- வானிலை ஆய்வு என்பது ஆருடமோ எதிர்பார்ப்போ அல்ல. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில்தான் இந்தியாவின் விவசாயமும், பொருளாதாரமும் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. இந்த ஆண்டு வழக்கமான பருவமழை காணப்படும் என்கிற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்குப் பின்னால் பல வெளியிடப்படாத உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
- ஜூன் - செப்டம்பர் பருவமழைக் காலத்தில் 96 % சராசரி மழைப்பொழிவு காணப்படும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். சாதாரண மழைப்பொழிவு என்பது 96 % முதல் 104 % வரையிலான அளவு. அதனால் வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, சாதாரண மழைப்பொழிவில் மிகக் குறைந்த சராசரி அளவுதான் இந்த ஆண்டு இருக்கும் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- "ஸ்கைமெட்' என்பது தனியார் வானிலை ஆய்வு மையம். நல்ல செய்தியைத்தான் வழங்க வேண்டும் என்கிற அரசுத்துறை நிர்ப்பந்தம் எதுவும் இல்லாததால், "ஸ்கைமெட்' வழங்கும் முன்னறிவிப்புகள் சமீபகாலமாக முன்னுரிமை பெறுகின்றன. பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் வழக்கத்துக்கு அதிகமான மேல்மட்ட வெப்பம் காணப்படும் "எல் நினோ' ஆண்டு என்பதால், "ஸ்கைமெட்' மையத்தின் 94 % சராசரி மழைப்பொழிவு என்கிற அறிவிப்பு சற்று கவலையளிக்கிறது.
- பூமி வெப்பமயமாதலால் எதிர்பாராத பருவநிலை மாற்றங்கள் சமீபகாலமாக ஏற்படுகின்றன. வானிலை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வெளியிடும் அறிக்கைகளும்கூட உத்தரவாதம் உள்ளவையாக இல்லை. பருவம் தவறிய மழைப்பொழிவு, நீண்டு நிற்கும் வறட்சி, திடீரென்று குறைந்த கால அளவில் அதிக அளவு மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளாக நம்மைத் தாக்குகின்றன. அதனால், விவசாயிகள் நம்பிக்கையுடன் பயிரிடவும், அறுவடை செய்யவும், மகசூல் பெறவும் இயலாத நிலைமை இந்தியாவில் உருவாகியிருக்கிறது.
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருத்துப்படி, வழக்கமான பருவமழைக்கு 35 % வாய்ப்பும், வழக்கத்தைவிட குறைவான பருவமழைக்கு 29 % வாய்ப்பும் இந்த ஆண்டு காணப்படும்.
- இன்னொரு கருத்தையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது "எல் நினோ' நிலைமை காரணமாக ஜூலை மாதம் பருவமழைப் பொழிவு பலவீனப்படும் என்று தெரிவிக்கிறது.
- வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் எம். மகோபாத்ராவின் கருத்துப்படி, எல்லா "எல் நினோ' வருடங்களிலும் பருவமழை பொய்ப்பதில்லை. அதனால், மே மாத வானிலை நிலைமையைச் சார்ந்துதான் இந்த ஆண்டுக்கான மழைப்பொழிவைத் தீர்மானிக்க முடியும் என்கிறார் அவர்.
- இந்தியாவின் 40 % உற்பத்தியும், 51 % விவசாய நிலப்பரப்பும் பருவமழையை மட்டுமே நம்பி இருப்பவை. மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 70 % தென்மேற்குப் பருவமழையால் பெறப்படுகிறது. அதனால், வழக்கமான பருவமழைப் பொழிவில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும், உணவுப் பொருள்களின் விலையையும் பாதிக்கும்.
- குறிப்பாக, இந்த ஆண்டு, மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது. உலகளாவிய நிலையில் காணப்படும் பொருளாதார தேக்கமும், பணப்பெருக்கமும் போதாது என்று ரஷிய - உக்ரைன் போர் உணவு உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மோசமான பருவமழையை இந்த ஆண்டு இந்தியா எதிர்கொள்ளுமானால், உணவு உற்பத்தி குறைந்து கிராமப்புற வருமானமும் குறைந்தால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் அசாதாரணமானவையாக இருக்கும்.
- இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவத்தில் வழக்கத்தைவிட 6 % அதிகம் மழைப்பொழிவு காணப்பட்டது. ஆனால், இந்தியாவின் அரிசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி செய்யும் கங்கை சமவெளி மாநிலங்களான உத்தர பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் ஆகியவை 20 % குறைவான மழைப்பொழிவைப் பெற்றன. எட்டு மாநிலங்கள் மிகக் கடுமையான கோடையை எதிர்கொண்டன. மழைப்பொழிவு என்பது சராசரியை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதல்ல. இந்தியா போன்ற வெவ்வேறு தட்பவெப்ப நிலை உள்ள நாட்டில் சராசரி என்பது பெயரளவிலான கணக்காக மட்டுமே இருக்கும்.
- பருவமழைக் காலம் முழுவதும் சீரான மழைப்பொழிவு இருப்பதில்லை. கடந்த ஆண்டு 122 நாளில் 31 நாள் 20 %-க்கும் குறைவான மழைப்பொழிவும், 41 நாள் வழக்கத்தைவிட 20 % அதிகமான மழைப்பொழிவும் காணப்பட்டது. 1961 முதல் 2010 வரையிலான சராசரியை வைத்துப் பார்த்தால் பெரிய அளவிலான வேறுபாடுகளை பருவங்களுக்கு இடையில் பார்க்க முடிகிறது. சராசரி மழைப்பொழிவு மாநிலத்துக்கு மாநிலம், பகுதிக்குப் பகுதி வேறுபடுவதால் அதை ஓர் அளவுகோலாகக் கருதக் கூடாது.
- இந்திய வானிலை ஆய்வு மையமும் சரி, ஸ்கைமெட் வானிலை சேனலும் சரி வழக்கமான மழைப்பொழிவு இருக்காது என்று தெரிவிக்கின்றன. அதனால் வட இந்தியாவில் உள்ள அதிக உணவு தானிய உற்பத்தி செய்யும் பகுதிகள் பாதிக்கப்படலாம். அதை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமும், மாற்றுப் பாசன வசதியை ஏற்படுத்தியும் எதிர்கொள்வதற்கான திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் இப்போதே முன்னெடுக்க வேண்டும்.
நன்றி: தினமணி (19 – 04 – 2023)