- பட்டாசு ஆலைகள், பட்டாசு சேமிப்புக் கிடங்குகள், விற்பனையகங்களில் நிகழும் விபத்துகளால் அப்பாவித் தொழிலாளிகள் உயிரிழப்பது வேதனைக்குரியது. பெரும் உயிர்ச் சேதத்துக்கும் பொருள் சேதத்துக்கும் காரணமாகும் இந்த வெடிவிபத்துகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் தற்போது அவசியமாகியிருக்கின்றன.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடை ஒன்றில், அக்டோபர் 7 அன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலையில், அக்டோபர் 9 அன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
- ரசாயன மூலப் பொருளில் ஏற்பட்ட உராய்வு இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களிலேயே இப்படிப் பல விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. அரியலூரில் விபத்தை எதிர்கொண்ட பட்டாசு ஆலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பும் வெடிவிபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பட்டாசு ஆலைகள், கிடங்குகள், கடைகளில் மணல் வாளிகள், தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள், தீத்தடுப்புக் கருவிகள் போன்றவை இருப்பது அவசியம். ஆனால், பெரும்பாலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதே இல்லை. வெடிபொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் வேதிப் பொருள்களின் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றனவா, அனுமதிக்கப் பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகப் பட்டாசுகள் சேமித்துவைக்கப்படுவது தவிர்க்கப் படுகின்றதா எனக் கண்காணிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. ஆனால், கண்காணிப்பில் இருக்கும் தொய்வு விபரீதங்களுக்கு வழிவகுத்துவிடுகிறது.
- அதேபோல், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளைத்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று விதிமுறை இருந்தும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்கப்படுவது விபத்துகளுக்குக் காரணமாகிறது. சின்ன உராய்வுகூட வெடிவிபத்துகளைத் தூண்டிவிடும் என்பதால், பட்டாசுத் தொழிலில் மிகுந்த கவனம் அவசியம். முறையான உரிமம் பெற்று இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில்கூட, அதிக வெப்பம் காரணமாக வெடிவிபத்து நிகழ்வதுண்டு. சேலம் மாவட்டம் செங்கனூரில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஜூன் மாதம் நிகழ்ந்த வெடிவிபத்து ஓர் உதாரணம்.
- ஆண்டு முழுவதும் வெடிவிபத்துகள் நிகழ்கின்றன என்றாலும், தீபாவளிப் பண்டிகை நெருங்கும் தருணத்தில், விபத்துகள் அதிகம் நடப்பதைப் பார்க்கிறோம். தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், பட்டாசு விற்பனைக்குத் தடைவிதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக, பட்டாசுத் தொழிலை நம்பி வாழும் கிராமப்புறப் பெண்களின் ஓராண்டுக்கான வாழ்வாதாரத்தில் தீபாவளி கால வருவாய்தான் 70% முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பலரின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் ஒரு தொழில் மிகவும் பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டியது அவசியம். பட்டாசு ஆலை விபத்துகளைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர், தீயணைப்புத் துறை அலுவலர், தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநர், வெடிமருந்துத் துறை இணை இயக்குநர் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு தற்போது அமைக்கப் பட்டிருக்கிறது.
- இதுபோன்ற குழுக்களின் நடவடிக்கைகள் ஆண்டு முழுவதும் தொடர வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 10 – 2023)