TNPSC Thervupettagam

பருவநிலை மாற்ற மாநாடு இந்தியத் தலைமை

November 12 , 2021 989 days 478 0
  • கிளாஸ்கோவில் தற்போது நடைபெற்றுவரும் 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டின் தலைவராகச் செயல்பட்டுவருபவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலோக் சர்மா.
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆட்சியில் வர்த்தகத் துறை அமைச்சர் பதவியை வகித்தவர் இவர்.
  • மாநாட்டுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்காக அந்தப் பதவியிலிருந்து விலகினார். அதே நேரம், அவருக்கான அமைச்சக அந்தஸ்து தொடர்கிறது.
  • ஆக்ராவில் பிறந்த அலோக், லண்டனுக்கு அருகேயுள்ள ரீடிங் என்கிற ஊருக்கு ஐந்து வயதில் குடிபெயர்ந்தவர்.
  • அலோக்கின் தந்தை பிரேம், பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த காலத்திலிருந்தே கன்சர்வேடிவ் கட்சி அரசியலில் ஈடுபாடு காட்டிவந்தார்.
  • அலோக்கும் அதன் தொடர்ச்சியானார். அரசியலர் என்பதைத் தாண்டி பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டுக்குப் பொறுப்பு வகிப்பதில் வேறு சில தகுதிகளும் அலோக்குக்கு உண்டு.
  • பயன்முறை இயற்பியல்-மின்னணுவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள அவர், பட்டயக் கணக்காளராகவும் தகுதிபெற்றிருக்கிறார்.
  • பருவநிலை மாற்ற மாநாட்டின் தலைமைப் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்டவுடன் குறுகிய காலத்தில் 30 நாடுகளுக்கு விமானப் பயணங்களை அலோக் மேற்கொண்டார்.
  • பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்குக் குரல்கொடுக்கும் சமூகச் செயல்பாட்டாளர்களைப் போலவே வங்கியாளர்கள், நிதி முதலீடு செய்யும் முதலாளிகளும் புதிய போராளிகள்தான் என்று கூறியதன் காரணமாக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
  • ‘கியோட்டோ நெறிமுறை-1997’, ‘பாரிஸ் உடன்படிக்கை-2015’-க்குப் பிறகு, தற்போது நடைபெற்று வரும் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • இதற்கு முதன்மைக் காரணம், பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (ஐ.பி.சி.சி.) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை - ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’ என்கிற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது தான்.
  • அறிவியல் அடிப்படையில் அந்த அறிக்கை விடுத்திருக்கும் எச்சரிக்கைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு பூவுலகைக் காக்கும் நடவடிக்கைகளை அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டில் முன்னெடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் அலோக்கின் பங்கும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.
  • அதே நேரம், பருவநிலை மாற்ற மாநாடுகள் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களால் மட்டும் முழு வெற்றியை எட்டிவிட முடியாது.
  • உலக நாடுகளின் தலைவர்கள், அறிவியலர்கள், நிபுணர்கள், அரசுப் பிரதிநிதிகள், பெரும் தொழில்நிறுவன நலன்களுக்கு ஆதரவு தேடுபவர்கள் எனப் பலரையும் உள்ளடக்கியவை இந்த மாநாடுகள்.
  • தற்போதைய மாநாட்டில் நடைபெற்றுவரும் வாதப் பிரதிவாதங்கள் வெறும் பேச்சாகவும், வார்த்தை விளையாட்டுகளாகவும் இருந்தால், பூவுலகுக்கோ மக்களுக்கோ பெரிய பயனில்லை. நடைமுறைக்கு உகந்த மாற்றங்கள் இந்த முறை முன்னெடுக்கப்படும் என்று நம்புவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories