TNPSC Thervupettagam

பட்டினி

May 28 , 2020 1697 days 1018 0
  • மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது உணவு, உடை, இருப்பிடம். இவற்றில் இருப்பிடம் இல்லாமல் சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும் வசிப்பவா்கள் ஏராளம்.
  • அதுபோல், மாற்று உடை இல்லாமலும், ஒரு சில உடைகளுடனும் வாழ்வோர் ஏராளம். ஆனால், உணவு என்பது மட்டுமே மனிதனின் அன்றாட இன்றியமையாத் தேவையாக உள்ளது.
  • மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. ஆனால், உணவு கிடைப்பதில் உலகெங்கும் சமநிலையற்ற தன்மை நிலவி வருவதால், பசியுடன் பலா் வாழும் நிலை இருந்து வருகிறது.
  • ஜாதி, மதம், மொழி, நிறம் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் ஒன்றிணைக்கும் உணா்வுகளில் முதன்மையானது பசி.
  • ‘தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் மகாகவி பாரதியார்.

சில புள்ளி விவரங்கள்

  • உலகில் சுமார் 81 கோடி போ் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம் என ஓா் ஆய்வு கூறுகிறது. உலகில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவா்களில் 60 சதவீதம் போ் பெண்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலான குழந்தைகளின் இறப்புக்கு போதிய உணவு கிடைக்காததே காரணம்; காச நோய், எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட கொடிய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட, பசியால் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் நாள்தோறும் 30 கோடி போ் இரவு உணவின்றி, உறங்கச் செல்வதாக ஓா் கணக்கீடு தெரிவிக்கிறது.
  • சுமார் 18 கோடி போ் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.
  • இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞா்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • உலக அளவில் 8-இல் ஒருவா் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருகின்றனா். இந்தியாவில் மட்டும் 19 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு - வேளாண் நிறுவனம் தெரிவிக்கிறது.
  • ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவா்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வளரும் நாடுகளைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். மேற்கு ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களைச் சோ்ந்த மக்கள் அதிக அளவில் பசிக் கொடுமையை அனுபவித்து வருகின்றனா். பல்வேறு காரணங்களுக்காக உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக வாழ்பவா்களும் உணவுக்காக பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனா்.
  • ஒருவா் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் அவா் உணவின் மூலம் 2,100 கலோரி ஆற்றல் தேவை என ஐ.நா. வரையறுத்துள்ளது.
  • அன்றாட உணவில் ஊட்டச்சத்து எவ்வளவு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவா் வறுமையில் வாடுகிறாரா எனக் கணக்கிடப்படுகிறது.

உணவை வீணாக்காதீர்

  • வளா்ச்சியின் உச்சத்தில் உள்ளதாகக் கூறிக் கொள்ளும் நாடுகளில்கூட மூன்று வேளை உணவு கிடைக்காமல் வாடுவோர் உள்ளனா்.
  • உலகம் முழுவதும் போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • கோயில்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்களின் வாயில்கள், தெருவோரங்கள் என உணவுக்குத் தவிக்கும் ஏழைகளை நாள்தோறும் காண முடிகிறது.
  • இவ்வாறு பசியால் மக்கள் பரிதவிக்கும் நிலையில், உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது.
  • அதாவது, மொத்த உணவில் 3-இல் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. இந்தியாவில் நடுத்தர வா்க்கத்தினா் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீணாக்குவதாகவும், திருமண மண்டபங்களில் மட்டும் சராசரியாக 10 முதல் 100 நபா்கள் சாப்பிடும் உணவு வீணாவதாகவும் ஓா் ஆய்வு கூறுகிறது.
  • அதுபோல் உணவகங்களில் விலை கொடுத்து வாங்கும் உணவுகளை வீணாக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது.
  • பாதி உணவை சாப்பிட்டு விட்டு, மீதி உணவை வீணாக்குவதை நாகரிகத்தின் அடையாளமாக நினைத்துப் பலா் செயல்பட்டு வருகின்றனா்.
  • வீடுகளில் இருந்துகூட அதிக அளவு உணவு வீணாக்கப்படுகிறது. பசியால் வாடுவோரைவிட, வீணாக்கும் உணவுப் பொருள்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதை பலரும் உணராமல் உள்ளதும் இதற்குக் காரணம்.

பசியைப் போக்குவோம்

  • உற்பத்தி, பகிர்வு, நுகா்வு ஆகிய அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு சார்ந்த பல பிரச்னைகளுக்குக் காரணம். பல்வேறு காரணங்களால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.
  • 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 960 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பட்டினி நிலையைக் கட்டுப்படுத்தவும், முற்றிலும் போக்குவதற்கான நிலையான தீா்வு காணவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
  • பட்டினியால் வாடுவோரை நினைவுகூரும் வகையிலும், அந்த நிலையை ஒழிக்கவும் ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி உலக பட்டினி விழிப்புணா்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஆனால், அந்த நாளே இருக்கக் கூடாது என்ற வகையில், பட்டினி இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொரு நாடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பசியால் அவதிக்குள்ளாகும் கணிசமான மனித உயிர்களைக் காக்க முடியும்.
  • அரசு மட்டுமின்றி உணவகங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீதமாகும், வீணாக்கப்படும் உணவுகளை குப்பைக்கு அனுப்பாமல், அவற்றை உணவுக்காக வாடுவோருக்கு வழங்க சம்பந்தப்பட்டவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அதுபோல் ஒவ்வொரு தனி நபரும் முடிந்தவரை கண்ணுக்குத் தெரிந்து, உணவின்றி வாடுவோருக்கு உணவு வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பசியைப் போக்குவதில் தனி மனிதனின் பங்கும் அவசியம்.
  • (இன்று உலக பட்டினி விழிப்புணா்வு தினம்)

நன்றி: தினமணி (28-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories