- இரண்டாயிரமாவது ஆண்டில் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற மக்கள் எழுச்சி (இரண்டாவது இண்டிஃபாதா) ஒரு மாபெரும் ரத்த சரித்திரம் என்பது உண்மையே. ஆனால் ரத்தத்துக்குக் காரணம் பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் அல்ல. யூத ராணுவத்தினர்.
- அப்போது மேற்கத்திய ஊடகங்கள் குட்டிக்கரணம் அடித்து இதனை மறைக்கப் பார்த்தன. இண்டிஃபாதா என்பதே கல்லெறி, நெருப்பெறிக் கல்யாணம்தானே. அதை எப்போதும் செய்வது பாலஸ்தீனர்கள்தானே என்கிற எளிய முடிவுக்கு வந்துவிடுவது யாருக்கும் சுலபம். உண்மையில் அம்முறை அங்கே நடந்தது முற்றிலும் தலைகீழ்.
- பாலஸ்தீனர்கள் கொதிப்படைந்திருந்தது உண்மை. ஜெருசலேம் இனி என்றுமே தமக்கு இல்லை என்றாகிவிடப் போகிறதே என்பதிலும், அகதிகளாக எல்லை தாண்டிச் சென்ற மக்கள் இனி என்றென்றும் சொந்த மண்ணுக்குத் திரும்பி வர முடியாமல் போய்விடப் போகிறதே என்பதிலும் அவர்கள் பதற்றமாகியிருந்தார்கள். பேச்சுவார்த்தைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டிருந்த விரக்தி யில்தான் யாசிர் அர்ஃபாத்தும் மீண்டும் ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டம் பகுதியளவேனும் பலன் தருகிறதா பார்க்கலாம் என்று நினைத்தார்.
- முதல் இண்டிஃபதா தொடங்கிய போது பாலஸ்தீன அரேபியர்கள் சகட்டு மேனிக்குக் கல் எறிந்தும் கொளுத்திய டயர்களை எறிந்தும் தமது கோபத்தின் அளவைக் காட்டினார்கள் என்பது சரித்திரம். ஆனால் இம்முறை அவர்கள் நடந்துகொண்ட விதம், யாசிர் அர்ஃபாத்துக்கே நம்ப முடியாததாக இருந்தது. தமது அமைதி பேரணிகளின் மூலம் உலகின் கவனத்தை மொத்தமாகத் தம் பக்கம் திருப்ப வேண்டும்; பாலஸ்தீன பிரச்சினை குறித்து வாயே திறக்காத நாடுகளைக் கூட இஸ்ரேலுக்கு எதிராகப் பேச வைக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. எனவே திரும்பத் திரும்ப கூடிப் பேசி, வன்முறையை எந்த வடிவத்திலும் கைக்கொள்ள வேண்டாம் என்று மக்களை எச்சரித்திருந்தார்கள்.
- மறுபுறம் இஸ்ரேலிய அரசு அந்தப் பாலஸ்தீனர் எழுச்சியை வேறொரு விதமாக உருமாற்ற திட்டம் தீட்டியது. எப்படி இருந்தாலும் ஏரியல் ஷரோனின் ஜெருசலேம் பயணம் அவர்களைக் கொதிப்படையச் செய்திருக்கும். அதனை ஒட்டித்தான் இண்டிஃபதாவையே தொடங்குகிறார்கள் என்பதை உலகுக்குச் சொல்லவே வேண்டாம். எல்லோருக்கும் எளிதில் புரியும். எனவே, பேரணிகளில் என்ன கலவரம் நடந்தாலும், தொடங்கியது முஸ்லிம்கள்தாம் என்று உலகம் நம்பும். தானாக நம்பாவிட்டாலும் படம் காட்டி நம்ப வைத்துவிடுவது சுலபம்.
- அவர்கள் அப்படி நினைத்ததற்கு அடிப்படைக் காரணம், கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் மகத்தான தோல்வி. பாலஸ்தீன தரப்பு எந்த ஓர் அம்சத்திலும் விட்டுக் கொடுக்காமல் இம்முறை இஸ்ரேலை மூலையில் கொண்டு நிறுத்தியதில் அவர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். ஒரு வலுவான ராணுவத் தாக்குதலின் மூலம் சிறிது காலத்துக்காவது பாலஸ்தீனர்கள் தமது கோரிக்கைகளை உரக்கப் பேசுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த இண்டிஃ பதாவை அதன்தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள்.
- போராட்டம் ஆரம்பித்தது. அமைதி ஊர்வலங்கள். இஸ்ரேலுக்கு எதிரான கண்டன கோஷங்கள். கடையடைப்புகள். ஒத்துழையாமை நடவடிக்கைகள். ஜெருசலேமின் மேற்கு எல்லையில் தொடங்கி மெல்ல மெல்ல இது கிழக்கு ஜெருசலேத்துக்கும் மேற்குக் கரைப் பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
- ஊர்வலத்தில் ஒரு கல் வீச்சு நடந்தால் போதும் என்று இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிகளுடன் மூலைக்கு மூலை கூடி நின்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. அப்படி ஒன்று நடக்கவில்லை. அவர்கள் கலவரமாகிப் போனார்கள். எனவே, ஊர்வலத்தின் குறுக்கே ஆயுதம் தரித்த ராணுவ வீரர்கள் நுழைந்தார்கள். வழியில் நிறுத்தி பரிசோதனை என்று வினோதமானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு, ஊர்வலம் கூடாது; கலைந்து செல்லுங்கள் என்று மைக் வைத்து அறிவித்துக் கொண்டே ஊர்வலத்தின் இடையே தமது ராணுவ வாகனங்களை ஓட்டிச் சென்றார்கள். அப்போதும் மக்கள் அமைதியாக நகர்ந்து வழி விட்டார்கள்.
- இதெல்லாம் சரிப்படாது என்று முடிவு செய்து, ‘இந்தக் கணம் கலைந்து போகிறீர்களா, இல்லை சுடவா?’ என்று ஒரு மிரட்டல்.
- சரி சுட்டுக்கொள் என்று மக்கள் அப்போதும் கோஷமிடுவதை நிறுத்தாமல் நடக்கத் தொடங்க, இந்தப் புள்ளியில் இஸ்ரேலிய ராணுவத்தினர் சுடத் தொடங்கினார்கள். மக்கள் சிதறி ஓடத் தொடங்கினார்கள். இப்போது நிலவரம் கலவரமானது. அவர்கள் எதிர்பார்த்த கல்லடிகள் ஆரம்பித்தன. எரியும் டயர்கள் பறக்கத் தொடங்கின. காத்திருந்தது போல இஸ்ரேலிய ராணுவத்தின் ஹெலிகாப்டர் படைப் பிரிவு மேற்குக் கரையெங்கும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளை வட்டமிட்டு குண்டு வீசத் தொடங்கியது.
- அது நடந்து கொண்டிருந்த போதே மேற்குக் கரை எல்லையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாங்கிகள் அங்கிருந்து புறப்பட்டன. வெடித்துக் கொண்டே அவை நகருக்குள் நுழைந்த காட்சியை ஊடகங்கள் படம் பிடித்து விடாதிருக்க, மேற்குக் கரையில் இருந்த அத்தனை செய்தியாளர்களையும் முன்னதாக அப்புறப்படுத்தியிருந்தார்கள்.
- இண்டிஃபதா தொடங்கிய 6-வது நாளின் இறுதியில் இஸ்ரேல் ராணுவம் மொத்தம் 13 லட்சம் தோட்டாக்களைப் பயன்படுத்த வேண்டி இருந்ததாக இஸ்ரேல் ராணுவ உளவுத் துறை இயக்குநர் (மொசாட் அல்ல. இது வேறு.) அமோஸ் மல்கா தெரிவித் தார்.
- சுமார் ஐம்பதிலிருந்து அறுபது பாலஸ்தீனர்கள் இறந்திருந்தார்கள். குறைந்தது இரண்டாயிரம் பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள்.
- இதற்குப் பிறகுதான் இது மக்கள் போராட்டமாக நீடிப்பதினும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவதே மேற்கொண்டு பொது மக்கள் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க உதவும் என்று பாலஸ்தீனர்கள் முடிவு செய்தார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2023)