TNPSC Thervupettagam

பசுமை - மாற்று ஆற்றல்கள்

July 20 , 2024 269 days 584 0
  • சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதிப் பொறியியல் பேராசிரியர்களான ஜிதேந்திர சங்க்வாய், யோகேந்திர குமார் ஆகிய இருவரும் 2024 ஏப்ரல் இறுதியில் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளனர். கரிம வளியைக் கடலுக்கடியில் உயரழுத்தத்தில் நிரந்தரமாக ஓய்வுகொள்ள வைத்துவிடலாம் என்பதுதான் அந்தச் செய்தி. கரிமச் சுமையைக் குறைத்து, காலநிலைப் பிறழ்வை நேர்செய்வதற்கு இது பாதுகாப்பான தீர்வு என்பது இந்த அறிஞர்களின் கருத்து. ஹைட்ரேட் கரிமத்தை (hydrate of carbon) சேமிப்பதற்கு வங்காள விரிகுடாவை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
  • நாட்டின் பல ஆண்டு பசுங்குடில்வளி உமிழ்வுக்கு நிகரான கரிமவளியைச் சேகரித்து நிரந்தரமாகவும் பத்திரமாகவும் கடலடி வண்டல் படிவுகளுக்குள் சேமித்து வைத்துவிடலாம். கடலுக்கடியில் 500 மீட்டர் ஆழத்தில், தாழ்ந்த வெப்பநிலையில் கரிம வளியைத் திரவக் குட்டைகளாகவோ, சூழலியல் பாதிப்பில்லாத பனிக்கட்டி போன்ற திட-நீர்மப் படிகமாகவோ வைத்திருப்பது சாத்தியம் என்கின்றனர் இவர்கள்.
  • 500 மீட்டர் ஆழத்தில் வளிமண்டலத்தைவிட 50 மடங்கு அழுத்தம் நிலவும். அந்த அழுத்தத்தில் 150-170 கனமீட்டர் கரிமவளியை ஒரு கனமீட்டர் அளவு ஹைட்ரேட் கரிமமாகச்சுருக்கிவிட முடியும் என்கிறார்கள். கடல் தரையின் அமைப்பையும், வண்டல் தன்மையையும் பொறுத்தே பொருத்தமான இடத்தைத் தேர்வுசெய்ய முடியும்.

கடல் கழிவுக் கிடங்கல்ல:

  • இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இந்த அறிஞர்கள் இன்னொரு வாதத்தையும் முன்வைக்கின்றனர்- ‘பசுங்குடில் வளிகளில் ஒன்றான மீத்தேன் ஹைட்ரேட் (methane hydrate) கடலுக்கடியில் பெருமளவில் சேகரமாகியிருப்பதால் சூழலியல் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை, அதைவிட நச்சுத்தன்மை குறைந்தஹைட்ரேட் கரிமத்தைச் சேமித்து வைப்பதால் எந்தச் சிக்கலும் எழாது’.
  • கடலைக் கழிவுக் கிடங்காகப் பயன்படுத்துவது அபாயகரமானது. ஏற்கெனவே மின்னணுக் கழிவுகள், அணுக்கழிவுகள், ஞெகிழி போன்ற பலவற்றைக் கடலில் கொட்டி நிரப்பிக்கொண்டிருக்கிறோம். வங்கக் கடலைப் பொறுத்தவரை, அது உலகின் வெதுவெதுப்பான கடல்களில் ஒன்று; அதோடு, அதன் உவர் தன்மையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் வெப்பமண்டலப் புயல்களின் எண்ணிக்கையும் போக்கும்மாறிவருகின்றன. அந்தக் கடலை மீண்டும் தொந்தரவு செய்வது நல்லதல்ல.

பசுமை ஆற்றல்:

  • காலநிலைப் பிறழ்வின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று, நன்னீர்ப் பற்றாக்குறை. நன்னீர்த் தேவைக்கும் விநியோகத்துக்குமான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. கடல்நீரை உவர் நீக்கம் செய்து நன்னீராக்கும் தொழில்நுட்பம் நம் கையில் உண்டு; ஆனால் அதில் இரண்டு முக்கியமான சிக்கல்கள் இருக்கின்றன- ஒன்று மின்னாற்றல், முதலீட்டுச் செலவு; இரண்டு, அதனால் உருவாகும் மாசுபாடு.
  • கரிம வளியை உமிழாத வழிமுறையில் உற்பத்தியாகும் ஆற்றல்பசுமை ஆற்றல் எனப்படுகிறது. வளிமண்டலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கரிம வளியின் அளவைக் குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று, ஆற்றல் உற்பத்தியைக் கரிம நீக்கம் செய்வது.
  • மானுட உலகம் அடங்காப் பசியுடன் ஆற்றலை நுகர்ந்து கொண்டிருக்கிறது. புதைபடிவ எரி ஆற்றல் இருப்பு அதிவேகமாக வற்றிக்கொண்டிருக்கிறது. கரிம-நிகர்-வளி உமிழ்வைக் குறைக்க, அதாவது இயற்கை அமைப்புகள் சேகரித்துக்கொள்ளும் அளவில் மட்டும் கரிமத்தை வெளியிட உலகெங்கும் பல முனைகளில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
  • உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காய்கறிக் கழிவுகளி லிருந்து மீத்தேன் வளியை உற்பத்தி செய்யலாம்; கரிம வளியை மெத்தனாலாக மாற்றலாம்; நீரிலிருந்து ஹைட்ரஜன் வளியைப் பிரித்தெடுத்து, எரி ஆற்றலாகப் பயன்படுத்தலாம். ஆய்வுகள் இப்படிப் பல திசைகளில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மின் உற்பத்தியைக் ‘கரிம நீக்கம்’ செய்யும் பொருட்டு, தூய்மை ஆற்றல் மாற்றுகளுக்கான சோதனை வெள்ளோட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆற்றல் நுகர்வு:

  • குளிரூட்டும் கருவிகள், குளிர்ப் பிரதேசங்களில் சூடேற்றும் கருவிகள், வெப்பப் பிரதேசங்களில் மின்விசிறிகள் அனைத்தும் இன்றைக்கு அடிப்படைத் தேவை ஆகிவிட்டன.
  • உலக நாடுகள் ஓராண்டில் நுகரும் மின்னாற்றலின் அளவு 50 லட்சம் கோடி கிலோவாட். இதில் 20 விழுக்காட்டைச் செலவிடுவது அமெரிக்கா. மின்னாற்றல் நுகர்வினால் நிகழும் கரிம-நிகர்-வளி உமிழ்வின் பங்கு என்று எடுத்துக்கொண்டால்- தொழிற்சாலைகள் - 31%; மின் உற்பத்தி - 27%; வேளாண்மை, விலங்கின வளர்ப்பு - 19%; போக்குவரத்து 16%; வீடுகளில் பயன்படுத்தும் குளிரூட்டும்/ வெப்பமூட்டும் கருவிகள் - 7%. ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 30%ஐ காற்று, சூரிய ஆற்றல் ஆகிய மாற்று வழிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன.

அணு மின்னாற்றல்:

  • பசுமை ஆற்றல்களில் ஒன்றாக அணுவாற்றல் சுட்டிக்காட்டப்படுகிறது. ஜப்பான் தனது மின்னாற்றல் தேவையில் 25 விழுக்காட்டை அணுமின் நிலையங்களின் மூலம் நிறைவு செய்துவந்தது. கரிம-நிகர்-வளி உமிழ்வைக் குறைக்கும் பொருட்டு, சில ஆண்டுகளில் அதை 50%ஆக உயர்த்துவதற்கும் ஜப்பான் அரசு திட்டமிட்டிருந்தது.
  • ஆனால், 2011 தொஹோக்கு நிலநடுக்கப் பேரிடரைத் தொடர்ந்து, 2013இல் ஜப்பானின் அனைத்து அணுமின் நிலையங்களும் மூடப்பட்டன. மின்னாற்றல் உற்பத்திக்கு மாற்று எரிபொருளாகப் புதைபடிவ எரிபொருளை இறக்குமதி செய்வது ஜப்பான் அரசுக்குப் பொருளாதாரச் சுமையாக மாறியது.
  • 2012இல் பொறுப்பேற்ற புதிய ஜப்பான் அரசு, ‘அணுவுலைகளை மூடி வைத்திருப்பதனால் ஆண்டுக்கு நான்கு லட்சம் கோடி யென் (ஏறத்தாழ 23 லட்சம் கோடி இந்திய ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்படுகிறது’ என்று புலம்பியது. ஆனால், ஜப்பானிய மக்களின் பார்வையோ தெளிவாக இருந்தது.
  • அரசு 2015இல் அணுவுலைகளை மீண்டும் திறக்க முயன்றது. இதற்கு எதிராக 30,000 பேர் டோக்கியோ நகரில் பேரணியாகச் சென்று, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எதிர்ப்பாளர்கள் அணுவுலைக்கு எதிராக 80 லட்சம் கையெழுத்துகளைச் சேகரித்திருந்தனர்.

சூரியப் பலகை:

  • நம்பகமான தூய ஆற்றல் மாற்றுவழிகளில் ஒன்று, சூரிய ஒளி மின்னாற்றல். அதில் பசுங்குடில் வளி உமிழப்படும் அபாயம் இல்லை, மூல ஆற்றலுக்கு உச்சவரம்பு என்பதும் இல்லை. சூரியப் பலகைகளை நிறுவிய பிறகு பராமரிப்புச் செலவு மிகக் குறைவு. எரிபொருள் செலவு எதுவும் இல்லை. ஆனால், சூரியப் பலகை உற்பத்திக்குத் தனித்துவமான இடுபொருள்கள், உலோகங்கள் தேவை.
  • அவற்றின் உற்பத்தி, விநியோகத்தின்போது சிறு அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு நேரலாம். சூரியப் பலகைகளைத் தூய்மைப்படுத்தத் தண்ணீர் தேவைப்படும். பெருமளவில்சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்வதற்கு விரிந்த நிலப்பரப்புகளும் தேவை. அவ்வாறு நிலப்பரப்புகளை மூடும்போது, வளிமண்டலத்துக்கும் நிலத்துக்குமான உறவு துண்டிக்கப் படுகிறது. அதன் கெடுவிளைவுகளில் ஒன்று, தழைச்சத்து தனிமமான நைட்ரஜனின் சுழற்சி பாதிக்கப்படுவது. இருப்பினும், பிற வழிமுறைகளுடன் ஒப்பிட்டால், சூரிய மின்னாற்றல் உற்பத்தி மூலம் சூழலியலில் ஏற்படும் தாக்கம் மிகமிகக் குறைவு என்பதோடு, சிக்கனமானதும்கூட.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top