TNPSC Thervupettagam

பனியுகம்

April 27 , 2024 259 days 316 0
  • நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மானுட யுகம், குறைந்தபட்சம் ஐந்து பனியுகங்களைக் கடந்து வந்துள்ளது. கடந்த பத்து லட்சம் ஆண்டுகளில் மட்டும் 12 முறை பனிப்பாறைப் பரவல் (glaciation) நிகழ்ந்திருக்கிறது.
  • காலநிலை அறிஞர்கள் உறைபனிக் கால வெப்பநிலைகளைக் குறித்த தீவிர ஆய்வுகளில் இறங்கியுள்ளனர். கரிம வளி உமிழ்வுக்கும் வெப்பநிலைக்கும் இடையிலுள்ள தொடர்பு, வெப்பநிலை உயர்வு பூமியை எவ்வாறு பாதிக்கும், எதிர்காலத்தில் பூமியின் வெப்பநிலைப் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ள இந்த ஆய்வுகள் பெருமளவு உதவும்.
  • புவிக்கோளத்தின் சுற்றுவட்டப் பாதையில் நேர்ந்த மாற்றங்களும், அவ்வப்போது ஏற்படும் கண்டத்தட்டுகளின் விலகல்களும் பனியுகங்களின் காலநீட்சியைத் தீர்மானித்திருக்கின்றன. சில நூறு கோடி ஆண்டுகள் வரை நீடித்து நின்ற பனியுகங்கள் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் அடிப்படைப் புரிதல் சார்ந்து இரண்டு அறிவியல் மேதைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்: ஒருவர் நிலவியல் அறிஞர் லூயி அகாசி (Louis Agassiz); மற்றவர் கணிதவியல் அறிஞர் மிலூத்தின் மிலன்கொவிச் (Milutin Milankovitch).

பனியுக நிலம்:

  • பனிப்பாறைகளின் பரவலானது, பூமியின் பெருநிலக் கட்டமைவுகளை மாற்றியமைத்தன. பனியுகங்களின் வெவ்வேறு கட்டங்களில் பாறைகள் முளைத்து எழுந்தன; மணல்பரப்புகள் உருவாகின; நிலஅடுக்குகள் மீதான பனிப்பாளங்களின் அழுத்தத்தால் மலைகள் தாழ்ந்து இறங்கின. வட துருவப் பனிச் சிகரங்களின் வெப்பநிலை வீழ்ச்சியினால் குளிர்ப்பிரதேசத் தாவரங்கள் தென்மண்டலம் நோக்கிப் பரவலாயின.
  • நீர் பனிப்பாறைகளாக மாறிக்கொண் டிருந்ததன் விளைவாக, கடல் மட்டம் அதிரடியாக இறங்கியது; ஆறுகள் தாழ்வான பள்ளாத்தாக்குகளை ஏற்படுத்தி ஓடத் தொடங்கி, நிலத்தில் ஏரிகளை உருவாக்கின.
  • கடல் மட்டம் கணிசமாகத் தாழ்ந்துபோன நிலையில், ஏற்கெனவே மூழ்கிப்போயிருந்த, கண்டங்களை இணைக்கும் நிலப் பகுதிகள் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்தன. நிலத்தை மூடிப் போர்த்தியிருந்த பனிப்பாளங்கள் பிறகு ஒரு கட்டத்தில் உருகிப் பின்வாங்கத் தொடங்கின; அதன் விளைவாகப் பள்ளங்கள் நிலத்தின் படிவுகளோடு சேர்ந்து, புதிய நன்னீர்நிலைகளாக வடிவம் கொண்டன.
  • தொல்லியல் நிகழ்வுகளின் காலநீட்சியைக் கற்பனை செய்து பார்ப்பது சற்றே கடினமானது. நாம் பெரும்பொழுது, சிறு பொழுது, ஆண்டு, பதிற்றாண்டு, நூற்றாண்டு என்று எண்ணிப் பழகியவர்கள். ஒரு நாளின் 24 மணி நேரத்தை ஆறு பொழுதுகளாகவும், ஆண்டின் காலத்தை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பதான ஆறு பெரும்பொழுதுகளாகவும் பகுத்துக் குறிக்கிறது தொல்காப்பியம்.
  • கோவை போன்ற ஒரு பெருநகரத்தின் வெப்பநிலை நாளின் ஆறு பொழுதுகளில் 23 – 38 பாகைக்கு (டிகிரி செல்சியஸ்) இடையில் மாறலாம். பெரும்பொழுது என்றால் வெயில், மழை, பனிப்பொழிவை ஒட்டி ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை சற்றொப்ப 20 பாகை மாறும். தொல்லியல் காலங்கள் அப்படியல்ல; அவை பல்லாயிரம், லட்சம், கோடி ஆண்டுகளின் கணக்கு. உறைபனிக் காலம் -80 பாகை வரை இறங்கலாம்; எரிமலைப் பிழம்புகள் 1,000 பாகை (டிகிரி செல்சியஸ்) வெப்பத்தை உமிழலாம்.

8.0 பாகை:

  • பனியுகத்தில் வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பூமியின் பெரும்பான்மைப் பரப்புகள் பனிப்பாளங்களால் மூடப்பட்டிருந்தன. கடைசிப் பனியுகம் உச்சத்தில் இருந்தபோது பனிப்பாளங்கள் 12,000 அடி வரை உயர்ந்து கனடா, ஸ்காண்டிநேவியா, ரஷ்யா, தென்னமெரிக்கா வரை பரவியிருந்தன.
  • போலவே, கடல் மட்டம் 400 அடி தாழ்ந்திருக்கிறது. அப்போது பூமியின் சராசரி வெப்பநிலை சற்றொப்ப 8.0 பாகை செல்சியஸ்; இப்போதைய சராசரி வெப்பநிலையைவிட 8.0 பாகை குறைவு. துருவப் பகுதிகளில் வெப்பநிலை இதைவிட 14 பாகை குறைவாக இருந்தது. அத்தகைய வெப்பநிலையைத் தாங்கும் தகவமைப்பு கொண்ட உயிரினங்கள் மட்டுமே எஞ்சி நின்றன.
  • பனியுகத்தில் புவியில் ஆதிக்கம் செலுத்திய பேருயிர், கம்பளி மாமத யானை (wooly mammoth) என்னும் பனியுக யானைகள். ரோமத்தால் பொதியப்பெற்ற உடலும், மிக நீளமான தந்தங்களும் கொண்ட, யானையைவிட பிரம்மாண்டமான அப்பேருயிரின் மறைவுக்குப் பிறகு, புவியில் ஆதிக்கம் செலுத்தவந்த இனம் மனித இனம்.

கண்டப் பாலம்:

  • அது சரி, மனித இனம் எப்படிப் பனியுகத்தை எதிர்கொண்டது? கடுங்குளிருக்குத் தாக்குப்பிடிக்க இசைவான ஆடைகளை உருவாக்கஎலும்பாலான ஊசிகளைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்; இறுதிப் பனியுகத்தின் முடிவில் கடல் மட்டம் தாழத் தொடங்கியபோது, கண்டங்களுக்கு இடையில் தோன்றிய நில இணைப்புகளின் வழியாக புதிய நிலப் பகுதிகளைத் தேடிக் கண்டடைந்தார்கள். பனியுகம் நிறைவுற்று, வெதுவெதுப்பான ஹோலோசீன் காலம் தொடங்கியபோது மனித இனத்துக்குச் சாதகமாக நிலத்தைப் பனியுகம் மாற்றியிருந்தது. அவர்கள் வேளாண்மை பழகினார்கள், விலங்குகளை வீட்டுக்குப் பழக்கிப் பயன் படுத்தினார்கள்.
  • அதே வேளையில், ராட்சத உயிர்களான பனியுக யானைகள், பெரும்பூனையின ஊனுண்ணிகள் (sabre tooththed cats), தரைத் தேவாங்கு இன உயிரினம் (ground sloth) உள்ளிட்ட அனைத்தும் அழிந்து போயிருந்தன. அந்த அழிவுக்குக் காரணம் கொள்ளை நோயா, மனிதனின் வேட்டைப் பழக்கமா, இல்லை காலநிலை மாற்றமா? இதுவரை முடிச்சவிழாத பனியுகப் புதிர்களில் ஒன்று, இந்தக் கேள்வி.

மானுட யுகம்:

  • இயற்கையின் வழிமுறைகள் புதிரானவை. மாற்றங்களைப் புகுத்து வதற்கு, தொல்லியல் பேரிடர்களையே இயற்கை ஆயுதங்களாகக் கையாண்டு வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்குச் சாதகமான சூழலை இயற்கையே அமைத்துத் தருவது பல யுகங்களுக்கு ஒரு முறை நிகழ்வது. மானுட யுகம் (ஹோலோசீன்) அப்படி வாய்த்த ஒன்றுதான். அந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மனித இனம், இயற்கைக்கு எதைத் திருப்பிக் கொடுத்தது என்பது கோடி ரூபாய் கேள்வி!

3.0 பாகை!

  • கடைசி உறைபனி யுகம் முடிவுற்ற பின்னான 21,000 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 3.0 பாகை செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. அதில் ஒரு பாகை, கடந்த சில நூறு ஆண்டுகளில் நேர்ந்திருக்கிறது. அது தொழில் புரட்சிக்குப் பிந்தைய காலம் என்பதைக் கவனிக்க வேண்டும்.
  • 1.5 பாகை வெப்பநிலை உயர்வு 2060க்குள் நிகழும் என 2016 பாரிஸ் காலநிலை மாநாடு கணித்திருந்த நிலையில், இவ்வாண்டு (2024) மே மாதத்திலேயே அது நிகழ்ந்துவிடும் என அண்மை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அந்த எல்லையைத் தொடுவதற்கு இன்னும் 0.2 பாகைதான் குறைவாக இருக்கிறது!

எகிறும் அல்பீடோ:

  • இவ்வளவு காலமாகச் சீராக, மிதமாக நிகழ்ந்துவந்த கடல் மட்ட உயர்வானது, கடந்த 200 ஆண்டுகளில் விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. உபயம்- மனிதச் செயல்பாடுகள்.
  • வளி மண்டலத்தில் ‘கரிம – நிகர் - வளி’ உமிழ்வு அதிகரிப்பின் காரணமாக, பூமி உள்வாங்கும் வெப்பத்துக்கும் திருப்பியனுப்பும் வெப்பத்துக்குமான ‘அல்பீடோ’ (albeido) இடைவெளி வேகமாகக் கூடிக்கொண்டே போகிறது. மனித இனம் தொடங்கிவைத்த இந்த ஆட்டத்தை முடித்து வைக்கப் போவது கரிம – நிகர் - வளி! சூழலியல் கட்டமைவுகளையும் பல்லுயிரி யத்தையும் அழிப்பதில் தீவிரம் காட்டிய மனித இனம், இப்போது நிற்பது அழிவின் விளிம்பில்!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories