TNPSC Thervupettagam

பணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது

January 2 , 2020 1663 days 1259 0
  • சமச்சீரற்ற பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒருசேர இந்தியாவில் இருப்பது பெரிய சங்கடம்தான். ஏனென்றால், எதற்கான நடவடிக்கையை எடுப்பது என்பதில் கொள்கை வகுப்பவர்களுக்குத் தயக்கம் ஏற்படக்கூடும். ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 5%-க்கும் குறைவாக இருக்கும் நிலையிலும், விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது.
  • குறிப்பாக, காய்கறிகள் உள்ளிட்டவற்றுக்கான உணவுப் பணவீக்க விகிதம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10% ஆக, அதாவது இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை, உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியையும் பின்னோக்கி இழுக்க வல்லது என்பதால், மந்தநிலையைப் போக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒரு வாரத்துக்கு முன்னதாக அறிவுறுத்தியிருக்கிறது. ஆலைகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான தேவை குறைந்திருப்பதால், உற்பத்தித் துறையில் வளர்ச்சி வீதம் மேலும் சரிந்திருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், “பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பது தற்காலிகமானதுதான், விரைவில் மாறிவிடும்” என்று கூறினாலும், “பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும், சரியும் வணிகச் சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வங்கி வட்டி வீதத்தைக் குறைத்துக்கொண்டே வந்த ரிசர்வ் வங்கி, மேற்கொண்டு வட்டி வீதத்தைக் குறைக்கவில்லை. வங்கிகள் வைப்புத்தொகைக்குத் தரும் வட்டியைக் குறைத்தால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ரொக்கச் சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்ய மாட்டார்கள். பிறகு, வங்கிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அது மேலும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • விலைவாசி உயர்வு குறித்து அதிகம் கவலைப்படாமல், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் உண்மை உண்டு. சமீபத்தில் கொடுக்கப்பட்ட முடுக்கத்தின் விளைவாக, வங்கிகள் தந்த கடனைப் பயன்படுத்தி நுகர்வோர்கள் மோட்டார் வாகனங்கள், மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற பொருட்களை வாங்கக் காட்டிய ஆர்வம் சிறு பொருளாதார உத்வேகத்துக்கு வித்திட்டது இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

பணவியல் கொள்கை

  • ஒரே சமயத்தில் பணவியல் கொள்கையையும் நிதிக் கொள்கையையும் வளர்ச்சிக்குக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • நுகர்வும் அதிகரிக்க வேண்டும், நிதிப் பற்றாக்குறையும் வரம்பில்லாமல் உயர்ந்துவிடக் கூடாது. அரசு முக்கியமாக எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்றால், இப்போதைக்குப் பொருட்களுக்கான கேட்பு அதிகமாவதற்குத்தான். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகவும் ஏற்கெனவே உற்பத்தியானவை சந்தைகளில் விற்கப்படவும் இது மிகவும் அவசியம். இது மட்டுமே வேலைவாய்ப்பையும் வளர்ச்சியையும் உயர்த்த உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories