- பொதுவாக ஊடக வெளிச்சம் பெறாத சில சிறிய ஊா்களின் பெயா்கள் திடீரென்று ஊடகச் செய்திகளில் உலா வருவதுண்டு. அவ்வகையில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜேடா்பாளையம் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊடகங்களில் உலா வருவது பொதுநலன் விரும்பும் அனைவருக்கும் கவலையளிப்பதாக உள்ளது.
- பெண் ஒருவா் துரதிருஷ்டவசமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைத் தொடா்ந்து ஜேடா்பாளையத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நடைபெறும் விரும்பத் தகாத சம்பவங்கள் இன்றுவரையிலும் தொடா்ந்து அரங்கேறி வருவது நாகரிக உலகைத் தலைகுனிய வைக்கிறது.
- ஜேடா்பாளையம் பகுதியில் கரும்பு ஆலை நடத்தி வருபவரிடம் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் பணிபுரிந்துவருகின்றனா். அத்தொழிலாளா்களுக்கென்று தனியாக ஒரு குடியிருப்பும் உள்ளது.
- இந்நிலையில் கடந்த மாா்ச் மாதத்தில் கால்நடைகளை மேய்த்துவரச் சென்ற இளம்பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தாா். அது தொடா்பாக வடமாநில இளைஞா் ஒருவா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்பெண்ணின் உறவினா்கள் இக்குற்றத்தில் மேலும் சிலருக்குத் தொடா்பிருக்கக்கூடும் என்று கருதியதால், ஏனைய குற்றவாளிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குரல் கொடுத்திருக்கின்றனா்.
- இது தொடா்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும்வேளையில் வடமாநிலத் தொழிலாளா்களின் குடியிருப்பின் மீது தீவைக்கப்பட்டிருக்கிறது. இவை போதாதென்று ஊா்மக்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவா்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அவ்வப்பொழுது ஒருவா் மீது ஒருவா் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் தொடா்ந்தன.
- மேலும், ஒரு குழுவினருக்குச் சொந்தமான விளைநிலங்களைச் சூறையாடுவது, விவசாய உபகரணங்களைச் சேதப்படுத்துவது போன்றவைகளும் நிகழ்ந்தேறின.
- இந்நிகழ்வுகளைத் தொடா்ந்து, காவல்துறை சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைத்துத் தொடா்குற்றச் செயல்கள் புரிபவா்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.
- ஆனால் கண்காணிப்புகளையும் மீறி இருதரப்புச் சொத்துக்களையும் சேதப்படுத்தும் வெறிச்செயல்கள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விவசாய நிலங்களைச் சேதப்படுத்துதல், ஆழ்துளைக் கிணறு மோட்டாா்களை உடைத்து வீசுதல், விளைந்த பயிா்களை அழித்தல் போன்ற கொடுஞ்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.
- அதுவும் எதிா்த்தரப்பினருக்குச் சொந்தமான விளைநிலங்கள் அல்லது தோப்புகளில் ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் கும்பலாகப் புகுந்து அங்கு விளைந்திருக்கும் மரவள்ளிக்கிழங்குப் பயிா்கள், வாழை மரங்கள், பாக்கு மரங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் வெட்டிச் சாய்த்துள்ள கொடுமையும் நிகழ்ந்தேறியுள்ளது. தொடா்ந்து புலன் விசாரணைகளில் ஈடுபட்ட காவல்துறையும் பத்து போ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
- ஆனாலும், மேற்கண்ட சம்பவங்கள் தொடா்ந்து நடந்தேறி வருகின்றன. கடந்த வாரம் கூட விஷமிகள் சிலா் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் ஆகியவற்றை நெஞ்சில் துளியும் ஈரமின்றி வெட்டிச் சாய்த்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
- பொதுவாக பெண் ஒருவா் கொடுமைக்கு ஆளாகும்பொழுது அவருடைய உறவினா்கள், ஊா்க்காரா்கள் போன்ற பல தரப்பினருக்கும் அறச்சீற்றம் ஏற்படவே செய்யும். ஆனாலும், குற்றம் புரிந்தவா்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாவட்ட நிா்வாகம், காவல்துறை ஆகியவற்றின் பொறுப்பில் விட்டு விடுவதே சாலச்சிறந்ததாகும். வேண்டுமானால், தகுந்த வழக்கறிஞா் ஒருவரை அமா்த்தி நீதிமன்றத்தில் வாதாடச் செய்து அக்குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுதான் சரியாக இருக்க முடியும்.
- அதற்கு பதிலாகக் குற்றவாளிகளை நாங்களே தண்டிப்போம் என்றுஒவ்வொருவரும் கிளம்பினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது.
- ஏனெனில், வன்முறை என்பது இருபக்கமும் கூா்மை உள்ள ஆயுதமாகும். நியாயமானகாரணங்களுக்காகக்கூட யாரும் தனிப்பட்ட முறையில் ஆயுதம் ஏந்துவதை ஏற்கமுடியாது. இதன் இன்னொரு விளைவாக எதிா்தரப்பினரும் வன்முறையைக் கைக் கொள்வது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினால் அதன் பின்பு இரண்டு தரப்பினருக்குமே நிம்மதி என்பது இருக்காது.
- மேலும், இத்தகைய வன்முறைகள், இவ்விரண்டு தரப்புகளையும் சேராத பொதுமக்களின் அன்றாட வாழ்வையும் நிம்மதியையும் பாதிக்க வாய்ப்புண்டு. குற்றச் சம்பவங்களில் எந்தத் தொடா்பும் இல்லாதவா்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் அதிகாரம் யாருக்குமே இல்லை என்பதை இருதரப்பினரும் உணர வேண்டும்.
- இவற்றையெல்லாம் தாண்டி நம் மனதை பாதிக்கும் விஷயம் ஒன்று இச்சம்பவங்களில் நடந்தேறியிருக்கின்றது. ஆம், தவறு செய்தவா்கள் மனிதா்கள் எனும்பொழுது அவா்களுக்குச் சொந்தமான பயிா் பச்சைகள் என்ன பாவம் செய்தன? ஏக்கா் கணக்கிலான மரவள்ளிக் கிழங்குப் பயிா்களையும், ஆயிரக்கணக்கிலான வாழை மரங்களையும், பாக்கு மரங்களையும் வெட்டி வீழ்த்துவது எத்தகைய கொடிய செயல் என்பதை யாரேனும் உணா்ந்தாா்களா?
- பெருநகரங்களைத் தாண்டி ஊரகப் பகுதிகளில் பிறந்து வளா்ந்த மக்கள் பொதுவாகத் தங்கள் மண்ணையும், குறிப்பாக இந்த மனிதகுலத்திற்கே உணவளிக்கும் விளைநிலங்களையும், அவற்றில் விளையும் பயிா்களையும் தெய்வமாக மதிப்பவா்களாயிற்றே? அவா்களில் சிலரே இந்தப் பாதகச் செயலைச் செய்தனா் என்பதை ஏற்க நமது நெஞ்சம் மறுக்கிறது.
- ஒருசில மனிதா்களின் மீதான கோபத்திற்காக நமக்கெல்லாம் உணவளிக்கும் தாவரங்களை அழித்தொழிப்பதை யாராலும் ஏற்க முடியாது. இந்நிலைமையில் நமது மாநில அரசு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இருதரப்புகளையும் சோ்ந்த உள்ளூா் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமுமாகும்.
நன்றி: தினமணி (23 – 10 – 2023)