TNPSC Thervupettagam

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

January 29 , 2024 175 days 122 0
  • திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை இச்சம்பவம் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனியார் செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
  • ஜனவரி 24 அன்று இரவு, நேசபிரபு வீட்டிலிருந்து வெளியே வந்த தருணத்தில், அங்கு காத்துக் கொண்டிருந்த மர்ம நபர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேசபிரபுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நேசபிரபுவின் உடலில் 62 வெட்டுக்காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • முன்னதாக நேசபிரபுவைத் தாக்கியவர்கள் அவர் வீட்டுக்கு அருகில் வந்து பலமுறை நோட்டம் விட்டுள்ளனர். இது குறித்து நேசபிரபு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் காவல் துறைக்குத் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது.
  • மர்ம நபர்கள் தாக்க வந்தபோதுகூட, நேசபிரபு தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் குறித்து காவலர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பல முறை புகார் தெரிவித்தும் காவல் துறையினர் நேசபிரபு மீதான தாக்குதலைத் தடுக்கத் தவறியது கண்டனத்துக்குரியது.
  • மறுபுறம், தாக்குதலுக்கு உள்ளான நேசபிரபு மீதும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் தனது ஊடகப் பின்புலத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சிலரை மிரட்டிப் பணம் சம்பாதித்ததாகவும் வேறு சில தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
  • இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், நேசபிரபு பணியாற்றும் ஊடக நிறுவனத்திலோ காவல் துறையிடமோ புகார் அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம். மாறாக, வன்முறையைக் கையிலெடுத்ததோடு, அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
  • செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து அவருக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியதற்காக காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரைக் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
  • இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிய அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.
  • ஊடகம்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை நாம் அறிவோம். சமூகத்தில் நடக்கும் தவறுகளையும், அரசு நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுசெல்வதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதிலும் ஊடகவியலாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
  • இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களது பணியைச் செய்யவிடாமல் தடுப்பது போன்ற செயல்களால் ஜனநாயகம் தனது சமநிலையை இழக்க நேரிடும்.
  • ஊடகவியலாளர் என்னும் அடையாளத்தைப் பயன்படுத்தித் தவறு செய்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். அதே நேரம், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அறியப்படும் ஊடகத் துறையில் பணியாற்றுவோருக்கான அச்சுறுத்தலை முற்றிலும் களைவது அரசின் முக்கியக் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories