TNPSC Thervupettagam

பயிர்க் காப்பீடு, நிறுவனங்களுக்கு அறுவடை

August 16 , 2019 1974 days 2639 0
  • சுதந்திர இந்தியாவில் பயிர்கள் சேதமடைவதால் ஏற்படும் நஷ்டத்திலிருந்து விவசாயிகளைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை  பல்வேறு அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஏனெனில், மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பயிர்கள் அழிவது விவசாயிகளை மீள இயலாத கடனில் தள்ளிவிடும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்னை இப்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள்
  • இப்போது, பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் விவசாயிகளை இடர்ப்பாடுகளில் இருந்து காக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், பயிர்க் காப்பீட்டு முறையையும், திட்டங்களையும் எத்தனையோ முறை மாற்றி அமைத்தும் நிலைமை மோசமடைந்து வருகிறதே தவிர, இந்தப் பிரச்னையின் தீவிரம் குறைந்தபாடில்லை.
    ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்) விரைவில் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த காப்பீட்டுத் திட்டம், எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை என்பது தெரிகிறது.
    இந்தியாவில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. வறட்சி காலத்தில் விவசாயிகளைக் காப்பதற்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 1915-ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்தில் ஜே.எஸ். சக்கரவர்த்தி அறிமுகப்படுத்தினார்.  அதன் பிறகு, மதராஸ், தேவாஸ், பரோடோ ஆகிய பகுதிகளிலும் சில பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.
  • இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், 1947-இல் நாடாளுமன்றத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது,   பயிர்க் காப்பீடு மற்றும் கால்நடைகளுக்கான காப்பீடு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் உறுதியளித்தார்; ஆய்வு செய்ய ஒரு குழுவும் அப்போது அமைக்கப்பட்டது.
தகவல்கள்
  • தனித்தனி விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதும், இழப்புக்கு நிகரான தொகையை வழங்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு முன்பு பயிர்கள் மூலம் ஈட்டிய வருவாய், சந்தித்த இழப்புகளின் அடிப்படையில் காப்பீட்டு பிரிமீயம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
  • ஆனால், இது தொடர்பான தகவல்களைத் திரட்டும் பணி சவாலாக இருந்தது. மேலும், தனித்தனியாக விவசாயிகளுக்கு காப்பீடு அளித்தால், அவர்கள் முறைகேடான முறையில் காப்பீட்டுத் தொகையைக் கோருவதற்கும் வாய்ப்புள்ளது என்ற சந்தேகமும் கொள்கை வகுப்பாளர்களுக்கு எழுந்தது.
  • எனவே, ஒரேவிதமான நிலத்துக்கு அதன் பரப்பளவின் அடிப்படையில் காப்பீடு வழங்க ஆய்வுக் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் காரணம் காட்டி மாநில அரசுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. 
    இறுதியாக 1972-ஆம் ஆண்டு நமது நாட்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. எல்ஐசி-யின் பொதுக் காப்பீட்டுப் பிரிவு குஜராத்தில் எச்-4 பருத்திக்கு மட்டும் காப்பீட்டுத் திட்டத்தை அளித்தது.
  • அதன் பிறகு இந்திய பொதுக் காப்பீட்டு நிறுவனம் புதிதாகத் தொடங்கப்பட்டது. அப்போது முன்னோடித் திட்டமாக நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு ஆகிய பயிர் வகைகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. 
மாநிலங்களில்....
  • மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த முன்னோடித் திட்டம் 1978-79-ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதில் மொத்தம் 3,110 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்திருந்தனர்.
    அப்போது, பிரீமியம் தொகையாக ரூ.4.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகையாக ரூ.37.88 லட்சம் அளிக்கப்பட்டது. பிரீமியம் தொகையாக வசூலிக்கப்பட்டதைவிட, 8 மடங்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டியதாயிற்று. 
  • 1979-ஆம் ஆண்டு மற்றொரு முன்னோடி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை பொதுக் காப்பீட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நிலத்தின் அடிப்படையில் காப்பீடு அளிக்கும் இந்தத் திட்டத்தை பேராசிரியர் வி.எம். தன்டேகர் பரிந்துரைத்திருந்தார். 1979 முதல் 1984-85-ஆம் ஆண்டு வரை இத்திட்டம் அமலில் இருந்தது. 
  • இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தின் பேரில் மாநில அரசுகள் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஏற்படும் இடர்பாட்டை 2:1 என்ற விகிதத்தில் பொதுக் காப்பீட்டு நிறுவனமும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பகிர்ந்து கொண்டன. மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 5 முதல் 10 சதவீதம் வரை பிரீமியமாக இருந்தது. 
  • இதில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, உருளைக்கிழங்கு, பார்லி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 6.27 லட்சம் விவசாயிகள் இணைந்தனர். இதில் பிரீமியமாக ரூ.1.97 கோடி வசூலிக்கப்பட்டது. ரூ.1.57 கோடி இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.
    இந்த முன்னோடித் திட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் மூலம்,  1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை  மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்று அழைக்கப்பட்ட இத்திட்டம் 1999-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. 
வேளாண்மை காப்பீட்டுத் திட்டம்
  • மாநிலங்கள் விருப்பத்தின் பேரில் இணைந்து கொள்ளலாம் என்றே இத்திட்டமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டம்  வெற்றியைத் தரவில்லை. இதன் பிறகு, 1999-இல் தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம், 2007-ஆம் ஆண்டில் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டு (முன்னோடி) திட்டம், 2010-ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம், 2013-இல் தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டது. 
    கடந்த 2011 முதல் 2015-16-ஆம் ஆண்டு வரை பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்த பெரிய தவறுகள், கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.  காப்பீட்டுத் திட்டத்தில் பெருமளவிலான விவசாயிகள் விடுபட்டிருந்தார்கள் என்பது அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 
  • இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலை இதைவிட மோசம். அவர்களில் 5.75 சதவீதம் முதல் 13.32 சதவீதம் பேர் வரை மட்டுமே பயிர்க் காப்பீடு பெற்றிருந்தனர். ராபி பயிர் சாகுபடி காலத்தில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளில் 8 முதல் 12 சதவீத விவசாயிகளே காப்பீடு பெற்றிருந்தனர். 
    இதிலும், வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே காப்பீடு இருந்தது. ஏனெனில், வங்கிகளில் கடன் பெற காப்பீடு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
  • அதே நேரத்தில் விவசாயத்துக்காக வங்கிகளின் கடன் பெறாதவர்களுக்கு காப்பீடு என்பது முற்றிலும் மறுக்கப்படுவதாகவே இருந்தது.
  • இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஏற்கெனவே இருந்த திட்டங்களில் இருந்து பெரிய அளவில் மாறுபட்டதல்ல. கடந்த 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் விவசாயிகளின் பிரீமியம் தொகையைக் குறைப்பதுடன், மேலும் பல உறுதிகளை அளிப்பதாக அமைந்தது. 
    இதில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் சுமையை சமமாகப் பகிர்ந்து கொண்டன.
  • காரீப் பருவத்தில் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகளுக்கான பயிர்க் காப்பீட்டு பிரீமியத்தில் விவசாயிகள் 2 சதவீதம் செலுத்த வேண்டும். இதுவே ராபி பருவத்தில் 1.5 சதவீத பிரீமியத்தை விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. வர்த்தகப் பயிர்கள், தோட்டப் பயிர்களுக்கு 5 சதவீதம் பிரிமீயம் செலுத்த வேண்டும்.
    முதல்கட்ட அனுபவத்தில் இப்போதைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் காப்பீட்டு நிறுவனங்கள்தான் அதிக பயனடைந்துள்ளன. இதில் உள்ள 11 காப்பீட்டு நிறுவனங்களும் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.47,407.98 கோடி பிரிமியம் வசூலித்துள்ளன. அதே நேரத்தில் ரூ.31,612.72 கோடியை மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக அளித்துள்ளன. 
    இதன் மூலம் விவசாயிகளின் நலன் என்ற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாபமடையவே அரசின் இந்தத் திட்டம் உதவுகிறது.
சீரமைத்தல்
  • விவசாயிகளுக்கு முழுப் பலன் கிடைக்கவில்லை; அதே நேரத்தில் அரசு கஜனாவில் இருந்து பணம் விரயம் செய்யப்படுகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
  • இயற்கைப் பேரிடர்கள், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட எந்தக் காரணத்தால் விவசாயிகளின் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் வருவாய் பாதிக்கப்படவும் கூடாது. விவசாயிகளின் வருவாயை உறுதி செய்யும் அதே நேரத்தில், மக்களின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, முழுமையாக ஆய்வு செய்து மத்திய அரசு தனது திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும் செய்யும் திறன் அரசுக்கு உள்ளதா?

நன்றி: தினமணி(16-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories