TNPSC Thervupettagam

பதக்கம் வென்றவர்களுக்கு இதுதான் பரிசா

May 28 , 2023 547 days 343 0
  • விளையாட்டு மைதானங்களின் வெற்றி மேடைகளில் கழுத்தில் பதக்கங்களுடன் பெருமிதத்தோடு நின்றவர்களைத் தேசத்தின் தலைநகர வீதியில் நீதிகேட்டு நிற்கவைத்திருக்கிறோம். சர்வதேச அரங்கில் நம் நாட்டுப் பெருமையை நிலைநாட்டியவர்களைத் தங்கள் சொந்த நாட்டில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகப் போராட வைத்திருக்கிறோம். “அவர்கள் எங்களை இவ்வளவு வேதனைக்கு ஆளாக்கும்போது இந்த நாட்டுக்காக ஒருவர்கூடப் பதக்கங்களை வென்றுதரக் கூடாது என்று தோன்றுகிறது” எனக் கண்ணீர்விட வைத்திருக்கிறோம். இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பிரதமர் திறந்துவைக்கும் வேளையில் தங்களுக்கு மறுக்கப்பட்டுவரும் நீதிக்காக வெயிலிலும் கட்டாந்தரையிலும் அவர்களை வாடச்செய்துகொண்டிருக்கிறோம்.
  • ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத்தந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் கொடுமைக்கு நீதிகேட்டு டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவருகின்றனர். ஏப்ரல் 23 அன்று தொடங்கிய போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்ததைத் தொடர்ந்து மே 23 அன்று மெழுகு வர்த்தி ஏற்றித் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவாக நின்றனர்.

அவர்கள் தனி அல்ல

  • தன் பத்து மாதக் குழந்தையைச் சுமந்தபடி கையில் மூவண்ணக் கொடியைப் பிடித்திருந்த இளம்பெண் ஒருவர், “மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஒரு மாதமாகத் தொலைக்காட்சிச் செய்தியிலும் நாளிதழ்களிலும் பார்த்துவருகிறேன். இவர்கள் இப்படித் தனியாகப் போராடக் கூடாது என்பதற்காகத்தான் என் மகனுடன் வந்திருக்கிறேன்” என்று ஊடகங்களிடம் தெரிவித்த காட்சி, மல்யுத்த வீராங்கனைகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவைக் காட்டுகிறது. ஆனால், வீராங்கனைகளின் புகார்களுக்கு அதிகாரபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  • மல்யுத்த வீராங்கனைகளின் இந்தப் போராட்டம் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. தேசியப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்காலும் பயிற்சியாளர்கள் சிலராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறி ஜனவரி 18 அன்று வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் தலைமையில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வீராங்கனைகள் போராடினர்.

கண்ணுக்குத் தெரியாத விசாரணை

  • இந்தப் புகார் குறித்து விசாரிக்க மேலிடப் பார்வையாளர் குழு அமைக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளிக்க மூன்று நாள்களிலேயே போராட்டம் கைவிடப்பட்டது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நான்கு வாரங்களில் முடிக்க வேண்டிய விசாரணையை அந்தக் குழு இரண்டு மாதங்களுக்கு மேல் நீட்டித்துத் தன் முடிவை ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது. விசாரணை முடிவு குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படாததும் பிரிஜ் பூஷண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததும் மல்யுத்த வீராங்கனைகளைக் கொதிப்படையச் செய்தது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண், பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், நாடாளுமன்ற உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் டெல்லி காவல் நிலையத்தில் தனித்தனியாகப் பாலியல் புகார் அளித்துள்ளனர். எழுவரில் ஒருவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் போக்ஸோ பிரிவின் கீழும் பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் தகவல் அறிக்கைக்கூடத் தாக்கல் செய்யப்படாத நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றம் தலையிட்டும்கூட பிரிஜ் பூஷண் கைது செய்யப்படவில்லை. மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் தொடர்ந்து அவர் நீடித்துவருவது அவரது அரசியல் செல்வாக்கைக் காட்டுவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், பிரிஜ் பூஷணோ வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது எனப் பிரச்சினையைத் திசைதிருப்ப முயன்றார். எதிர்க்கட்சிகளின் கைப்பாவைகளாக வீராங்கனைகள் செயல்படுவதாகச் சொன்னார்.

திசைமாற்றப்படும் போராட்டம்

  • வீராங்கனைகள் வெட்டவெளியில் போராடி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் தரையில் உறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், மடக்குக் கட்டில்களைக் கொண்டுவர முயன்றபோது காவலர்கள் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக வீராங்கனைகள் புகார் தெரிவித்தனர். அது தொடர்பான வீடியோ வெளியானபோதும் வீராங்கனைகளின் இந்தக் குற்றச்சாட்டை டெல்லி காவல் துறை மறுத்தது. சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் குற்றச்சாட்டிலேயே மத்திய அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் காவல் துறை மீதான குற்றச்சாட்டின் மீது மட்டும் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடுமா என்ன?
  • மேதா பட்கர், பிரியங்கா காந்தி போன்றோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தந்துவரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர்கூட இந்தப் பிரச்சினையில் வீராங்கனைகளின் பக்கம் நிற்கவில்லை. மாறாக, வெளியுறவுத் துறை மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சரான மீனாட்சி லேகி, “எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்திப்பது வீராங்கனைகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது” என்றார். சானியா மிர்சா, அபிநவ் பிந்த்ரா, நீரஜ் சோப்ரா உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்க, மக்களிடையே செல்வாக்கு பெற்ற பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் இது குறித்து வாயே திறக்கவில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவோ ஒரு படி மேலே போய், வீராங்கனைகளின் இந்தப் போராட்டம் தேசத்துக்கே அவமானம் என்று கருத்துச் சொன்னார்.
  • பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் பெண்கள் மட்டும்தான் போராட வேண்டும் என்பதல்ல; கட்சி, பாலினம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடு களையும் கடந்து நீதிக்காக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும். முதல் நாளில் இருந்தே வீராங்கனைகளுக்குத் துணை நிற்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இதைத்தான் உணர்த்துகிறார்.

இந்தியாவின் மகள்கள்

  • இந்தியப் பயிற்சியாளர்கள் மீது பாலியல் புகார் எழுவது இது முதல் முறையல்ல. இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மீது 2010 முதல் 2020 வரை 45 பாலியல் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2011 முதல் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் செயல்பட்டுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அதிகாரபூர்வ புகார்கள் மட்டுமே. இவற்றில் ஐவருக்கு ஊதிய நிறுத்தம், ஒருவர் பணியிடை நீக்கம், இருவரின் ஒப்பந்தம் ரத்து போன்றவையே அதிகபட்ச தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்துப் புகார்களும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. தேசிய அளவில் கவனம்பெற்ற வீராங்கனைகளுக்கே இந்த நிலைதான் என்பது இந்தியாவில் பெண்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள பாரபட்சத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.
  • நாட்டுக்காக வீராங்கனைகள் பதக்கம் வெல்லும்போதெல்லாம் அவர்களைத் தன் மகள்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் பிரதமர் இதில் மௌனம் காப்பது வேதனையானது என மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிட்டுள்ளனர். ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்பது பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான மத்திய அரசின் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேறு வழியின்றி பல ஆண்டு களாகத் தாங்கள் பொறுத்துக் கொண்டிருந்த பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு வீதியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளும் பெண்களே என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

நன்றி: தி இந்து (28 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories