- இலங்கை மலேசியாவுக்கு அடுத்தபடியாகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற நாடு மயன்மார் எனத் தற்போது அழைக்கப்படும் பர்மா. ஏறத்தாழ 5.50 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில், சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். கிட்டத்தட்ட இரண்டு சதவீதம். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த அந்நாட்டுக் குடிமக்களாகிய தமிழ் இளைஞர்களுடன் உரையாடியபோது, பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. மயன்மார் கல்வியறிவில் 90 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், அங்குள்ள தமிழர்களுடைய நிலை பரிதாபமாக உள்ளது. பலர் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை. இதற்கு முக்கியக் காரணம், படித்தாலும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்படுவதால், கல்வி கற்றும் பயனில்லை. இப்படி அங்கு வாழும் தமிழர்கள் பல்வேறு உரிமைகள் இல்லாமல் தவித்துவருகிறார்கள்.
தாங்கிப் பிடிக்கும் தாய்மொழி:
- சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்தம் மூதாதையர்கள் இந்நாட்டுக்குக் குடிபெயரத் தொடங்கினர். மேலும், சென்ற நூற்றாண்டில் ஏராளமானவர்கள் தென் தமிழகத்திலிருந்து சென்றனர். நெல் விளைவிப்பது, தேக்கு மரங்களை அறுத்து விற்பது, மீன்பிடிப்பு எனப் பணம் கொழிக்கும் தொழில்கள் மூலம் தமிழர்கள்தான் அந்நாட்டை வளப்படுத்தினர். தங்களையும் வளப்படுத்திக்கொண்டார்கள்.
- 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சியில், ஓர் இரவில் ‘உயரப்பர் எல்லாம் இழந்து ஓடப்ப’ராகி மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா எனப் பல எல்லை மாநிலங்கள் வழியாக, காடு மலைகளில் அலைந்து திரிந்து, வழியில் பலர் மாண்டு, இறுதியில் சிலர் மட்டும் மீண்டு தாயகம் வந்து சேர்ந்தார்கள். அப்படி வராமல் அங்கேயே தங்கியவர்களும் உண்டு. பர்மாவை அவர்கள் தங்களுடைய சொந்த நாடாகப் பாவித்து, பர்மியப் பெண்களை மணந்து, அந்நாட்டின் உயர்வு தாழ்வுகளில், தங்களுக்கும் பங்கு உண்டு என ‘மயன்மார் குடிமக்க’ளாக வாழ்ந்தார்கள். அவர்கள் சந்ததியினரும் வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அடையாளம், சுயமெல்லாம் இழந்து பர்மிய மொழி, கலாச்சாரம், வாழ்க்கை என உருமாற்றிக்கொண்டார்கள். அவர்கள் பெயர்கள்கூட பர்மியப் பெயர்கள்தான். எல்லாவற்றையும் இழந்தாலும் கெட்டியாகப் பிடித்திருப்பது, தங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியை மட்டுமே.
தொடரும் துயரம்:
- 1962இல் தொடங்கி 49 ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் பிடியில் பெரும் துயரை அடைந்தார்கள். இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலைதான். 2011க்குப் பிறகு நிலைமை மாறி 2015இல் ஆங் சான் சூச்சி விடிவெள்ளியாய்த் தோன்றி மக்களாட்சிக்கு வழிவகுத்தார். ஏனைய பர்மியர்களுக்கு மட்டுமல்ல, பூர்விகத் தமிழர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன. இனிமேல் நம் வாழ்க்கையில் எந்தவிதமான கவலைகளும் இருக்காது, சுதந்திரக் காற்றை நிம்மதியாகச் சுவாசிக்கலாம் என்று இருந்தபோது, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 1ஆம் தேதி இடியாய் வந்தது - மீண்டும் ராணுவ ஆட்சி.
- 2020 தேர்தலிலே ஆங் சான் சூச்சியின் கட்சி பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், அது தில்லுமுல்லு என்று சொல்லி ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஐக்கிய நாட்டுச் சபையும் அமெரிக்காவும் சம்பிரதாயக் கண்டிப்புகளுடன் நின்றுகொண்டன.
- கடந்த மூன்றாண்டுகளாக எப்போதும் இல்லாத அளவுக்கு அடக்குமுறை. மக்கள் அமைதியான முறையில், மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில், வீட்டிலுள்ள பாத்திரங்களை ஒன்றுடன் ஒன்று மோதி ஒலிக்கச் செய்து, எதிர்ப்பினைக் காந்திய வழியில் காட்டுகின்றனர். இதற்கெல்லாம் ராணுவம் அசருமா என்பது தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் பாதுகாப்புப் படை என்ற பெயரில் ராணுவத்துக்கு எதிராகப் புரட்சியாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
- தமிழர்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளை இழந்து, நாட்டின் நாலாந்தரக் குடிமக்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதில் பலர் இன்னும் அந்நாட்டுக் குடியுரிமை பெற வழியில்லாமல் நாடற்றவர்களாக இருக்கிறார்கள். உலகில் நாடற்றோர் என்று ஓர் இனம் அறியப்பட்டால், அதில் தமிழர்கள்தான் முதலிடம் வகிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பர்மியத் தமிழர்களுக்கு வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியானதால், தங்கள் முன்னோர்களின் தாய்நாடான தமிழ்நாட்டுக்கு வருவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். எந்த வேலையாக இருந்தாலும் - கீழ்மட்டப் பணிகளாக இருந்தாலும் செய்வதற்குத் தயாராக உள்ளனர்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- இன்றைக்குத் தமிழ்நாடு, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் திகழ்ந்தாலும், அரைத் திறன் மற்றும் திறன்களற்ற (Semi-skilled and unskilled) வேலைகளைச் செய்வதற்கு ஆள்கள் இல்லை. காரணம், தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வி கற்று சௌகரியமான வெள்ளுடைப் பணிகளுக்குச் சென்றுவிடுவதே. ஒருவேளை அப்படிப்பட்ட வேலைகள்தான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வந்தால் தயக்கம், கௌரவம் காரணமாக, சிங்கப்பூர், மலேசியா அல்லது வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர்.
- இந்நிலையில், தங்கள் கடும் உழைப்பை நல்கிட, பர்மியத் தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் திருப்பூர், சிவகாசி, ராணிப்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் ஆள்கள் போதாமையால் கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. கட்டுமான வேலைகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகளிலும் இதே நிலை. நம்முடைய வடக்கு, வடகிழக்கு சகோதரர்கள், மொழி தடங்கலாக இருந்தாலும் ஓரளவுக்கு நம்முடைய தேவையைப் பூர்த்திசெய்கிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்புகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
- மயன்மாரில் உள்ள தமிழ் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுப்பதற்கு, தமிழ் பயிற்றுநர்களை அனுப்பி அங்கேயே வகுப்பெடுக்கலாம். அந்நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதாலும் அதற்கான சாத்தியம் குறைவுதான். எனவே இணைய வழியிலாவது அதைத் தொடங்கலாம். தற்போது சிறிய அளவில் முயற்சிகள் நடப்பதாக அவ்விளைஞர்கள் கூறினர்.
- அடுத்ததாக, அங்குள்ள தமிழ் இளைஞர்கள் இந்தியாவுக்கு வந்து கல்வி பயில்வதற்கு, குறிப்பாகத் தொழிற்கல்வி பெறுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவர்கள் என்னதான் தொப்புள் கொடி உறவானாலும், வேற்று நாட்டினர். நினைத்ததுபோல் ரயில் ஏறி வர முடியாது.
அரசு செய்ய வேண்டியவை:
- மாணவர்களாக இருந்தால் விசா பெற்றுப் படிக்க வரலாம். வேலை செய்ய வேண்டும் என்றால், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை (Overseas Citizenship of India [OCI]) பெற்றிருக்க வேண்டும். அதற்கு, இந்நாட்டிலிருந்துதான் அவர்களது மூதாதையர்கள் அங்கு சென்றார்கள் என்பதற்கான ஆதாரமும், ரூ.25 ஆயிரம் இந்திய ரூபாயும் செலவு செய்ய வேண்டியுள்ளது. தேவையான ஆதாரம் இருந்தும், பணம் இல்லாததால் பலர் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நாடு அரசாங்கம், வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து வழி காண வேண்டும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை பெற வசதி இல்லாதவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும். அதை வட்டி இல்லா நீண்டகாலக் கடனாகக் கொடுக்கலாம்.
- தமிழ்நாட்டில் எத்தனையோ பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப முடியாமல் தவிக்கும்போது, இவர்களை அரசாங்கமோ, தொண்டு மற்றும் தொழில் நிறுவனங்களோ தத்தெடுத்துப் படிக்க வைக்கலாம். அவர்களைப் போன்றே, நாடற்றவர்களாக இலங்கையில் இருக்கும் லட்சக்கணக்கான மலையகத் தமிழர்களுக்கும் இத்திட்டத்தைக் கொண்டுசெல்வதன் மூலமாகத் தமிழ்நாட்டில் எல்லா மட்டத்திலும் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பார்கள்.
- மயன்மாரில் வாழும் தமிழர்களுக்கு, உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாளை நாம் இன்னொரு இன அழிப்பினைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 06 – 2024)