TNPSC Thervupettagam

பஞ்சமி நில மீட்பு: சாத்தியமாக்குவது எப்படி?

June 28 , 2024 199 days 588 0
  • 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘படியாள்’ என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள், உயர் சாதி நிலச்சுவான்தார்களின் நிலங்களில் விலங்குகளைப் போல் உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த இழிநிலை நீங்க வேண்டுமெனில், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களைத் தலித் மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்று அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துவந்தனர்.

நிபந்தனைகள்:

  •  இதனிடையே அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ஹென்றி அப்பர்லே திரமென்ஹீர், 1891இல் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
  • அந்த அறிக்கையைப் பரிசீலித்த பிரிட்டன் நாடாளுமன்றம் 1892 செப்டம்பர் 30ஆம் நாள், தலித் மக்களுக்கு இலவசமாக நிலம் வழங்க வேண்டியதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக செங்கல்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களில் (தற்போதைய திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள்) வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அரசுக்குச் சொந்தமான சுமார் 12 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
  • பஞ்சத்தின் பிடியில் சிக்குண்டு நலிந்து வாழ்ந்துவந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டமையால் இந்நிலங்கள், ‘பஞ்சமி நிலங்கள்’ என அழைக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் அதை D.C. Land (Depressed Class Land) என அழைத்தனர். பஞ்சமி நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டபோது, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அந்நிலத்தினைக் குத்தகைக்கு விடுவதோ, தானமாக எவர்க்கும் தரவோ இயலாது.
  • முதல் 10 ஆண்டுகளுக்கு எவருக்கும் விற்பனையும் செய்யலாகாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டுமானால், இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு மட்டுமே அதனை விற்கலாம். பிறருக்கு விற்பது சட்டப்படி செல்லாது’ என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
  • எனினும், நாளடைவில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறியாமை, ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி, பிற சமூகத்தவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ பஞ்சமி நிலத்தை அவர்களிடமிருந்து பெற்று தமக்கு உரிமையுள்ளதாக மாற்றிக்கொண்டனர்.

நில மீட்பில் சிக்கல்கள்:

  • பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, அவை மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்று பரவலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், 1991ஜூலை 15இல் தமிழக அரசு ஆணை எண் 1/4868/90ஐப் பிறப்பித்தது.
  • இதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், அவரவர் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த பஞ்சமி நிலங்கள், பிற சமூகத்தவரால் அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் இல்லாததால், பல லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமூகத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளபோதிலும், அதை நிரூபித்துக் கையகப்படுத்த இயலவில்லை.
  • பஞ்சமி நிலங்களை மீட்பதற்காகக் கடந்த ஆண்டுகளில் தலித், இடதுசாரி இயக்கங்களால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1994இல் செங்கல்பட்டு அருகே காரணை என்னும் ஊரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் விளைவாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
  • பஞ்சமி நிலம் மீட்கப்படவும் அது குறித்தான அப்போதைய நிலையை ஆராயவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில், 2011 ஜனவரி 17இல் குழு ஒன்று அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் அமைக்கப்பட்டது.
  • அவருக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, நீதிபதி மருதமுத்து தலைமையிலான குழுவைக் கலைத்து, அக்குழுவின் பணிகளை அரசு உயர் அதிகாரிகளிடமே ஒப்படைத்தார். இந்நடவடிக்கையால் நாளடைவில் பஞ்சமி நில மீட்புச் செயல்பாடுகள் பின்னடைவைச் சந்தித்தன.
  • பஞ்சமி நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் அரசின் ஆவணக் காப்பகத்திலேயே முழுமையாக இல்லாத சூழலில், அவற்றை மீட்பது மாநில அரசுக்கு மிகப்பெரிய சவால் என்பதில் ஐயமில்லை.

அரசு என்ன செய்ய வேண்டும்?

  •  ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ள இங்கூர் தொழிற்பூங்காவில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக 150 ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து தாட்கோ - ஆதிதிராவிடர் வீட்டுவசதிக் கழகம் 99 ஆண்டு குத்தகைக்கு 1995இல் வாங்கியது.
  • இந்நிலத்தில் பல்லாண்டுகளாக எந்தத் தொழிலும் தொடங்கப்படாமையால், 48 ஏக்கர் நிலத்தை 2021இல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 3 தனியார் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
  • ஆக்கிரமிக்கப்பட்ட அரசு, கோயில் நிலங்களை மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசு, பஞ்சமி நிலங்கள் உள்ளிட்ட பட்டியல் சாதியினருக்குத் தரப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைப்புத் தர மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் எனக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போன்ற கடும் எச்சரிக்கைகள் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கும் தேவைப்படுகின்றன.
  • சமூக நீதிக்கு முன்னுரிமை தரும் விதத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, தகுதி உடைய தலித் மக்களுக்கு வழங்கி, தலித் சமூகத்தின் பஞ்சமி நில மீட்பு எனும் நீண்ட காலக் கனவினை நனவாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories