TNPSC Thervupettagam

பயங்கரவாதிகளைத் தண்டிப்பதில் பாகிஸ்தான் கடுமை காட்ட வேண்டும்

March 5 , 2021 1235 days 655 0
  • பிரான்ஸின் பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ‘நிதி நடவடிக்கைப் பணிக்குழு’ (எஃப்.ஏ.டி.எஃப்.) பாகிஸ்தானைத் தனது ‘சாம்பல் நிறப் பட்டிய’லில் தொடர்ந்து வைத்திருக்கும் முடிவை எடுத்திருப்பது நிச்சயம் அந்நாட்டுக்குப் பின்னடைவையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.
  • அந்நியச் செலாவணி முறைகேடுகள், பயங்கரவாதத்துக்குச் செய்யப்படும் நிதியுதவி போன்றவற்றைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.
  • மேற்கண்ட முறைகேடுகளில் ஈடுபடும் நாடுகள் ‘கறுப்புப் பட்டிய’லில் சேர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பொருளாதாரரீதியில் அழுத்தம் தரப்படும். இந்தப் பட்டியலைவிட சற்றுத் தீவிரம் குறைந்தது ‘சாம்பல் நிறப் பட்டியல்’.
  • 2015-ல் இந்தப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டு 2018-ல் மறுபடியும் சேர்க்கப்பட்டது.
  • 27 நடவடிக்கைகளை அது நிறைவேற்ற வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் இன்னும் மூன்று விஷயங்களில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமீபத்தில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் தலைவர் மார்கஸ் ப்ளெயர் தெரிவித்தார்.
  • பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பவர்களைத் தண்டிப்பதில் தீவிரமும் இருக்க வேண்டும், ஐநா பாதுகாப்பு அவையால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள லஷ்கர் இ-தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயீது, ஜேஇஎம் தலைவர் மஸூத் அஸார், பாகிஸ்தானில் உள்ள பிற பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் போன்றோர் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பவைதான் இன்னும் பூர்த்திசெய்யப்படாத பணிகள்.
  • ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் இந்த முடிவை பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
  • ‘சாம்பல் நிறப் பட்டிய’லில் இருந்த காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு 3,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் ஒரு மதிப்பீட்டை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
  • ‘கறுப்புப் பட்டிய’லில் ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் தனது எஞ்சிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ‘சாம்பல் நிறப் பட்டிய’லிலிருந்து அது நீக்கப்படும். 2021 ஜூனில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் உறுப்பினர்கள் கூடும்போது இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் சிறிது இணக்கம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும் நேரத்தில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பு இப்படியொரு முடிவு எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
  • இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்பது குறித்தும், பாகிஸ்தான் ராணுவத் தலைமையுடன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தொடர்பில் இருக்கிறார் என்பது குறித்தும் வெளியாகும் செய்திகள் நல்ல சமிக்ஞையே.
  • தற்போது அரசியல்ரீதியிலும், வர்த்தக, கலாச்சாரரீதியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா எந்த உறவும் கொண்டிருக்கவில்லையென்றாலும் கூடிய விரைவில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது.
  • பயங்கரவாதிகளையும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் என்று ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்களையும் கடுமையாகத் தண்டிப்பது பாகிஸ்தானுக்கு நல்லது. ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் ‘சாம்பல் நிறப் பட்டிய’லிலிருந்து விடுபடுவது என்பது இனி வரும் மாதங்களில் இந்திய-பாகிஸ்தான் உறவு மேம்பட வழிவகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories