TNPSC Thervupettagam

பண மதிப்புநீக்கக் கொள்கை

November 19 , 2021 981 days 511 0
  • இந்தியாவில் பணமதிப்பு நீக்கக் கொள்கை அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்தன.
  • இந்தக் கொள்கை இந்தியாவை ‘ரொக்கமில்லா எண்ணியல் பொருளாதார’மாக (Cashless Digital Economy) மாற்றியது என ஆளும் ஒன்றிய அரசு பெருமைகொள்ளும் அதே சமயம், அது மிகப் பெரிய பொருளாதாரச் சீர்கேட்டில் இந்தியாவைத் தள்ளியது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
  • இந்தக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளப் பணத்தை அழிப்பதும், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவதும்தான் நோக்கமாக இருந்தது.
  • உலக அளவில் வரலாற்றுரீதியாக இதுவரை பணமதிப்பு நீக்கக் கொள்கை வெற்றி பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
  • ஆனால், அதைச் சோதனைசெய்யும் நாடுகளின் தோல்விகளுக்கும் எதிர்விளைவுகளுக்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்தக் கொள்கையின் சாராம்சத்தைப் பொருளாதாரரீதியில் அறிந்துகொள்ள முதலில் நாம் கறுப்புப் பணம் குறித்தும், இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலைக் குறிப்புக்குப் (Balance Sheet) பின்னால் உள்ள எளிய அர்த்தங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • கறுப்புப் பணத்தின் மிக எளிமையான அகராதி வரையறை ‘சட்டவிரோதமாகப் பெறப்பட்ட அல்லது வரி நோக்கங்களுக்காக அறிவிக்கப்படாத வருமானம்’ என்பதாகும்.
  • இது இரண்டு வேறுபட்ட கூறுகளைக் கொண்டுள்ளது: முதலாவது, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் (உதாரணமாக, போதைப் பொருள் விற்பனை) பெறப்பட்ட வருமானம், அதை வெளிப்படையாக வரி நோக்கங்களுக்காக அறிவிக்க முடியாது.
  • இரண்டாவது, சட்டபூர்வமாக (உதாரணமாக நகை விற்பனை மூலம்) பெறப்பட்ட வருமானம்; ஆனால், வேண்டுமென்றே வரிசெலுத்தாமல் மறைக்கப்பட்டது.
  • இதில் முதலாவது வகையைக் கையாள்வதற்கான சிறந்த வழி, கடுமையான தண்டனைகளும் சட்ட அமலாக்கமும்தான். அதே சமயம், இரண்டாவதை வரி விகிதங்களை மாற்றியமைப்பதன் மூலம் திறம்பட மேம்படுத்த முடியும்.

ஒரு நெறிமுறைக் கேள்வி

  • இந்தியாவில் பணம் அச்சடிக்கும் அதிகாரத்தை ரிசர்வ் வங்கி மட்டுமே வைத்துள்ளது. அப்படி அச்சடித்துப் புழக்கத்தில் வெளியிடும் பணம் அதன் இருப்புநிலைக் குறிப்பில் கடன் பொறுப்பு (liability) பக்கத்தில் இருக்கும்,
  • அதற்கு ஈடான சொத்துக்களாக (asset) தங்கம் போன்ற அரிய உலோகங்களும் வெளிநாட்டுப் பணம் முதலிய சொத்துகளும் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கக் கொள்கையின் முக்கிய நோக்கம், கறுப்புப் பணம் மீண்டும் வங்கிகளுக்கு வரவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் கடன் பொறுப்பு குறையும்.
  • எனவே, அதற்கு ஈடான பணத்தை மீண்டும் அச்சடிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கலாம் என்பதுதான். இது நெறிமுறை அடிப்படையில் தவறானது என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் சிறப்பாக விளக்கலாம்.
  • பணம் மட்டுமே சொத்தாக இருக்கும் தூய ரொக்கப் பொருளாதாரத்தில் ஏ, பி, சி, டி ஆகிய நான்கு நபர்களைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்தப் பொருளாதாரத்தில், ஒரு சட்டவிரோதச் செயலைச் செய்வதன் மூலம் ஏ, 500 யூனிட் பணத்துக்கு இணையான செல்வத்தைக் குவித்துள்ளார்.
  • அதே சமயம் பி, சட்டபூர்வ நடவடிக்கையின் மூலம் 500 யூனிட் பணத்துக்கு இணையான சொத்து குவித்துள்ளார்; அதில் அவர் 200 யூனிட்களை மட்டுமே வரி நோக்கங்களுக்காக அறிவிக்கிறார்.
  • சி, 500 யூனிட் பணத்தைச் சம்பாதித்து முழுத் தொகையையும் வரி நோக்கங்களுக்காக அறிவிக்கிறார், டி-க்கு வருமானமே இல்லை என வைத்துக்கொள்வோம்.
  • எனவே, அந்தக் காலகட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் பணம் 1,500 யூனிட்கள். அதில் 800 யூனிட் கறுப்புப் பணமாகவும் மீதமுள்ள 700 யூனிட்கள் வருமானமாகவும் அறிவிக்கப்பட்டன.
  • இந்தப் பொருளாதாரத்தில், புழக்கத்தில் உள்ள பணத்திலிருந்து அறிவிக்கப்பட்ட வருமானத்தைக் கழிப்பதன் மூலம் அமைப்பில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவை எளிதாகக் கண்டறியலாம்.
  • இந்த எடுத்துக்காட்டில் புழக்கத்தில் உள்ள 1,500 யூனிட் பணம் முழுவதையும் ஒரு கொள்கை மூலம் ரத்துசெய்தால், அறிவிக்கப்பட்ட 700 யூனிட் வருமானம் மீண்டும் புதிய பணத்தால் மாற்றப்படும். மீதமுள்ள 800 யூனிட் கறுப்புப் பணத்துக்கு இணையான சொத்துகள் ரிசர்வ் வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் இருப்பதால், இது ஒரு திடீர் ஆதாயமாகும்.
  • இதை மீண்டும் அச்சடிப்பதன் மூலம் சில நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் குறிப்பாக டி போன்ற வருமானமற்ற ஏழைகளுக்கு.

என்றுமே பயன்படாது

  • இந்தத் திட்டம் ஒரு முக்கியமான நெறிமுறைக் கேள்வியை எழுப்புகிறது. இந்த 800 யூனிட் கறுப்புப் பணத்தில் 500 யூனிட்கள் சட்டவிரோதச் செயல்பாட்டிலிருந்து வந்ததால் அதை மீண்டும் அச்சடிப்பதன் மூலம் அரசாங்கமே இந்த சட்டவிரோதச் செயலைச் செய்தது போலாகிறது. இந்தப் பண நஷ்டத்தைத் தவிர ஏ-வின் சட்டவிரோதச் செயலுக்கான தண்டனை எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோக மீதமுள்ள 300 யூனிட்கள் சட்டபூர்வமான வருமானம், அதற்குரிய வரியை எடுக்கும் உரிமை மட்டும்தான் அரசாங்கத்துக்கு உண்டு, முழுவதையும் எடுப்பது நூறு சதவிகிதம் வரி விதிப்பு போன்றது.
  • இந்த அதிகாரத்தை எந்தச் சட்டமும் வழங்கவில்லை என்றால், இது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வெகுவாகச் சீர்குலைக்கும்.
  • இந்த எடுத்துக்காட்டைச் சற்று மேம்படுத்தி, அடுத்த காலகட்டத்துக்கு எடுத்துச்செல்வோம். அதில் ஏ, சட்டவிரோத நடவடிக்கையைத் தொடர்வார்.
  • மேலும், தனது கடந்தகால இழப்பை மீட்டெடுக்க அதிகக் கட்டணம் வசூலிப்பார்; கிடைக்கும் வருமானத்தைப் பணமாக வைத்திருக்காமல் மற்ற சொத்துக்களாக மாற்றுவார். அதேபோல பி-யும் அறிவிக்கப்படாத வருமானத்தை மற்ற சொத்துக்களாக மாற்றுவார்.
  • எனவே, பணமதிப்பு நீக்கக் கொள்கை ஒருமுறை மட்டுமே செயல்படும் செயலாக மாறும். இதில் உண்மையான குடிமகன் சி மிகவும் பாதிக்கபடுவார்.
  • ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட வருமானத்தை முதலீடுசெய்து, குறிப்பிட்ட காலத்துக்குள் சட்ட வரம்புகளுக்குள் சேர்த்த சொத்துகளைப் பண வடிவில் சேமிப்பாக வைத்திருந்தால், இந்தக் கொள்கை அந்தப் பணத்தை மாற்ற வங்கிகளுக்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தும்.
  • இந்த நெறிமுறைக் கேள்வியைத் தாண்டி, மற்றுமொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ரிசர்வ் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் நடைமுறைகளின்படி, தங்கம் போன்ற அரிய உலோகங்களும் வெளிநாட்டுப் பணம் முதலிய சொத்துக்களும் சர்வதேச விலை மாற்றங்களுக்கு உட்பட்டவை.
  • ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் இந்தச் சொத்துக்களின் மதிப்பீடு அளவிடப்படும்.
  • இதன் மூலம் கணக்கிடப்படும் கடன் பொறுப்புகளுக்கு இணையான ஆதாயங்கள்/ இழப்புகள் வருமானக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல், நாணயம் மற்றும் தங்க மறுமதிப்பீட்டுக் கணக்கில் (Currency and Gold Revaluation Account) பதிவுசெய்யப்படும்.
  • ஆகையால், பணமதிப்பு நீக்கக் கொள்கை காரணமாகத் திரும்பி வராத கறுப்புப் பணம் திடீர் ஆதாயம் அல்ல. அது நாணயம் மற்றும் தங்க மறுமதிப்பீட்டுக் கணக்கில் இருப்பாக வைக்கப்பட்டு, சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்பச் சரிசெய்யப்படும்.
  • எனவே, இதை லாபமாக எண்ணி மீண்டும் பணமாக அச்சடிக்க முடியாது. இந்த நடைமுறை காரணமாக, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான கருவியாகப் பணமதிப்பு நீக்கக் கொள்கை என்றுமே பயன்படாது.

அரசாங்கத்தின் அடையாளம்

  • அரசு சில சட்டத் திருத்தங்களால் அந்தப் பணத்தை லாபமாகக் கருதி அச்சடித்தாலும், இங்கே பதில் தேவைப்படும் இரண்டு மிக முக்கியமான கேள்விகள்: முதலாவதாக, ஒரு அரசாங்கம் சட்டவிரோதச் செயல்பாட்டைத் தடுப்பது முக்கியமா அல்லது அதிலிருந்து வரும் வருமானத்தை வேறுவிதமாக வசூலித்துப் பயன்படுத்த நினைப்பது நெறியா? அடுத்து, சட்டபூர்வமான வருமானம் முழுவதையும் எடுக்கும் அதிகாரத்தை ஒரு அரசாங்கம் வைத்திருந்தால், அதை நம்பி மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவார்களா?
  • இதுபோன்ற அனைவரையும் பாதிக்கும் மிகப் பெரிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும்போது அவற்றின் விளைவுகளை ஒரே ஒரு கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காமல் சில நெறிமுறைக் கேள்விகளுக்கான பதில்களையும் தெரிந்துகொண்டு செயல்படுத்துவது ஒரு சிறந்த அரசாங்கத்தின் அடையாளம்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories