- வில்லியம் ஈட்ஸ் ஓர் அறியப்பட்ட ஐரிஷ் கவி. சில காலம் முன்பு ஒரு கல்லூரிச் சுவரில் அவரது மேற்கோள் என ஒன்றைக் கண்டேன்; மனதில் பதிந்துவிட்டது: ‘கல்வி என்பது வாளியில் நிரப்பப்படும் நீரல்ல, அது பற்றவைக்கப்படும் பெருநெருப்பு.’ கல்வி தேங்கி நிற்காது, அது தீயாய்ப் பரவும். இதுதான் கவிக்கூற்று.
- கல்வி மட்டுமல்ல, கல்வி சிறந்த சமூகத்தில் கல்வியை ஒருவர் பழித்துப் பேசினால் அதற்கான எதிர்வினையும் தீயாய்ப் பரவும். சமீபத்தில்கூட இதைப் பார்த்தோம். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓர் இளம் பெண் தனக்கு வசப்படாத கல்வியைப் பழித்தார். ஓர் எழுத்தாளரும் அதை வழிமொழிந்தார். வாசிப்பை முன்வைத்து இயங்கும் ஒருவர் படிப்பை இகழ்வதா? சமூக ஊடகர்கள் இந்த நிகழ்வைக் கடந்து போகத் தயாராக இல்லை. எதிர்க்குரல் எழுப்பினர். அது கடுமையாக இருந்தது. தீயாய்ப் பரவியது.
பொருந்தா வாதங்கள்
- இதில் வியப்படைய ஒன்றுமில்லை. கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் மாறினார்கள். ஆனால், ‘அனைவருக்கும் கல்வி’ எனும் இலக்கு மாறவில்லை. மதிய உணவு, இருமொழிக் கொள்கை, சத்துணவு, முட்டை, பஸ் பாஸ், சைக்கிள், மடிக்கணினி, நாப்கின், தொழிற்கல்வியில் உள்ஒதுக்கீடு, இல்லம் தேடிக் கல்வி, காலை உணவு என்று செங்கல் செங்கல்லாக அடுக்கி வைத்துக் கட்டப்பட்டு வருகிறது தமிழ்நாட்டின் கல்வி மாளிகை. சமூக ஊடகங்களில் எதிர்க்குரல் எழுப்பியவர்கள் இந்தக் கல்வி முறையின் பலனைத் துய்த்தவர்கள். பலரும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.
- கல்வியைப் பழித்தவர்கள் சில வாதங்களை முன்வைத்தார்கள். காமராஜரும் கருணாநிதியும் எந்தக் கல்லூரியில் படித்தார்கள்? எட்டாம் வகுப்பைக்கூட எட்டாதவர்தானே கமல்ஹாசன்? புதுமைப்பித்தன் என்ன பிஹெச்டி முடித்தவரா?
- படித்துச் சாதித்தவர் கோடி: இந்தக் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டே பதிலளித்துவிட்டார். 2022 ஜூன் மாதம் பள்ளிகள்திறக்கப்பட்ட அன்று மாணவர்களிடம் உரையாற்றிய போது அவர் சொன்னார்:
- “படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்ட முடியும்! ‘படிக்காமலே சாதிக்கலாம்’ என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை! இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையைக் கைகாட்டும் சூழ்ச்சி அது!”
- சமூக ஊடகங்களில் இந்தக் குரலைப் பலரும் எதிரொலித்தார்கள். ஓர் ஊடகர் ‘பிழைத்தவர்களின் சார்பு’ (survivorship bias) என்கிற கருதுகோளைப் பொருத்திக்காட்டினார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களில் வெற்றி ஈட்டியவர்கள் 0.01%தான் இருப்பார்கள். அவர்கள்தான் நம் கண்ணுக்குத் தெரிவார்கள்.
- ஆனால், எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர்களில் வாய்ப்புகளை இழந்தவர்கள்தான் மீதி 99.99% பேர். அவர்கள் நம் கண்ணில் படமாட்டார்கள். வெளிச்சத்தில் இருக்கும் ஆகச் சிறுபான்மையினரை உயர்த்திப் பிடிக்கும் இந்தக் கருதுகோள் ஆபத்தானது.
ஆளுமைகள் கற்ற கல்வி
- மு.கருணாநிதி 60 திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியவர். நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள் என இயங்கியவர். திருக்குறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் உரை எழுதியவர். ராமானுஜரின் வரலாற்றைத் தொலைக்காட்சித் தொடராக எழுதியவர். அவர் எழுதிக்கொண்டே, கற்றுக்கொண்டே இருந்தார்.
- காமராஜரைப் பற்றிய ஒரு நினைவை இந்த இடத்தில் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். இதைச் சொன்னவர் குமரி அனந்தன். அவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்கிற கட்சியைத் தொடங்கியிருந்த நேரம். எங்கள் கல்லூரி தமிழ் மன்றத்துக்கு வருகை தந்தார். கேட்டாரைப் பிணிக்கும் குமரி அனந்தனின் உரைக்குப் பிறகு கல்லூரி முதல்வரின் அறையில் ஒரு தேநீர் விருந்து நடந்தது. அப்போது ஒரு பேராசிரியர், இந்தி தெரியாமலேயே காமராஜரால் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராகத் திகழ முடிந்ததே என்று வியந்தார்.
- குமரி அனந்தன் மெல்லிய புன்முறுவலுடன் பதிலளித்தார் - “பெருந்தலைவருக்கு இந்தி தெரியும், ஆங்கிலமும் தெரியும். ஆனால் பொதுவெளியில் தமிழில் மட்டுமே பேசினார். தனது இந்தியும் ஆங்கிலமும் பொதுவெளியில் பயன்படுத்தும் தரத்தில் இல்லை என்று அவர் கருதியிருக்கலாம்” - எனக்கு வியப்பாக இருந்தது. காமராஜர் கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்.
- அடுத்து, கமல்ஹாசன். திரைத் துறையில் அவர்சாதித்தவை அநேகம். அவர் ஒரு தீவிரமான வாசகரும்கூட. சென்னைப் புத்தகக் காட்சிகளின்போது தமிழின் தலைசிறந்த நூல்களை அவர் பரிந்துரைக்கிறார். அந்த நூல்கள் பரவலாக வாசிக்கப்படுகின்றன.
- அடுத்து, புதுமைப்பித்தன். கல்விப் பழிப்பாளர்கள் சொன்னதுபோல் அவர் பிஹெச்டி பட்டம் பெற்றவரல்லர். ஆனால், பி.ஏ. பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் சரளமாகப் படிக்கவும் எழுதவுமான ஆற்றலைப் பெற்றிருந்தார். பன்னாட்டுப் படைப்பு களை மொழிபெயர்த்தவர்.
மணற்கேணி
- வாழ்நாளெல்லாம் கற்றல் என்பது ஆளுமைகளுக்கு மட்டுமல்ல, நம் எல்லாருக்குமானது. பல மேலை நாடுகளிலும் வளர்ச்சியடைந்த கீழை நாடுகளிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் முதலான தொழில் துறைகளில் பணியாற்றுவோர் தங்கள் தொழில் சார்ந்த கழகங்களில் அங்கத்தினர்களாக வேண்டும்.
- அந்த அங்கத்துவத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும். அப்போது முந்தைய ஆண்டில் தொழில் சார்ந்து எத்தனை மணி நேரம் கற்றோம் என்கிற விவரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குத் தொடரும் தொழிற்கல்வி மேம்பாடு (Continuing Professioanl Development- CPD) என்று பெயர்.
- கருத்தரங்குகள், களப்பயிற்சிகள், தொழில்ரீதியான சஞ்சிகைகள் போன்றவை இந்தத் தொடர் கல்விக்கான சாளரங்களாக அமையும். இதனால், கல்விப் புலத்திலும் தொழிற் களத்திலும் நிகழும் முன்னேற்றங்களை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். தொடர் கல்வியால் தொட்டனைத்து ஊறும் மணற்கேணிபோல் அறிவு பெருகும்.
- வள்ளுவரின் இந்தக் கூற்றுக்கு இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் இடம்பெறும் மேற்கோளே சான்றாக அமைந்துவிட்டது. என் நினைவில் தங்கியிருந்த மேற்கோளைச் சரிபார்க்க கூகுளை விரித்தேன். எண்ணற்ற தளங்களின் சுட்டிகள் வரிசை கட்டி நின்றன. சில மேற்கோளுக்கு விளக்கமளித்தன. சில தளங்களில் மேற்கோள் அழகுற எழுதப்பட்டிருந்தது, அவற்றைத் தரவிறக்கி அச்சடித்துக் கொள்ளலாம். இன்னும் சில அறிவார்ந்த தளங்களைத் திறந்தபோதுதான், அந்த உண்மை தெரிந்தது.
- இந்தக் கூற்றுக்கு உரிமையாளர் வில்லியம் ஈட்ஸ் அல்லர். அவரது அனைத்துப் படைப்புகளையும், அலசி இந்த முடிவுக்கு வந்திருந்தனர் ஆய்வாளர்கள். வாட்ஸ்அப்பில் பல கதைகளும் மேற்கோள்களும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் பெயரோடு இணைக்கப்பட்டு வலம் வருவதைப் பார்க்கிறோம். அப்படி யாரோ ஒருவர் மேற்படிக் கூற்றையும் ஈட்ஸையும் இணைத்துவிட்டார். கூற்றில் வெம்மை இருக்கிறது. கவிக்குப் புகழ் இருக்கிறது. ஆகவே, அவை ஒட்டிக்கொண்டன. ஆனால், அறிவுத் தேடலில் உண்மைகள் வெளிவரும்.
- நமது பிள்ளைகள் கல்வி எனும் பந்தத்தை ஏந்த வேண்டும். அந்த நெருப்பில் அவர்கள் அறிவு விசாலமாகும். பொய்மைகள் பொசுங்கும். சுயமரியாதை வளரும். வாழ்க்கைத் தரம் உயரும். கல்விச் சாலைகளிலிருந்து வெளியேறிய பின்னரும் அவர்கள் அந்தப் பந்தத்தைக் கைவிடலாகாது. கல்வி எனும் நெருப்பு நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் முழுமையும் பற்றிப் படர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 - 10 – 2023)