TNPSC Thervupettagam

பதிப்புலகம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக வேண்டும் நேர்காணல்: இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

January 7 , 2024 371 days 258 0
  • சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த முறையைவிட சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் பன்னாட்டுப் புத்தக கண்காட்சி அமைய வேண்டும் என்கிற முனைப்புடன் தமிழ்நாடு அரசு நூலக இயக்குநர் இளம்பகவத் ..எஸ் தலைமையிலான குழு பணியாற்றிவருகிறது. கடந்த ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்களும் இந்த ஆண்டு திட்டமிடலுக்கு வலுசேர்த்திருக்கின்றன. 38 நாடுகளின் பங்கேற்புடன், இந்த முறை கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இது குறித்து இளம்பகவத்திடம் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

தமிழ்ச் சமூகத்தில் வாசிப்புச் சூழலை மேம்படுத்துவதற்கு சர்வதேச புத்தக கண்காட்சி ஏற்பாடுகளில் எந்த அளவு கவனம் கொடுக்கப்படுகிறது?

  • தமிழ் புத்தக விற்பனையை பல்வகைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இன்று புத்தகங்களை விற்பதற்கு ஆடியோ புக்ஸ் மாபெரும் சாளரத்தைத் திறந்துள்ளது. புத்தகங்களை ஒலிவடிவில் கேட்பவர்களை நாம் வாசகர்களாகவே மதிப்பதில்லை. ஒரு ஆடியோ புக் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஒவ்வொரு தமிழ் நூலையும் லட்சக்கணக்கானோர் கேட்டிருக்கின்றனர். இத்தனை பேர் புத்தகங்களை செவிவழியாகக் கேட்கிறார்கள். இவர்களும் வாசகர்கள்தான். மிகப் பிரபலமான தமிழ் புத்தகம்கூட ஒரு லட்சம் பிரதிகள் விற்பது அரிதாக உள்ளது. இந்த இடைவெளியை நாம் எப்படி நிரப்பப்போகிறோம்?
  • இன்னொரு புறம் சில இணையவழி விற்பனைத் தளங்களுடன் 'பிரிண்ட் ஆண்ட் டிமாண்ட்' வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தை பிடிஎஃப் ஆகப் பதிவேற்றி, அதை வாங்க விரும்பும் வாசகர்களுக்கு ஒவ்வொரு பிரதியாக அச்சிட்டுக் கொடுக்கப்படுகிறது. இதற்காகப் புத்தகத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கத்தை எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஆள் தேவை. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு உருவாகும். புத்தகத்தை அச்சிடுவதிலிருந்து விற்பனைவரை அனைத்தையும் இணையவழி விற்பனை நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. புத்தகத்தின் விற்பனையைப் பொறுத்து இந்த முறையில் கிடைக்கும் குறைந்தபட்ச பங்கிலிருந்து பதிப்பாளர்கள் மாதத்துக்கு லட்சங்களில் வருமானம் ஈட்ட முடியும். இதுபோன்ற சாளரங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
  • தமிழில் உலகத் தரமான புனைவு நூல்கள் நிறைய உள்ளன. ஆனால், அந்த வகையிலான அபுனைவு நூல்கள் மிகக் குறைவு. பல துறைகள் சார்ந்து நல்ல புத்தகங்களே இல்லை. ஆங்கிலத்தில் வாசிக்க முடியாதவர்களுக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். இருக்கும் சில நூல்களும் பரவலான வாசகர்களைச் சென்றடைவதில்லை. அவர்களிடம் நூல்களைக் கொண்டு சேர்க்க மின்னூல், கிண்டில், ஆடியோ புக்ஸ், இணையவழி விற்பனை ஆகியவற்றை பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். தரமான நூல்கள் அதிக மக்களைச் சென்றடைவதால் ஒட்டுமொத்த சமூகத்தின் தரமும் மேம்படும்.
  • சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை ஒட்டி இதுவரை பதிப்பாளர்களுடன் இரண்டு கூட்டங்களும் எழுத்தாளர்களுடன் ஒரு கூட்டமும் நடத்தியிருக்கிறோம். அந்தக் கூட்டங்களில் மேற்கண்ட விஷயங்களை எல்லாம் வலியுறுத்தியுள்ளோம்.

'இலக்கிய முகவர் திட்டம்' குறித்துப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

  • தமிழை உலகுக்குக் கொண்டு செல்வதும் உலகத்தைத் தமிழுக்குக் கொண்டுவருவதும்தான் சர்வதேசப் புத்தக் காட்சியின் முதன்மை நோக்கம். நூல்கள் வெளியே செல்வதற்கு வெளிநாட்டு பதிப்பகங்களுடன் பேச வேண்டும். உலக அளவில் எழுத்தாளர்கள் தன்னுடைய நூலை மொழிப்பெயர்ப்பதற்காக பதிப்பகத்துடன் பேசுவது நல்ல வணிக நடைமுறை இல்லை என்று கருதப்படுகிறது. இதற்கென்று அங்கெல்லாம் இலக்கிய முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதிப்பகங்களுடன் பேசி நூலை மொழிபெயர்ப்பதற்கான உரிமையை விற்பது மட்டுமில்லாமல், தம்மிடம் வரும் நூல்களைத் தரம்பிரித்து அந்நிய மொழிகளுக்குக் கொண்டு செல்லத் தகுதியான நூல்களைத் தேர்ந்தெடுக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் இலக்கிய முகவர்கள் பயிற்சித் திட்டத்தை தமிழ்நாடு அரசே நடத்தியிருக்கிறது. இவர்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அயல் பதிப்பகங்களுக்கும் இடையிலான பாலமாகச் செயல்படுவார்கள்.
  • இலக்கிய முகவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கு 21 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. ஆங்கிலத்தில் எழுதுவது, உரையாடுவது, உள்ளடக்கச் சுருக்கம் எழுதுவது, வடிவமைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவரும் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 50% பெண்கள் என்பது தனிச்சிறப்பு. ஒவ்வொரு முகவரும் தேர்ந்தெடுத்துள்ள நூல்கள், அவற்றின் உள்ளடக்கச் சுருக்கம். ஆசிரியர் குறிப்பு அனைத்தையும அங்கிலத்தில் எழுதி உரிமைக் கையேடுகளை (rights guide) தயாரித்துள்ளனர். இதுவரை 128 தமிழ் எழுத்தாளர்களின் 235க்கு மேற்பட்ட புத்தகங்கள் இவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் வெளிநாட்டு நூல்கள் தமிழுக்கு வருவதை அதிகரிப்பதற்கு யோசனைகள். திட்டங்கள் உள்ளனவா?

  • இந்தியா உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. ஆனால், பலரும் இந்தியா என்றால் பிற நாடுகளைப் போல ஒரு மொழி பேசும் நாடு என்றுதான் புரிந்துவைத்திருக்கிறார்கள். இங்கு பல மொழிகள், பண்பாடுகள் இருக்கின்றன. டெல்லியிலிருந்து வெகு தொலைவில் தமிழ்நாடு இருக்கிறது என்று புரியவைப்பதே பெரும் சவால். சில பன்மொழி பதிப்பாளர்கள் அனைத்து இந்திய மொழிகளுக்குமான மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், தமிழில் அவர்கள் கொண்டுவரும் மொழிபெயர்ப்பில் பல தடைகள் உள்ளன.
  • மட்டுமில்லாமல் சில பதிப்பகங்கள் மட்டுமே வெளிநாட்டு நூல்களை தமிழில் கொண்டுவருவதற்கான உரிமையைப் பெறுகின்றன. இது விரிவடைய வேண்டும். 30 நாடுகள் தமது நாட்டு நூல்களை மொழிபெயர்க்க நிதிநல்கை (Translation Grant) அளிக்கின்றன. ஒவ்வொரு நூலுக்கும் 3,000 முதல் 4,000 டாலர் மொழிபெயர்ப்பு மானியம் கிடைக்கும். இதன் ஒட்டுமொத்த மதிப்பு பல மில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிதிநல்கையைப் பெறுவதே பதிப்பகத்துக்கு லாபத்தைப் பெற்றுத் தந்துவிடும். கடந்த நவம்பர் மாதத்திலேயே எந்தெந்த நாடுகள் மொழிபெயர்ப்பு உதவித்தொகை அளிக்கின்றன என்பது குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டிருக்கிறோம். தமிழ்ப் பதிப்பகங்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த முறை எத்தனை தமிழ் நூல்கள் வெளிநாட்டு மொழிகளுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்?

  • கடந்த ஆண்டு செவ்வியல் நூல்கள், நவீன நூல்கள் என 44 தமிழ் நூல்களை அந்நிய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை மலேசியாமதிப்புறு விருந்தினர்’ (Guest of Honor country) நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழிலிருந்து மலாய் மொழிக்கும் மலாய் மொழியிலிருந்து தமிழுக்கும் நிறைய நுல்களை மொழிபெயர்ப்பதற்கான சாத்தியம் இந்த முறை அதிகமாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories