TNPSC Thervupettagam

பட்டாசு பட்டால் கண்களைத் தேய்க்கக் கூடாது

October 26 , 2024 2 days 33 0
  • பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுக் கண் மருத்துவமனைக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் குழந்தைகளும் இளம்பருவத்தினரும்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டாசு வெடிக்கும்போது வேடிக்கை பார்த்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பட்டாசு வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.
  • சிலருக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டுப் பார்வை முழுவதும் இழக்கப்படுவதுகூட உண்டு. தீக்காயம் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்று உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற இழப்புகளுக்கு வழிவகுக்கிறது.

பாதுகாப்புக்கான சில வழிமுறைகள்:

  • ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குப் பட்டாசு வெடிக்கக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • குழந்தைகள், பெற்றோர் உதவியுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • வெடிக்காத பட்டாசைக் கையில் தொடக் கூடாது. அதன் மீது தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் இல்லையென்றால் அது வெடித்து விபத்து ஏற்படக்கூடும்.
  • உடையாத பாதுகாப்பு கண்ணாடி அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும்போது ஒரு வாளி முழுவதும் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகத் தீயை அணைக்க அது உதவும்.
  • நீளமான பத்தி கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • பட்டாசு வெடித்து முடித்த பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
  • கை கழுவவில்லை என்றால் பட்டாசில் உள்ள வேதிப்பொருள் கண்ணில் பட்டால் கண் எரிச்சல் ஏற்படும்.
  • பட்டாசு வெடிக்கும்போது எரிந்து முடிந்த மத்தாப்புக் கம்பிகளைத் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் போட வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும்போது கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்து வரை அணுக வேண்டும். கண்ணைத் தேய்க்கவோ அழுத்தவோ கூடாது. கண்ணில் உள்ள பட்டாசுத் துண்டுகளை எடுக்க முயலக் கூடாது.

விபத்து ஏற்பட்டால்...

  • தீபாவளியன்று கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கண் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அது அவசரமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்பதை உணர வேண்டும்.
  • சில நேரம் உங்களுக்குத் தெரிந்த கண் மருத்துவர் விடுமுறையில் இருந்தால் ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என நினைக்காமல் அருகில் உள்ள கண் மருத்துவரை அணுக வேண்டும்.
  • பெரும்பாலும் தீபாவளி அன்று இரவு நேரத்தில் பட்டாசு வெடித்துக் கண் தீக்காய விபத்து ஏற்படுவதால், இந்த நேரத்தில் நாம் எங்கு செல்வது என மக்கள் அறியாத காரணத்தால் அடுத்த நாள் சிகிச்சைக்கு செல்கிறார்கள். இதனால், கண்ணில் வேதிப்பொருள்களின் தாக்கம் அதிகமாகி பார்வை இழப்பு ஏற்படுகிறது.

அவரச சிகிச்சைக்கு...

  • உங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சை இலவசமாகக் கிடைக்கும்.
  • 24 மணி நேரமும் அங்குள்ள அவசர சிகிச்சை தீக்காயப் பகுதியில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் கண் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கண் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • பட்டாசு வெடித்து உண்டான காயத்திற்கு உடனடியாக 108 அவசர சேவையை அழைத்தால் அவர்கள் உங்களைச் சரியான சிகிச்சை மையத்துக்கு அழைத்துச்செல்வார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories