- தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ்.
- ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும்.
- நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை.
- விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்தி வந்தார்.
- அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று.
பஞ்சாயத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து
- ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார்.
- மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார்.
- அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
- மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும்.
- நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது.
- அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார்.
- நரசிம்ம ராவின் முயற்சியால் இந்த மசோதாவைப் பரிசீலிக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
- வரைவு மசோதா ஒன்றைத் தயாரித்து, சிறப்புக் குழுவின் ஒப்புதலை முதலில் பெறுமாறு கிராம வளர்ச்சித் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.
- வரைவு மசோதாவில் சில திருத்தங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாகக் கூறினார்கள்.
- சில மாநிலங்களின் பிரதிநிதிகள், பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
- மாற்றுக் கட்சியினர்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவர்களின் முழு ஆதரவைப் பெறும் வகையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வரைவு மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவருவது அவசியம் எனவும் அதிகாரிகளுக்கு நரசிம்ம ராவ் அறிவுரை கூறினார்.
ராவின் ஆலோசனைகள்
- ஒன்றிய அரசின் கிராம வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளராகவும், பின்னர் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம் இந்த மசோதாவைத் தயாரிக்கும் பணியில் முக்கியப் பங்கு வகித்தார்.
- அவரிடம் நரசிம்ம ராவ் கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்கினார்: “அனைத்துக் கட்சியினரும் அனைத்து மாநில முதல்வர்களும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரைவு மசோதா இருக்க வேண்டும். மிகச் சிறந்ததாக மட்டுமல்லாது சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்றிட வேண்டும். எதிர்த் தரப்பினர் சொல்லும் கருத்துகளை முழுமனதுடன் பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் நமது குறிக்கோளான பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கான அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நம்மால் சாதிக்க முடியும்.”
- எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர், காங்கிரஸ் அரசு கொண்டுவரும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக, அரசியல் காரணங்களுக்காகத் தாங்கள் வாக்களிக்க இயலாது என்று தெரிவித்தார்கள்.
- நரசிம்ம ராவ், அந்தக் கட்சித் தலைவர்களிடம் பேசி, நாடாளுமன்ற விவாதத்தின்போது சட்டத் திருத்தத்துக்கு எதிரான தங்கள் கருத்துகளை எடுத்துரைக்குமாறும், அதே வேளையில் வாக்கெடுப்பின்போது அவையிலிருந்து வெளிநடப்பு செய்யுமாறும் நட்புரீதியாகக் கேட்டுக்கொண்டார்.
- அதேபோல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். சட்டத் திருத்தத்துக்கு அவையில் இருப்பவர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என்ற தேவைக்கு இவ்வாறு வெளிநடப்பு செய்தது வசதியாக இருந்தது.
வாழ்நாள் சாதனை
- டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில தினங்களில் பெரும் அமளிகளுக்கு நடுவில் மக்களவையில் நரசிம்ம ராவ் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, இது மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவைப் பெறுமா என்பது பெரும் கேள்விக் குறியானது.
- ஆனால், நரசிம்ம ராவின் ராஜதந்திரம் வேலை செய்தது. பாஜகவிடம் பல நாட்களுக்கு முன்னரே இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கான ஒப்புதலை நரசிம்ம ராவ் பெற்றிருந்தார்.
- நாடாளுமன்றச் சிறப்புக் குழுவில் பாஜகவின் பிரதிநிதிகள் இந்தச் சட்டத்துக்கு அவர்களின் முழு ஆதரவு உண்டு என்பதை ஏற்கெனவே பதிவுசெய்திருந்தனர்.
- எனவே, சிக்கலான அரசியல் சூழ்நிலையிலும் எவ்விதத் தடங்கலும் இன்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்க73-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறியது. அடிப்படையில், காந்தியக் கருத்துக்களில் ஆழ்ந்த பிடிப்பு உள்ள நரசிம்ம ராவ், தனது இளமைக் காலத்தில் கிராம வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
- அவரின் வாழ்நாள் சாதனைகளுள் மிக முக்கியமானது பஞ்சாயத்து ராஜ்ஜியம் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச்செய்தது.
- 73-வது அரசமைப்புச் சட்டம், படிப்படியாக இந்தியச் சமூகத்தின் அடித்தளத்தில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவருவதைக் காண முடிகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையின் வாயிலாக அடித்தளத்தில் பெண்களையும் பட்டியலின மக்களையும் அதிகாரப்படுத்துவது சாத்தியமாகியுள்ளது.
- இன்று சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பெண்களும், சுமார் ஐம்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பட்டியலின மக்களும் தலைவர்களாகப் பொறுப்பு வகிக்கின்றனர். இதற்கு நரசிம்ம ராவும் முக்கியக் காரணம் என்பதை அவரது நூற்றாண்டு நிறைவான இன்று நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்!
- ஜூன் 28: பி.வி.நரசிம்ம ராவ் நூற்றாண்டு நிறைவு
நன்றி: இந்து தமிழ் திசை (28 - 06 – 2021)