- அண்மையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ‘பஞ்சு மிட்டாய்’ தடை செய்யப்பட்ட செய்தியை அறிந்திருப்பீர்கள். பஞ்சுமிட்டாயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரோடமைன் பி (Rhodamine-B) என்கிற தடைசெய்யப்பட்ட, உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மழலைகளின் கைகளில் இருந்த பஞ்சுமிட்டாய் நஞ்சுமிட்டாய் ஆனதற்குச் செயற்கை நிறமூட்டிகள் பயன்பாட்டில் கட்டுப்பாடு இல்லாதது முக்கியக் காரணம்.
நிறமூட்டிகள் எதற்கு
- வண்ணங்களால் ஈர்க்கப்படுவது மனித இயல்புகளில் ஒன்று. உணவின் மூலம் மக்களைக் கவர்ந்திழுக்கவும், பார்த்தவுடன் பசியைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவும் உணவில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- மேலும், செயற்கை நிறமூட்டிகள் குறைந்த விலையில் கிடைப்பதாலும், இவற்றைப் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நிறம் மங்காமல் உணவில் இருப்ப தாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
- குறிப்பாக, தடைசெய்யப்பட்ட, தரம்குறைந்த, இரண்டாம்நிலை நிறமூட்டி களைத் தனித்தனியாகவோ இரண்டு, மூன்று நிறங்களைச் சேர்த்தோ செயற்கை நிறமூட்டிகளை உருவாக்கி விடுகிறார்கள்.
உணவில் நிறங்கள்
- பண்டைய கால எகிப்திய நகரங் களில் உணவுப் பொருள்களில் வண்ணங்கள் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இடைக் காலத்தில், ஐரோப்பா தொடங்கி பல்வேறு உலக நாடுகளில் உணவில் வண்ணங்கள் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால், நகரமயமாக்கல் தொடங்கிய போது வர்த்தகம் மேலோங் கியது. மசாலாக்களும் வண்ணமயமான உணவு வகைகளும் மக்களை ஈர்க்க ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து ஒவ் வொரு நாட்டிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் உருவாகின. 1531இல் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட முதல் உணவுச் சட்டம் மசாலா உணவிலுள்ள வண்ணங்களைக் குறித்ததுதான்.
இந்தியாவில்
- கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களி லும் உணவுப் பொருள்களில் தடை செய்யப்பட்ட பல்வேறு செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்திய நச்சியல் ஆராய்ச்சி நிறுவன (ஐஐடிஆர்) விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
- இந்த ஆய்வில் உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகளின்அளவுகளும் அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயற்கை நிறமூட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை நிறமூட்டிகள்
- உணவில் சேர்க்கப் படும் வண்ணங்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று இயற்கையானது மற்றது செயற்கையானது. இயற்கையான நிறமூட்டிகளைப் பொறுத்தவரை தாவரங்களின் இலைகள், பூக்கள், வேர்கள், பழங்கள், காய்கறிகள், விதைகள், இயற்கையாகக் கிடைக்கும் நறுமணப் பொருள்கள் ஆகிய வற்றின் மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.
- இவை தவிர கடல் பூஞ்சை, சில வகைப் பூச்சிகள், நுண்ணு யிரிகள் ஆகியவற்றிலிருந்துகூட இயற்கை நிறமூட்டிகள் தயாரிக்கப்படுவது உண்டு. சிவப்பு, நீலம், ஊதா நிறங்கள் சிவப்பு முட்டைக்கோஸ், ராஸ்பெர்ரி, பீட்ரூட், ஆகியவற்றில் காணப்படும் ‘அந்தோ சயனின்’களிலிருந்து பெறப் படுகின்றன.
- பச்சை நிறம் அனைத்து இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படும் பச்சை நிறமியான ‘குளோரோஃபில்’களிலிருந்தும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் கேரட், பாதாம், தக்காளியில் காணப்படும் ‘கரோட்டினாய்டு’களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன.
செயற்கை நிறமூட்டிகள்
- செயற்கை நிறமூட்டிகளை நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைப் படுத்தலாம். இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் சில செயற்கை வண் ணங்களை உணவில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. அதன்படி மஞ்சள் நிறத்துக்கு சன்செட் மஞ்சள், டார்ட்ராசைனும் சிவப்பு நிறத்திற்கு அல்லுரா ரெட், பொன்சியோ, கார்மோசைன் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
- இளஞ்சிவப்பு நிறத்துக்கு எரித்ரோசின், நீல நிறத்துக்கு பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன், பச்சை நிறத்துக்கு ஃபாஸ்ட் கிரீன் ஆகியவை உணவுப் பொருள்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வோர் உணவுப் பொருளுக்கும் வெவ்வேறு அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
எந்த அளவில் இருக்க வேண்டும்
- உணவு மற்றும் பானங்களில்0.01 சதவீதம் என்கிற அனுமதிக்கப் பட்ட அளவில் மட்டுமே செயற்கை நிறமூட்டிகள் இருக்க வேண்டும் என 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்' (FSSAI) அறிவுறுத்தி யுள்ளது.
- தடை செய்யப்பட்ட செயற்கை நிறமூட்டிகள்: ஆரஞ்சு-II (ஆரஞ்சு), ஆரமைன் (மஞ்சள்), ரோடமைன் பி (சிவப்பு), நீல விஆர்எஸ் (நீலம்), மலாக்கிட் பச்சை (பச்சை), சூடான்-III (சிவப்பு) ஆகியவை உணவில் சேர்க்கத் தடைசெய்யப்பட்ட செயற்கை நிறமூட்டிகளாகும்.
செயற்கை நிறமூட்டிகள் உள்ள உணவு வகைகள்
- கேக்குகள், தின்பண்டங்கள், நூல் மிட்டாய்கள், இனிப்புகள், சுவை யூட்டிகள், பிஸ்கட்கள், ஐஸ்கிரீம், உறைந்த இனிப்புகள், பஞ்சுமிட்டாய், சுவையூட்டப்பட்ட பால், தயிர், பதப் படுத்தப்பட்ட பழங்கள், ஜெல்லி கிரிஸ்டல், ஐஸ்-மிட்டாய்.
- கார்பனேட்டட் - கார்பனேற்றம் செய்யப்படாத செயற்கைப் பானங்கள், செயற்கை சிரப்கள், சர்பத்கள், பழ பானங் கள், செயற்கைக் குளிர்பானங்கள்.
- ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பதப்படுத்தப் பட்ட பப்பாளி, பதப்படுத்தப்பட்ட தக்காளிச் சாறு, பழம் சிரப், பழ ஸ்குவாஷ், பழ நொறுவைகள், பழ கார்டியல், ஜெல்லி, ஜாம், மர்மலேட்டு, தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன், குடல் அப்பளம், வத்தல், வடகம், கேசரி, லட்டு, ஜிலேபி இனிப்புகள் என இவை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
உடல்நலப் பிரச்சினைகள்
- சில நிறமூட்டிகள் ஒவ்வாமையையும் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம். சிறுவர் களுக்குக் கவனக் குறைபாடு போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
- மூளை, சிறுநீர்ப்பை, தைராய்டு, அட்ரீனல், சிறுநீரக உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளையும் செயற்கை நிறமூட்டிகள் பாதிக்கின்றன.
செயற்கை நிறமூட்டிகளைத் தவிர்ப்பது எப்படி
- உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் செயற்கை உணவு வகைகளைத் தவிர்த்து ‘இயற்கை நிறமூட்டிகள்’ பயன் படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை உபயோகிக்கலாம். தவிர்க்க முடியாத சூழல் இருப்பின், ‘அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகள்’ சேர்க்கப்பட்ட உணவைக் குறைந்த அளவு பயன் படுத்தலாம்.
- உணவு லேபிளில் செயற்கை நிறத்தையும், உணவில் அவை சேர்க்கப் பட்ட அளவையும் குறிப்பிடுவது உணவு விதிகளின்படி கட்டாயமாகும். எனவே, தடை செய்யப்பட்ட செயற்கை நிறமூட்டிகளை அறிந்து, அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.
- கடைகளில் பாக்கெட் உணவை வாங்கும்முன் எப்போதும் லேபிளைப் படிக்க வேண்டும். செயற்கை நிறமூட்டி களைப் பயன்படுத்தும்போது ‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ (FSSAI) விதிமுறை களின்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
- செயற்கை நிறமூட்டிகளைப் பயன் படுத்தும்போது அவை உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை எப்போதும் கவனத்தில்கொள்ள வேண்டும். செயற்கை நிறமூட்டிகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் அதன் பயன்பாட்டிலிருந்து மக்களை விடுவிக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 03 – 2024)