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
- மாநிலம் முழுவதும் பிற மாநகராட்சி பகுதிகளில் 108, நகராட்சிகளில் 139, ஊரகப் பகுதிகளில் 4 என மொத்தம் 658 அம்மா உணவகங்களை ஜெயலலிதா தொடங்கினார். தமிழகம் முழுவதும் இன்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயன்பெற்று வருகின்றனர்.
- இந்த அம்மா உணவகங்களில் நாளொன்றுக்கு ரூ.20 செலவில் 3 வேளை உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இங்கு காலையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5, பிற்பகலில் கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவை தலா ரூ.5, தயிர் சாதம் ரூ.3, இரவில் இரு சப்பாத்தி மற்றும் பருப்பு குழம்பு ரூ.3 என்ற மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது.
- இங்கு வழங்கப்படும் சுகாதாரமான உணவால், நகர்ப் புறங்களில் அசுத்தமான சாலையோர உணவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.
- விலை குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பார்வையிட்டு வியந்து பாராட்டியுள்ளன. அவர்களது மாநிலங்களிலும் செயல்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு அமைச்சர்களும் வந்து பார்வையிட்டுள்ளனர்.
- தொலைநோக்கு சிந்தனையுடன் ஜெயலலிதா அமல்படுத்திய இந்த அம்மா உணவகங்கள், பேரிடர் காலங்களில் உணவு விநியோகத்துக்கு பேருதவியாக இருந்து வருகின்றன. 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடர்களின் போது, இந்த அம்மா உணவக கட்டமைப்புகள் பேருதவியாக இருந்தன. அதனால் இவ்விரு பெருவெள்ளத்தின் போதும் உணவு கிடைக்காமல் ஒருவர் கூட பட்டினியால் உயிரிழக்கவில்லை என்ற சாதனையை படைக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கின்போது, சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. பணிசெய்யும் இடங்கள், கல்லூரி மாணவர் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் கிடைக்கும் உணவை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு 'பசிப்பிணி மருத்துவன்' இல்லமாகவே அம்மா உணவகங்கள் மாறின.
- அப்போது அவர்களின் கண்களுக்கு, அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாகவும், அட்சய பாத்திரமாகவும் தெரிந்தன. இந்த அம்மா உணவகங்களால் பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது எல்லா காலங்களிலும் நகர்ப்புறங்களிலும் உணவின்றி பட்டினியால் உயிரிழப்பு ஏற்படுவது ஒழிக்கப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையாலேயே சாத்தியமானது.
- டிச.5 - இன்று: ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)