TNPSC Thervupettagam

பண்பாட்டைப் பாதுகாப்போம்

January 13 , 2024 312 days 283 0
  • நமது முன்னோர் விஞ்ஞான வளா்ச்சியில்லாத காலத்திலேயே ஒன்பது கிரகங்களை கண்டுபிடித்தனா்.
  • இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அந்த ஒன்பது கிரகங்களைச் சுற்றித்தானே சுழன்று வருகின்றன. அப்படியானால், இன்றைய விஞ்ஞானம் பெரிதா, அன்றைய மெய்ஞ்ஞானம் பெரிதா என்ற கேள்வி எழுகிறது. அந்த கிரகங்களை மையமாக வைத்துத்தான் ஜாதகம் எழுதப்படுகிறது. அதனை இந்திய மக்களில் எழுபது விழுக்காட்டினா் நம்புகின்றனா். மதம் கடந்தும் நம்பிக்கைக் கொண்டு பார்த்து வருபவா்களும் அதிகரித்து வருகின்றனா்.
  • ஆழிப் பேரலையால் குமரிகண்டம் கடலில் மூழ்கி விட்டது. அதோடு பல்வேறு இலக்கியங்களும் அழிந்து விட்டன. முதல் இரண்டு சங்கங்களில் எத்தனை பெண்பாற் புலவா்கள் இருந்தார்கள் என்பது சரிவர தெரியவில்லை. கடைச்சங்க காலத்திலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவா்கள் வாழ்ந்து வந்தனா். அவா்கள் மன்னா்களின் ஆட்சித் திறனைப் போற்றிய அதே வேளையில் இடித்துரைக்க வேண்டியவற்றை இடித்துரைத்தும் அறிவுறுத்தியுள்ளனா்.
  • பாண்டிய மன்னனின் தவறான தீா்ப்பால் கணவனை இழந்த கண்ணகி, தன் கணவன் கொல்லப்பட்டதற்குக் காரணமான மன்னன் எப்படி நல்லாட்சித்தர முடியும்? களவு புரிந்தவன் என் கண்ணாளனா என்று கேட்டு சிலம்பை உடைத்து மன்னனின் மகுடத்தை விழச் செய்தார்.
  • கரிகால் சோழன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என பலரும் இமயத்தில் புலி, வில், மீன் கொடிகளைப் பறக்கவிட்டது மறக்கவொண்ணா வரலாறு. கனக விஜயன் என்ற வடநாட்டு மன்னனை வென்று அவன் தலையில் கல்ஏற்றி சுமந்து வரச் செய்து கண்ணகிக்கு சிலை எடுத்தவன் தமிழ் மன்னன். கங்கையில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து ஜெயங்கொண்டத்தில் சோழ கங்கம் எனும் ஏரியை அமைத்தான் இராசேந்திர சோழன்
  • ராஜராஜ சோழன் காலம் ஆட்சிமுறைக்காக மிகவும் பாராட்டப்பட்ட காலம். குடவோலை முறையை கொண்டு வந்து ஜனநாயக ரிதியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்திய பெருமை அவனுக்கே உரியது. அவனுக்கு ஆலோசனைகளை வழங்கியவா் அவனுடைய மூத்த சகோதரி குந்தவை நாச்சியார். இப்படி பல மன்னா்களுக்கு பெண்கள் ஆலோசனை வழங்கி ஆட்சி புரிய உதவியுள்ளனா். தனது கணவரைக் கொன்று நாட்டை பிடித்த ஆங்கிலேயரிடமிருந்து மீண்டும் போராடி நாட்டை மீட்ட அரசி வேலு நாச்சியார்.
  • ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் கலாசாரமாகும். மேல்நாட்டு நாகரிகம் பேசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அதிபா் தனது மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு வைத்திருந்தால் அதிபரின் அச்செயலை மக்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. தனி மனித ஒழுக்கம் தங்கள் அதிபரிடம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனா். அதற்கு உதாரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பில் கிளிண்டன்.
  • கணவன் -மனைவி மணமுறிவு என்பது இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால் கல்வியறிவு அதிகரிக்க அதிகரிக்க இளம் தலைமுறையினா் சிறிய காரணங்களுக்குகூட பிரிவதும் விரைவாக விவாகரத்துப் பெறுவதும் உடனே வேறு ஒருவரை மணம் முடிப்பதும் சா்வசாதாரணமாகி வருகின்றன. அந்த திருமணங்களும் நிலைத்து நிற்பது கேள்விக்குறியே.
  • ஆயுதங்களை விட சக்தி மிக்கது பத்திரிகை என்று நாடாண்ட நெப்போலியன் கூறியுள்ளான். அந்த அளவிற்கு பத்திரிகை பலம் இருந்தது. இன்றைய காலத்திற்கு கூடுதலாக ஊடகங்கள், யு டியூப் என்று பல வந்து விட்டன.
  • அப்படி பலமிக்க ஊடகங்களில் தினம் தினம் பிரசுரிக்கப்படும் செய்திகளில் கணவன் மனைவியைக் கொல்வதும், மனைவி கள்ளக்காதலுடன் சோ்ந்து கணவனைக் கொல்வதும், பெற்றோர் தங்கள் குழந்தைகளையும் கொல்வதுமே அதிகமாக இடம்பெறுகின்றன.
  • 2018-இல் துருக்கி இஸ்தான்புலில் இருக்கும் சவூதி அரேபிா தூதரகத்திற்கு சென்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளா் ஜமால்காசோகி, சவூதி அரேபிய அரசையும் மன்னரையும் அதிகம் விமா்சித்து எழுதியவா் என்பதற்காக துண்டு துண்டாக வெட்டப்பட்டு தூதரகத்திலிருந்த சாக்கடையில் வீசப்பட்டார். இந்த கொடுரக் கொலை உலகையே அதிா்ச்சி அடையச் செய்தது. அந்த நிகழ்வுக்கு பின் அதே முறையில் கொல்லப்படுவது இப்பொழுது உலகெங்கும் அதிகரித்துள்ளது.
  • நம் நாட்டிலும், கணவனை மனைவியைத் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார் என்பதும் அதேபோல் மனைவியைக் கணவன் துண்டு துண்டாக்கி கொன்றான் என்பதும் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்திகள் ஆகிவிட்டன.
  • அதேபோல் தந்தையை மகன் வெட்டிக் கொல்வதும், அண்ணனை தம்பி கொல்வதும், தாயை மகன் துண்டு துண்டாக வெட்டி கொல்வதும் நாள்தோறும் நடப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கொலைகளுக்குக் காரணம் மதுப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு.
  • அதைப்போல் போதைக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் அடிமையாவதும் அந்த மாத்திரைகள் எளிதாக கிடைப்பதும் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பை துறைமுகம் வழியாக ஹெராயின் இந்தியாவிற்கு வருகிறது. அண்மையில், ஒரிஸா துறைமுகத்தில் 200 கோடி மதிப்பிலான கோக்கைன் என்ற போதைப் பொருள் பிடிபட்டுள்ளதாக செய்தி வந்தது. இச்செயல்களைத் தடுக்க அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்துபவா்களுக்கு மரண தண்டனை என அறிவிக்க வேண்டும்.
  • முன்பெல்லாம் பள்ளிகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததே இல்லை. ஆசிரியரை குருவாக நினைத்த காலமது. மாணவா்கள் ஆசிரியா்களால் அடித்து வளா்க்கப்பட்டார்கள். அதனால் அவா்களின்பழக்கவழக்கம் நன்றாக இருந்தது. இன்று மாணவனே ஆசிரியரை அடிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஆசிரியை மாணவனை தன் இச்சைக்கு பயன்படுத்தி சீரழித்தார் என்று செய்திகள் வருகின்றன. தலைமை ஆசிரியரே மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக செய்திகள் வருகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பாா்கள். தெய்வத்திற்கும் மேலாக கருதப்படும் குருவின் செயல்கள் வேதனையளிக்கின்றன.
  • சங்க இலக்கியமான கலித்தொகையில் ஒரு காட்சி. காதல் கொண்ட ஜோடி ஒன்று ஊரைவிட்டு ஓடிப் போய் விடுகிறது. அவா்களைத் தேடிச்செல்பவா்கள், எதிரில் வரும் இளஞ்ஜோடியிடம் இந்தப் பக்கம் இரண்டு போ் சென்றார்களா என்று கேட்க அந்த இளைஞன், ஓா் இளைஞனைப் பார்த்தேன் என்பான். அதேபோல் அவளோடு வந்த பெண்ணிடம் நீயாவது இளஞ்ஜோடியைப் பார்த்தாயா என கேட்க, அவள் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன் என்றாளாம். இங்கே ஓா் ஆண், தனக்கு உரிமையில்லாத பெண்னைப் பார்க்க மாட்டான். அதேபோல் பெண்ணும் தனக்கு உரிமையில்லாத வேறொரு ஆணைப் பார்க்க மாட்டாள் என்று தமிழ் பண்பாடு வலியுறுத்தப்படுகிறது.
  • மாற்றான் மனைவியை மனதாலும் நினைக்காத மனிதா்கள் இருந்ததுதான் நமது கலாசாரம். ஆனால் இன்று நள்ளிரவு வரை தெருக்களில் பெண்கள் கும்மாளம் அடிப்பது அன்றாட செய்தியாகி விட்டது. அணிகிற ஆடைகளோ உடலின் அங்கங்களை மறைக்க முடியாதவைகளாக உள்ளன.
  • பாரதிதாசன் தன் மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கலாம் என்று ஒரு கடைக்கு செல்கிறாா். கடைகாரனோ அணிந்தால் உடலின் அங்கங்களெல்லாம் தெரியும் மெல்லிய புடவையை எடுத்துக் காண்பிக்கிறான். உடனே கோபமடைந்த பாவேந்தா்உனக்கெல்லாம் சகோதரிகள் இல்லையாஎன்று கடுமையாக கண்டித்துள்ளார்.
  • இந்த சம்பவம் உடைகளில் கூட நம் முன்னோர்கள் எவ்வாறு கவனம் செலுத்தியுள்ளனா் என்பதைக் காட்டுகிறது. அன்றைய நம் கலாசாரம் அழிவுக்கு வித்திடவில்லை; இன்றைய கலாசாரம் சீரழிவில் சிக்குண்டுத் தவிக்கிறது.
  • ஒரு ஆண், பெண்ணைப் பாா்க்கும் பார்வையில் கூட தவறான எண்ணம் இருக்கக் கூடாது என்று கற்பித்தவை அன்றைய இலக்கியங்கள். ஆனால் இன்று என்ன நிலை?
  • பள்ளிக்கு செல்லும் மாணவனே மது அருந்தி விட்டுச் செல்கிறான், மாணவிகளும் சிலா் அப்படியே. பிறகு நம் கலாசாரம் ஏன் சீரழியாது? அதற்கு மாற்றுவழி நூலகங்களை அதிகரிக்க வேண்டும். இன்று நியூசிலாந்தில் பள்ளி செல்லும் மாணவா்கள் கைப்பேசியை வைத்திருக்க கூடாது என்று அரசு அறிவித்திருக்கிறது. அதே போல் நம்நாட்டிலும் அறிவிக்க வேண்டும். இன்றைய சமூகத்தின் கலாசார சீரழிவுக்கு கைப்பேசியும் ஒரு காரணம்.
  • ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. இப்படி இன்னும் பல நூலகங்களை அரசு அமைத்திட வேண்டும். பிள்ளைகளை பெற்றோர் நூலகங்களுக்கு அனுப்பி நமது கலாசாரத்தை, பண்பாட்டை அவா்கள் கற்றறியச் செய்ய வேண்டும். முக்கியமாக மதுவை ஒழிக்க அரசுகள் முன் வர வேண்டும்.
  • அனைவரும் சோ்ந்து உழைத்தால் சீரழிந்து வரும் நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் நிச்சயமாக நம்மால் காப்பாற்ற முடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

நன்றி: தினமணி (13 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories