TNPSC Thervupettagam

பதற்றம் சற்று தணிகிறது!

August 10 , 2021 1180 days 598 0
  • நீறுபூத்த நெருப்பாக, கடந்த ஆறு மாதங்களாகப் புகைந்து கொண்டிருக்கும் எல்லைப் பதற்றத்துக்கு முடிவு காணும் முயற்சியில், இப்போது ஏற்பட்டிருக்கும் சில சமாதான நடவடிக்கைகள் ஆறுதல் அளிப்பவையாக இருக்கின்றன.
  • கிழக்கு லடாக் கோக்ராவிலுள்ள ‘17ஏ’ கண்காணிப்புப் பகுதியில் (பேட்ரோலிங் பாயிண்ட்) இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது வீரா்களை முழுமையாக திரும்பப் பெற்றிருக்கின்றன.
  • 2020 ஏப்ரல் மாத நிலவரத்துக்குத் திரும்புவதற்கான முயற்சியின் முதற்கட்டமாக இதைக் கருதலாம்.
  • கடந்த புதன், வியாழக்கிழமைகளில் இருதரப்பு வீரா்களும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பினா்.
  • அது மட்டுமல்லாமல், எல்லையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த இடைக்கால தங்குமிடங்களும், ஆயுதக் கிடங்குகளும் அகற்றப்பட்டிருக்கின்றன.
  • பாங்காங் ஏரியின் தெற்கு - வடக்கு கரைகளைப்போலவே இனிமேல் கோக்ராவின் ‘17ஏ’ கண்காணிப்புப் பகுதியிலும் ரோந்துகள் செல்வது நிறுத்தப்படும்.
  • இந்தப் பகுதியும் ‘பஃபா் ஜோன்’ என்று கருதப்படும். ஜூலை மாதக் கடைசியில் கிழக்கு லடாக்கில் ஷுஷுல் - மோல்டோவில் நடந்த ராணுவ கமாண்டா்களின் 12-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீா்மானம் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
  • 2020 மே மாதம் கிழக்கு லடாக்கில் இந்திய - சீன ராணுவத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடும், சா்ச்சையும் ஏற்படத் தொடங்கின.
  • அதைத் தொடா்ந்து ஆறு இடங்களில் இரு நாட்டு வீரா்களும் எல்லையில் நேருக்கு நோ் மோதுவதற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டனா்.
  • அப்போது எல்லை தாண்டி சீன வீரா்கள் ரோந்து போக முற்பட்டதுதான், இரு நாட்டு வீரா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்படக் காரணம்.
  • அதன் விளைவாக கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரா்கள் கொல்லப்பட்டனா். சீன வீரா்கள் பலரும் உயிரிழந்தனா்.

இப்போதைக்கு ஆறுதல்

  • கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்ஸாங், பாங்காங் ஏரியின் தெற்கு - வடக்குக் கரைகள் ஆகிய பகுதிகளில் இரு நாட்டு படைகளும் மோதுவதற்குத் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டன. பதற்றமான சூழல் நிலவியது.
  • எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்கிற நிலைமை இருந்தாலும்கூட, இருதரப்பு வீரா்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபடலாகாது என்று கடுமையாக எச்சரிக்கப் பட்டிருந்தனா். அதனால், நிலைமை கைமீறிப் போகாமல் காப்பாற்றப்பட்டது.
  • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் ஒப்பந்தம் ஏற்பட்டு, இருதரப்பு ராணுவத்தினரும் பின்வாங்கினா். ஆனால், பாங்காங்கிலிருந்து வீரா்களைத் திரும்பப் பெறுவதற்கு மேலும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி வந்தது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
  • ஜூலை மாதம் துஷான்பேயில் நடந்த ஷாங்காய் கூட்டு நாடுகள் மாநாட்டில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யியும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கோக்ராவில் வீரா்களைத் திரும்பப் பெறுவதில் முன்னேற்றம் ஏற்பட்டது.
  • போர் கமாண்டா்களின் 11 சுற்று பேச்சுவார்த்தை வரை, அதிகப்படுத்திய வீரா்களை அகற்றுவதற்குத்தான் சீனா தயாராக இருந்தது. 12-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பிடிவாதமான நிலைப்பாட்டை அங்கீகரித்து தனது வீரா்களை முற்றிலுமாக எல்லையில் இருந்து அகற்றி பஃபா் ஜோனாக அறிவிக்க ஒப்புக் கொண்டது.
  • ‘க்வாட்’ அமைப்பில் இந்தியா இணைந்திருப்பதால் சீனா தன்னுடைய பிடிவாதத்தை சற்று தளா்த்தி பேச்சுவார்த்தைக்கும், சமரசத்துக்கும் தயாராகிறது என்று தோன்றுகிறது.
  • சீனா சொந்தம் கொண்டாடும் தென்சீனக் கடலில் ‘க்வாட்’ கூட்டணியின் சார்பில் நான்கு போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் இந்தியாவின் கப்பலும் இருக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • இது சீனாவுக்கு அமெரிக்கா விடுக்கும் மறைமுகமான எச்சரிக்கை என்பது ஒரு புறமிருந்தாலும், அதில் இந்தியாவும் இருக்கிறது என்பது சீனாவை நிச்சயமாக எரிச்சலடையச் செய்திருக்கும்.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய ‘க்வாட்’ அமைப்பில் இருப்பது மட்டுமல்லாமல், மேற்கு வல்லரசு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் நெருக்கம் தனக்கு எதிரான கூட்டணியை பலப்படுத்தும் என்பது சீனாவுக்கு தெரியாததல்ல.
  • இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவது தனது கடல் எல்லையில் தேவையில்லாமல் பிரச்னைகளை உருவாக்கக் கூடும் என்பதையும் சீனா உணராமல் இருக்காது. அதுவும்கூட இப்போதைய கோக்ரா சமாதானத்திற்கு காரணமாக இருக்கக் கூடும்.
  • இதெல்லாம் ஆனாலும், இந்திய - சீன எல்லையில் முற்றிலுமாக அமைதி திரும்பி விடவில்லை.
  • ஹாட்ஸ்பிரிங்ஸின் கண்காணிப்புப் பகுதியிலும் டெப்ஸாங்கிலும் இருதரப்பு ராணுவ வீரா்களும் மோதலுக்குத் தயாராகத்தான் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
  • திபெத்துக்கு அருகிலுள்ள பகுதிகள் என்பதால், டெப்ஸாங்கும், ஹாட்ஸ்பிரிங்ஸும் சீனாவுக்கு முக்கியமான பகுதிகள்.
  • அக்சாய் சின்னுக்கு அருகிலுள்ள பகுதி என்பதால் இந்தியாவுக்கும் அது முக்கியம். அதனால்தான் இருதரப்பும் அந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்க மறுக்கின்றன.
  • சீனாவின் எந்தவொரு நடவடிக்கையையும், சமாதானத்தையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வரலாறு நம்மை எச்சரிக்கிறது.
  • 1962 ஜூலையில் லடாக்கிலிருந்து பின்வாங்கிய சீனா, அக்டோபரில் இந்தியாவை ஆக்கிரமித்தது என்பதை மறந்து விடக் கூடாது. அதனால், எந்தவொரு சமாதானமும் நட்புறவும் சீனாவைப் பொருத்தவரை நிரந்தரமல்ல. இப்போதைக்கு நமக்கு ஆறுதல், அவ்வளவே!

நன்றி: தினமணி  (10 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories