TNPSC Thervupettagam

பதற்றத்தைத் தூண்டும் வேலைப்பளு

February 26 , 2025 6 hrs 0 min 8 0

பதற்றத்தைத் தூண்டும் வேலைப்பளு

  • குமாருக்கு வயது 28. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவரால், அண்மைக் காலமாகப் பணியில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. மனப் பதற்றம் இருப்பதாகச் சொன்னவர் இன்னும் சில பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

பிரச்சினையைக் கண்டறிதல்:

  • தனக்கு ஓர் இனம் புரியாத பயம், பதற்றம், கை கால்களில் நடுக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் சொன்னார். அதோடு இதயம் படபடவென்று அடிப்பது போலவும், தலைவலி, நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லைகள் இருப்பதாக உணர்வதாகவும் கவலையாக விவரித்தார். முன் எப்போதும் இல்லாத அளவு அவருக்குக் கவனக்குறைவு, தூக்கமின்மை பிரச்சினைகளும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
  • ஒருவர் தன்னுடைய பிரச்சினைகளைத் தானாக முன்வந்து விவரித்தபோதும், பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள அவருடைய இணையரோடு உரையாடி னேன். அப்போது அவர் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். இயல்பாகவே தன்னுடைய வேலைகளை மிகவும் சரியாகச் செய்ய வேண்டும் எனவும், தவறு நிகழ்ந்துவிடக் கூடாது எனவும் கருதக்கூடி யவர் குமார். வீட்டு, அலுவலக வேலைகளை ஓரளவு செய்து முடிக்கக்கூடியவர்.
  • தான் செய்யும் செயலில் தவறு நேர்ந்து விடக் கூடாது என்கிற பதற்றம் அவருக்கு எப்போதும் இருந்துள்ளது. ஆனால், அந்த லேசான பதற்றம் எந்த வகையிலும் அவருடைய அன்றாட வேலைகளையோ வாழ்க்கையையோ பெரிதாகப் பாதித்த தில்லை. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக அவருக்கு ஏற்படும் பதற்றமும் பரபரப்பும் அவரை இயல்பாக இருக்க விடாமல் செய்தி ருக்கிறது.
  • இதனால், அவ்வப்போது எரிச்சல் அடைவது, அனைத்து விஷயங்களுக்கும் கோபப்படுவது என இயல்பை மீறிய ஒருவராக இருந்துள்ளார். ஆனால், இதைத் தவிர முக்கியமான செய்தி ஒன்றை அவர் மனைவி பகிர்ந்தார். குமார் வீட்டில் இருந்த போதும் எப்போதும் அலுவலக வேலையைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிக்கிடந்துள்ளார். தனது வேலையில் அதிக நேரம் செலவிடும் போதும் தொடரும் வேலைப்பளு காரணமாகக் குறித்த நேரத்தில் வேலைகளைச் செய்து முடிக்க முடியாமல் திணறிவருவதால் குமார் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிரச்சினைக்கான அறிகுறி:

  • தனக்கு ஏற்படும் பதற்றத்தைத் தணிக்க, உணவு சாப்பிடுவதைக் குறைத்து, அதிகமாக காபி அருந்துவது, நொறுக்குத் தீனி சாப்பிடுவது, மது அருந்துவது, அதிக நேரம் திறன்பேசியைப் பயன்படுத்துவது, வெறுமனே ‘ஸ்கிரால்’ செய்வது போன்ற பழக்கங்களுக்கு அவர் அடிமையாகி இருந் தார். இவை மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.
  • குமாருக்கு இருப்பது ஒரு வகையான மனப்பதற்றம். இதனை ‘Generalised Anxiety Disorder (GAD)’ என்று மருத்துவரீதியாகக் குறிப்பிடுகிறோம். இந்தப் பாதிப்பின்போது அளவுகடந்த பதற்றம், கவலை, அச்சம், நடுக்கம், தசைப் பிடிப்பு, வியர்த்தல், லேசான தலைவலி, படபடப்பு, தலைச்சுற்றல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். தனக்கு அல்லது தன்னுடைய குடும்பத்தினருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படுமோ அல்லது வேறு ஏதாவது கெடுதல் நடந்துவிடுமோ என்கிற பதற்ற மனநிலையை ஒருவர் எதிர்கொள்வர்.
  • எந்தவொரு புறச்சூழ்நிலையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் பெரும்பாலான நேரம் இந்தப் பதற்ற மனநிலை ஒருவரைத் தாக்கும். அறிகுறிகள் அதிகரித்த உடனே அவரது இணையர் என்னிடம் அழைத்து வந்தார். குமாரின் பணிச்சூழல், குடும்பச்சூழல், அவருடைய குணாதிசயம், பொருளாதாரப் பின்னணியைப் போன்று பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பதற்றத்தைப் எப்படிக் கையாள வேண்டும் என்கிற ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குமார் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டுவருகிறார்.
  • குமாரைப் போல வேலைக்குச் செல்லும் பலரும் வேலைப்பளு காரணமாக இது போன்ற பதற்ற மனநிலையால் பாதிக்கப்படும் சூழலைச் சந்திக்க நேரிடலாம். அதை அவர் வெளிப்படையாகப் பிறரோடு பகிர முடியா மல் மனதுக்குள் வைத்திருக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள சில அறிகுறிகளின் மூலமே இப்பிரச்சினையைக் கண்டறிய முடியும்.
  • பதற்றத்தைத் தனிப்பதற்கான ஆலோ சனை, உடற்பயிற்சியில் கவனம், உணவு முறையில் மாற்றம், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்வது, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றால் ஒருவர் இதிலிருந்து நிச்சயமாக மீண்டுவர முடியும். குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories