TNPSC Thervupettagam

பல்பீர் சிங் சீனியர்- இந்திய ஹாக்கியின் தங்க மகன்!

May 27 , 2020 1698 days 836 0
  • இந்திய விளையாட்டு வீரர்களில் தலைசிறந்தவர்களுள் ஒருவரான பல்பீர் சிங் சீனியர் (97) மறைவானது, இந்தியாவின் ஹாக்கி வரலாற்றில் ஒரு தங்க நட்சத்திரத்தின் உதிர்வாகும்.
  • பஞ்சாபில் 1923-ல் பிறந்த பல்பீர் சிங்குக்கு இளம் வயதில் அவருடைய தந்தை ஒரு ஹாக்கி மட்டையைப் பரிசாகக் கொடுத்ததிலிருந்து ஹாக்கி மீதான அவரது காதல் தொடங்கியது.
  • 1936-ல் பிரிட்டிஷ் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதைப் பற்றிய நியூஸ் ரீலைப் பார்த்த பிறகு, அது மேலும் அதிகரித்தது. தியான் சந்தின் ஹாக்கி ஆட்டத்தால் பல்பீர் சிங் பெரிதும் கவரப்பட்டார்.
  • பிரிபடாத இந்தியாவின் லாஹூரில் இருந்த கல்லூரியில் பல்பீர் சிங் படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய ஹாக்கி திறமையை ஹர்பைல் சிங் என்ற பயிற்சியாளர் அடையாளம் கண்டுகொண்டார்.
  • அவரது வற்புறுத்தலின்பேரில் அமிர்தசரஸில் உள்ள கல்லூரிக்கு சிங் மாற்றிக்கொண்டு வந்தார். சிங்கிடம் உள்ள திறமையை ஹர்பைல் சிங் மேலும் பட்டை தீட்டினார்.
  • ஆரம்பத்தில் கோல் தடுப்பாளராக இருந்த பல்பீர் சிங், பிறகு நடு-முன்கள வீரரானார். பல்பீர் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலுள்ள ஹாக்கி அணியில் விளையாட ஆரம்பித்து, கூடிய சீக்கிரமே அதன் அணித் தலைவரானார்.
  • அவரது தலைமையில் 1943, 44, 45 ஆகிய ஆண்டுகளில் அனைத்திந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி கோப்பையை பஞ்சாப் பல்கலைக்கழக அணி வென்றது.

முதல் ஒலிம்பிக்

  • பல்பீர் சிங்கின் ஆட்டத் திறனைப் பார்த்துவிட்டு, பஞ்சாப் காவல் துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த சர் ஜான் பென்னட் அவரை பஞ்சாப் போலீஸ் அணிக்கு விளையாட வருமாறு அழைத்தார்.
  • உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியைத் தருவதாகவும் கூறிப் பார்த்தார். சுதந்திரப் போராட்ட வீரரான தன் தந்தையைப் பல முறை கைதுசெய்த பிரிட்டிஷ் இந்தியக் காவல் துறையின் மேல் வெறுப்புடன் இருந்த சிங் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
  • அதையடுத்து, ஜான் பென்னட் காவலர்களை அனுப்பி பல்பீர் சிங்கைக் கைதுசெய்யச் சொன்னார். வேறு வழியின்றி பஞ்சாப் காவல் துறை அணியில் விளையாடச் சம்மதித்தார். அந்த அணிக்கு 1946, 1947, 1949, 1950, 1951, 1954 ஆகிய ஆண்டுகளில் தேசிய அளவில் வெற்றிக் கோப்பையைத் தேடித் தந்தார்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நடக்கவிருந்த (1948) முதல் ஒலிம்பிக் போட்டியில் விளையாட பஞ்சாபிலிருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படாததை அடுத்து தான் தேர்ந்தெடுக்கப்படுவேன், இந்தியாவுக்காகக் கோப்பை வென்று தருவேன் என்ற கனவுகளுடன் இருந்த பல்பீர் சிங் அதிர்ச்சியடைந்தார்.
  • எனினும், பிரிட்டிஷ் இந்திய அணியில் முன்பு விளையாடிய பிரிட்டிஷ்கார வீரர் டிக்கி காரின் தலையீட்டால் 20 பேர் அடங்கிய குழுவில் பல்பீர் சிங் தேர்வானார்.
  • எனினும், அவருக்கு முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு, ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டதால் அர்ஜெண்டினாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாட பல்பீர் சிங்குக்கும் வாய்ப்பு கிடைத்தது.
  • அந்தப் போட்டியில் பல்பீர் சிங் ஒரு ஹாட்-ட்ரிக் உட்பட 6 கோல்கள் அடித்தார். விளைவாக, 9-1 என்ற கணக்கில் இந்தியா அர்ஜெண்டினாவை வென்றது.
  • எனினும், அரையிறுதியில் விளையாட பல்பீர் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது பிரிட்டனுக்கான இந்தியத் தூதராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனனின் குறுக்கீட்டால் பிரிட்டனுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட பல்பீர் சிங்குக்கு இடம் கிடைத்தது.
  • தான் அதிர்ஷ்டத்தால் அணியில் இடம் கிடைக்கப்பெற்ற வீரரல்ல என்பதை இறுதிப் போட்டியில் பல்பீர் சிங் நிரூபித்தார். இந்திய அணி அடித்த நான்கு கோல்களில் இரண்டு பல்பீர் சிங்கின் மட்டையிலிருந்து புறப்பட்டவை.
  • இதன் விளைவாக, அதற்கு முந்தைய ஆண்டுவரை எந்த நாட்டால் ஆளப்பட்டோமோ அந்த நாடான பிரிட்டனை இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்று தங்கத்தைக் கைப்பற்றியது.
  • “அன்றைய தினம் மூவர்ணக் கொடி ஏற்றப்படும்போது, எனது இதயம் கொஞ்சம் வேகமாகத் துடித்தது, எனது பெருமிதம் அதிகரித்தது, கண்கள் குளமாகின. அது வெறும் பதக்கமல்ல - உலக அரங்கில் இந்தியா தனக்கான இடத்தைக் கோரும் தருணம்.
  • அதைச் செய்துமுடிக்க நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். எவ்வளவு பெரிய கௌரவம் எங்களுக்கு. அந்த உணர்வை அனுபவிக்கத்தான் முடியும், ஒருபோதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று அது குறித்து பல்பீர் சிங் பின்னாளில் நினைவுகூர்கிறார்.
  • அதன் பிறகு, பல்பீர் சிங்குக்கு ஏறுமுகம்தான். ஃபின்லாந்தில் நடைபெற்ற 1952 ஒலிம்பிக் போட்டிகளில் தொடக்க நிகழ்வில் இந்தியாவின் தேசியக் கொடியைச் சுமந்துசென்றவர் பல்பீர் சிங்தான். அந்த ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை இந்தியா 6-1 என்ற கணக்கில் வென்றது.
  • இந்தப் போட்டியில் பல்பீர் சிங் 5 கோல்கள் அடித்தார். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச கோல்களாக இன்றுவரை அவைதான் நீடிக்கின்றன். இது கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்திருக்கிறது.
  • 1956-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பல்பீர் சிங் அணித் தலைவராக இருந்து இந்தியாவுக்குத் தங்கம் வென்று தந்தார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • அதற்கு அடுத்த ஒலிம்பிக்கில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தானிடம் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பல்பீர் சிங் வீரராகப் பங்கேற்பது 1958-ம் ஆண்டுடன் நின்றுபோனாலும் இந்திய ஹாக்கிக்கு அவரது பங்களிப்பு தொடரவே செய்தது.
  • 1971 உலகக் கோப்பை இந்திய அணிக்கு மேலாளராகவும் பயிற்சியாளராகவும் இருந்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தார். 1975 உலகக் கோப்பையில் இந்திய அணிக்குத் தங்கத்தை வென்று தந்தார்.

மிகச் சிறந்த ஒலிம்பியர்

  • பல்பீர் சிங்குக்கு இந்திய அரசு 1957-ல் பத்மஸ்ரீ விருதளித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் பல்பீர் சிங்தான்.
  • ‘மிகச் சிறந்த சீக்கிய ஹாக்கி விளையாட்டு வீரர்’ என்ற விருது சீக்கியர்களால் வழங்கப்பட்டபோது, விளையாட்டையும் தன்னையும் மத அடையாளத்துக்குள் அடைக்கக் கூடாது என்று தன் கண்டனத்தை மென்மையாகத் தெரிவித்தார்.
  • ஒலிம்பிக் கமிட்டியால் மிகச் சிறந்த 16 ஒலிம்பியர்கள் 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதில் இடம்பிடித்த ஒரே இந்தியர் பல்பீர் சிங்தான்.
  • உத்வேகமும் வேட்கையும் இருந்தால் விளையாட்டில் உயரத்துக்குப் போகலாம் என்ற தன்னம்பிக்கையை ஏராளமான விளையாட்டு வீரர்களுக்கு பல்பீர் சிங்கின் வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய மறைவுக்குப் பிறகு செலுத்தப்படும் அஞ்சலிகள் அதைத்தான் உணர்த்துகின்றன.

நன்றி: தி இந்து (27-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories