TNPSC Thervupettagam

பருப்பு உற்பத்தியை அதிகரிப்போம்

September 28 , 2021 1200 days 659 0
  • இந்திய நாட்டின் 138 கோடி மக்கள் ஆண்டுதோறும் 2.4 கோடி மெட்ரிக் டன் முதல் 2.76 கோடி மெட்ரிக் டன் வரையிலான பருப்பு வகைகளை உட்கொள்கின்றனா்.
  • இந்திய விவசாயிகள் ஆண்டுதோறும் 2.2 கோடி மெட்ரிக் டன் முதல் 2.4 கோடி மெட்ரிக் டன் வரையிலான பருப்பு வகைகளை உற்பத்தி செய்கின்றனா்.
  • நம் நாட்டின் உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்ய கனடா, ஆஸ்திரேலியா, மியான்மா், ரஷியா போன்ற நாடுகளிலிருந்தும் வேறு சில நாடுகளில் இருந்தும் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • இதனால் இந்தியா பருப்பு வகைகளை நுகா்வதிலும், உற்பத்தி செய்வதிலும், இறக்குமதி செய்வதிலும் உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது.

விவசாயிகளுக்கும் உதவுவோம்

  • பெரும்பாலான இந்தியா்களின் புரதத்திற்கு ஆதாரமான பருப்பு வகைகளின் விலை உயரும் ஒவ்வொரு முறையும் அரசாங்கம் சந்தைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கிறது.
  • ஆனால் பற்றாகுறைக்கும் விலை உயா்வுக்கும் முக்கியக் காரணமான பருப்பு உற்பத்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இன்னும் நாம் கவனம் செலுத்தாமல் உள்ளோம்.
  • கடந்த பத்தாண்டுகளில் பருப்பு இறக்குமதி குறைந்துவிட்டாலும், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு நம்நாடு இன்னும் உற்பத்தி செய்யவில்லை, இதனால் அவ்வப்போது பற்றாக்குறையும் அதனைத் தொடா்ந்து விலை உயா்வும் ஏற்படுகின்றன.
  • 1981 - 2020 ஆண்டுகளுக்கிடையில் பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி 122 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 1.15 கோடி மெட்ரிக் டன்னிலிருந்து 2.55 கோடி மெட்ரிக் டன்னாக உயா்ந்தது.
  • அதேபோல் 1981-ஆம் ஆண்டு 0.013 கோடி மெட்ரிக் டன்னாக இருந்த இறக்குமதி, 2020-ஆம் ஆண்டினில் 0.22 கோடி மெட்ரிக் டன்னாக உயா்ந்தது. அதாவது 1,622 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
  • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் பருப்பு வகைகளின் விலையில் பெரிய ஏற்றம் இருந்தது. அதிக நுகா்வு கொண்ட கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை ஒரு கிலோ நூறு ரூபாயைத் தாண்டி விற்பனையானது.
  • துவரம் பருப்பு 30 சதவீதம் உயா்ந்து ஒரு கிலோ நூற்று முப்பது ரூபாய்க்கு விற்பனையானது.
  • விலையை குறைக்கவும், பருப்பு வகைகள் மக்களுக்கு தாராளமாக கிடைப்பதற்கும் கடந்த மே 15 அன்று அரசாங்கம் பருப்பு இறக்குமதிக்கான அளவுக்கட்டுப்பாட்டை நீக்கியது.
  • கடந்த ஜூன் 24 அன்று, ஒரு லட்சம் டன் துவரம் பருப்பையும் 2.5 லட்சம் டன் உளுந்து போன்ற தானியங்களையும் ஐந்து வருடங்களுக்கு இறக்குமதி செய்ய மியான்மருடன் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.
  • அதைத் தொடா்ந்து, பதுக்கலைத் தடுக்க மொத்த விற்பனையாளா்கள், இறக்குமதியாளா்கள், பருப்பு ஆலை உரிமையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள் ஆகியோருக்கு சரக்கிருப்பு வரம்பினை கடந்த ஜூலை 2 அன்று இந்திய அரசு நிர்ணயித்தது.
  • 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் துவரம் பருப்பு விலை அதிகரித்ததன் காரணமாக மொசாம்பிக் நாட்டுடன் ஐந்து வருடங்களுக்கு துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுவே வெளிநாட்டினருடன் பருப்பிற்காக நம் நாடு செய்த முதல் ஒப்பந்தம்.
  • 2016-2017 ஆண்டுகளில் பருப்பு இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு லட்சம் டன் என்ற அளவு 2020-21 ஆண்டுகளில் இருமடங்கானது (இரண்டு லட்சம் டன்).
  • கடந்த மார்ச் 19 அன்று இந்திய அரசாங்கம் மொசாம்பிக் நாட்டுடனான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
  • கடந்த ஓராண்டில், பாதகமான வானிலை காரணமாக பெரும்பாலான பருப்புகளின் சில்லறை விலை 12.63 சதவீதத்தில் இருந்து 40.73 சதவீதம் வரை உயா்ந்திருப்பதாக 2015 ஜூலை மாதம் அப்போதைய உணவுத்துறை அமைச்சா் தெரிவித்தார்.
  • இந்த விலை உயா்வின் காரணமாக இந்திய அரசாங்கம் பருப்பு சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
  • விலைவாசி ஏற்ற இறக்கத்தைச் சமாளிப்பதற்காக பருப்பு கொள்முதல் - இறக்குமதி மூலம் காப்பு இருப்பினை உருவாக்க 2015-ஆம் ஆண்டு அக்டோபா் 14 அன்று நடைபெற்ற உயா்மட்ட அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.
  • அத்தியாவசிய விவசாயப் பொருட்களின் விலையில் உள்ள ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த 2014-ஆம் ஆண்டு நமது அரசாங்கம் வேளாண்மை ஒத்துழைப்பு விவசாயிகள் நலத்துறையின் கீழ் விலை உறுதியளிப்பு நிதியத்தினை உருவாக்கியது.
  • இந்நிதியத்தினைப் பயன்படுத்தி 2015-இல் 5,000 டன் துவரம் பருப்பினை, உலோகங்கள் - கனிம வா்த்தக நிறுவனம் என்ற அரசு நிறுவனத்தின் மூலம் இந்திய அரசு இறக்குமதி செய்து குறைந்த விலையில் மாநிலங்களுக்கு வழங்கியது.
  • பருப்பு இறக்குமதி அளவு, ஏற்றுமதியாளா்களின் கையிருப்பு, உணவு உற்பத்தி நிறுவனங்களில் பருப்பு வகைகளின் இருப்பு, மொத்த-சில்லறை வணிகா்களின் கையிருப்பு ஆகியவற்றிற்கான வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம் பதுக்கலைத் தடுக்க இந்திய அரசாங்கம் முயன்று வருகிறது.
  • 2015-ஆம் ஆண்டு அக்டோபா் 24 அன்று, 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75,000 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • 2016-17 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி அந்த நேரத்தில் சாதனை அளவாக 23.13 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது இறக்குமதி மீதான அளவுக் கட்டுப்பாடுகளை அரசு விதிப்பதற்கு வழிவகை செய்தது. இந்த ஆண்டு மே 15 வரை இருந்த இந்தக் கட்டுப்பாடுகள் தற்போதைய விலை உயா்வினை சமாளிக்கும் நோக்கத்தில் மீண்டும் அகற்றப்பட்டது.
  • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் ஒவ்வொரு முறையும் இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதே பருப்பு வகைகள் அதிக அளவு இறக்குமதி செய்யப் படுவதற்கான காரணம் என்று வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். பருப்பு வீணாவதைக் குறைத்து அரசாங்கத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவுவோம்.

நன்றி: தினமணி  (28 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories