TNPSC Thervupettagam

பண மதிப்பிழப்பு முடிவு: ஒரு பார்வை

May 29 , 2023 594 days 336 0
  • உயர் செலாவணிகளின் மதிப்பிழப்பிற்குப் பிறகு அறிமுகமானதுதான் 2,000 ரூபாய் நோட்டு. கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திரமோடி தோன்றி இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகம் செய்யப்போவதாகவும் அறிவித்தார். அதன்படியே ரூ. 2,000 நோட்டு புழக்கத்திற்கு வந்தது.
  • தொடக்கத்தில் எல்லா இடங்களிலும் 2,000 ரூபாய் நோட்டு காணப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. வங்கிகளிலும், தானியங்கி இயந்திரங்களிலும்கூட 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது பலராலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
  • 2019, 2020 ஆகிய இரு ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை என்று 2021-ஆம் ஆண்டில் அப்போது நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக் தாகுர் அறிவித்தார். இதனால் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்திருந்தது. தற்போது 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் புழக்கத்தில் இருந்தன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். அதனை அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் ஆகும் என்பதால், அப்போது 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால், 50 நாள்களுக்குள் அச்சிட்டு விடலாம் என்ற கணிப்பில் அவை அச்சிடப்பட்டன.
  • 2017 மார்ச்சில் இருந்து அடுத்த வங்கி ஆண்டு வரை நாட்டின் பொருளாதாரத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 50.2 சதவீதமாக இருந்தது. 2018 மார்ச் 30-இல் இருந்து வங்கி நிறைவு ஆண்டு வரை 336 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. ஆக, அறிமுகப்படுத்தப்பட்ட இரு ஆண்டுகளிலேயே 2,000 ரூபாய் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கவில்லை.
  • ஆக, 2020 மார்ச்சில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. 2021 பிப்ரவரியில் 249 கோடி மதிப்பிலான 2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. 2022 மார்ச் முதல் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 13.8 சதவீதமாக சரிந்து விட்டது. அப்படிப் பார்க்கையில் 31.05 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு 2019 பண மதிப்பிழப்பிற்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதே தவிர, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்து.
  • இதற்கிடையில், 2022 டிசம்பரில் 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரேயடியாக திரும்பப் பெறக்கூடாது; படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ராஜ்யசபாவில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் மாதம் முதல் திரும்பப் பெறப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ளது.
  • வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து தங்கள் கணக்கில் வரவு வைக்கலாம் என்றும், தினமும் 20,000 ரூபாய் வரை வங்கியில் மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், அறிமுகமான 2,000 ரூபாய் நோட்டு ஆறரை ஆண்டு காலத்தில் விடை பெற்றிருக்கிறது.
  • 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் நானோ சிப் இருப்பதாகவும், எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து விடலாம் என்றும் வதந்திகள் பரவின. இந்த வதந்திக்கு ரிசர்வ் வங்கியே முற்றுப்புள்ளி வைத்தது. 2,000 ரூபாய் நோட்டில் எந்த நானோ சிப்பும் இல்லை என்றும், அது சாதாரண ரூபாய் நோட்டுதான் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்ததற்குப் பின்னர், 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த ஐயம் முடிவுக்கு வந்தது.
  • பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும், பிற மதிப்பு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக, 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போதைய நிலையில் செல்லும் என்பது உறுதியாகிறது.
  • தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள் வெறும் 10.8 சதவீதம்தான். மேலும் பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியின் தூய்மை நோட்டு கொள்கையின்படி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
  • முந்தைய பண மதிப்பிழப்பு நடவடிக்கை போலல்லாமல் இம்முறை திட்டமிட்டு மக்களுக்கு எவ்விதமான பிரச்னையும் ஏற்பட்டு விடாமல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். அப்படியானால், 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு உறுதியாக செல்லாதா என்ற கேள்வி எழுகிறது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், செப்டம்பர் இறுதிக்கும் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிவிடுவதுதான் நல்லது.
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர், பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி மக்களைப் பயணிக்குமாறு அறிவுறுத்தினார். அதாவது, டெபிட் கார்டு, டிஜிட்டல் வாலட் போன்ற பண பரிவர்த்தனை வழிகளைப் பின்பற்றுமாறு கூறினார்.
  • ஆனால், தங்களிடமிருந்த 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு நடையாய் நடந்தும், தங்கள் வேலைகளை விட்டு விட்டு பணத்தை எடுப்பதற்கு மணிக்கணக்காக, நாள்கணக்காக வங்கி வாயிலிலும், ஏடிஎம் மைய வாயிலிலும் நீண்ட வரிசையில் காத்;திருந்தும் மக்கள் நொந்துவிட்டனர். ஏழை எளிய மக்கள் முதல் அனைவரும் சிரமங்களுக்குள்ளானதை எவ்வாறு மறக்க முடியும்?
  • பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8- ஆம் தேதியை எதிர்க்கட்சிகள் கறுப்பு தினமாக அறிவித்து, மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்தின; தெருக்களில் நாடகம் நடத்தின. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட முடியாது. அதே சமயம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்பு பண பரிவர்த்தனை பெரும்பாலும் தடுக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.
  • நாணய பரிமாற்ற விதிகள், இந்திய பொருளதார மாற்றத்தால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் இவை குறித்து ரிசர்வ் வங்கி தெளிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். கறுப்புப் பணத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு இந்த பண மதிப்பிழப்பு ஒரு காரணம் என்று கருதப்பட்டாலும் கள்ள நோட்டுக்களை எதிர்த்தலும், சட்ட விரோத பணப் பதுக்கலைத் தடுத்தலும் இதன் முக்கிய அம்சங்களாகவே பார்க்கப்படுகிறது. கள்ளநோட்டு என்பது இந்திய நாணயத்தின் நேர்மைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
  • பொருளாதாரத்தை முறைப்படுத்துவதிலும், வரிவருவாயை அதிகப்படுத்துவதிலும் இருக்கின்ற அக்கறை, ஒருவகையில் நுகர்வு முறைகளை தற்காலிகமாக பாதிக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளைப் பெரிதும் நம்பியிருக்கும் துறைகளில் ஒரு பெருத்த அடி விழத்தான் செய்கிறது.
  • இவை ஆரம்ப காலத்தில் இடையூறுகளை ஏற்படுத்தினாலும், பொருளாதாரத்திற்கான நீண்ட கால பயணத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதை நாம் மறந்து விட முடியாது.
  • இத்தகைய நடவடிக்கைகளின் வெற்றி எவ்வாறு சாத்தியமாகும்? திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதாலும் பொது விழிப்புணர்வை உருவாக்குவதாலும், எண்ம (டிஜிட்டல்) முறைகளை ஏற்றுக் கொள்வதாலும்தான் சாத்தியப்படும்.
  • சர்வதேச நாணய அமைப்பில், டாலரின் முக்கியப் பங்கை வலியுறுத்தும் நாணய கொள்கையின் அடிப்படையில்தான் இன்றைய உலக பொருளாதார மதிப்பீட்டில் டாலரின் பங்கு இன்றியமையாத ஒன்றாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போதும், அதற்குப் பின்னரும் டாலரின் மதிப்பு அதே நிலையில்தான் தொடர்ந்தது. அது தனது மதிப்பை எந்தக் கட்டத்திலும் இழக்கவில்லை.
  • இதுவே உலக பொருளாதார குறிக்கோளான விலை உறுதிப்பாட்டை அடையும் இன்றியமையாத தன்மையாகும். ஆகவே, இந்திய பணம் டாலர் மதிப்போடு உயர்வதற்கான கொள்கைகளை வகுத்திட வேண்டும். தாய்லாந்து நாட்டின் பண மதிப்பு, இந்திய பணத்தை விட இரண்டரை மடங்கு உயர்வு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (29 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories