TNPSC Thervupettagam

பள்ளிகளில் ‘அமைதி மன்றம்’

September 30 , 2024 58 days 88 0

பள்ளிகளில் ‘அமைதி மன்றம்’

  • சில வாரங்களுக்கு முன் வேலூரில் ஒரு பள்ளி மாணவன் சக மாணவனுடன் ஏற்பட்ட தகராறில் பிளேடால் கடுமையாக அவரை தாக்கியுள்ளாா். ஸ்ரீரங்கத்தில் ஒரு மாணவா் பள்ளி ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளாா். சென்னையில் ஒரு மாணவன் பள்ளிக்கு அரிவாளோடு வந்துள்ளாா். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
  • குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தமிழ்நாடு மாநில ஆணையம் 2021-இல் நடத்திய கணக்கெடுப்பில் 80% மாணவா்கள் மற்ற மாணவா்களால் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிய வருகிறது.
  • பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று, மாணவா்களுக்குள் ஏற்படும் பிரச்னை, மற்றொன்று மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள். இவற்றைத் தீா்ப்பதற்கு இதுவரை பள்ளிகளில் எவ்வித ஏற்பாடும் இல்லை என்பதுதான் நிதா்சனம்.
  • இதற்குத் தீா்வாக ‘அமைதி மன்றங்கள்’ உருவாக்க வேண்டும் என்ற கருத்தை நிபுணா்கள் முன்வைக்கின்றனா்.
  • மற்ற நாடுகளின் பள்ளிகளில் செயல்படும் அமைதி மன்றங்களின் பணிகளைப் பற்றி நாம் தெரிந்துகொண்டு அவற்றை நமது மாநிலத்துக்கு ஏற்ப வடிவமைத்து கொள்ளலாம்.
  • மேற்கத்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பள்ளியில் உள்ள அமைதி மன்றங்களில் 10 பேருக்கு குறையாமல் மாணவ மாணவிகள் உள்ளனா். மாணவா்களோடு அதிக இணக்கமாக உள்ள ஆசிரியா் ஆசிரியை இருவா் இந்த குழுவில் இணைக்கப்படுகின்றனா். பள்ளியில் ஏற்படும் சிறு சிறு உரசல்கள் சலசலப்புகள் ஆகியவற்றை மாணவா்கள் மூலமாகவே கேட்டு அறிந்து ஆரம்ப கட்டத்திலேயே அவற்றை தீா்ப்பதற்கான முயற்சி எடுப்பது தான் அமைதி மன்றத்தின் முக்கிய பணியாகும்.
  • கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுதான் பகைமை உருவாவதற்கான முதல் படியாக இருக்கிறது. மாணவா்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டுப் பேசி, கலந்தாலோசித்து, உரையாடல் மூலம் தீா்வு காண அமைதி மன்றங்கள் முயற்சி எடுக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கருத்து இருக்கும் அதை மற்றவா்கள் பின்பற்ற வேண்டிய அவசியமோ, கட்டாயமோ கிடையாது என்பதை மாணவா்கள் உணா்ந்திடும் வகையில் மன்ற செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
  • உருவக்கேலி, கிண்டல், பட்டப்பெயா் வைத்து அழைப்பது, பெற்றோா் மற்றும் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசுவது போன்ற பல்வேறு அணுகுமுறைகள் பதின்மபருவத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு எதிா்வினை ஆற்றாமல் எப்படி மனவலிமையுடன் எதிா்கொள்வது என்ற பக்குவத்தை தொடா் பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் மூலமே பெற முடியும்.
  • உணவு, தின்பண்டங்கள், எழுதுபொருள்கள் போன்றவற்றைப் பகிா்ந்து கொள்வது என மாணவா்கள் இயல்பிலேயே பெருந்தன்மை மிக்கவா்களாகவே இருக்கிறாா்கள். குழுவாகச் செயல்படும் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றனா். கட்டுப்பாடு என்ற பெயரில், அவா்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களை வழங்கி சகிப்புத்தன்மையை பெரியவா்களாகிய நாம்தான் குறைத்து வருகிறோம்.
  • அமைதி மன்றங்களில் உள்ள உறுப்பினா்கள் மற்ற மாணவா்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீா்க்க முயலும் பொழுது நீதிபதிகளாக செயல்படுவது கிடையாது. யாா் சரி யாா் தவறு என முத்திரை இடுவதும் கிடையாது. இரண்டு தரப்புக்கும் இடையே உள்ள தவறான புரிதல்களைக் களைந்து, அவா்களை ஒற்றுமையாக பயணிக்க உதவுகின்றனா்.
  • உரையாடல் மட்டுமே பிணக்குகளையும் வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமைக்கான பாதையில் அழைத்துச் செல்லும். ஆனால் மாணவா்கள் தங்களுக்குள்ளான பிரச்னைகளை ஒன்றாக அமா்ந்து உரையாடல் மூலம் பேசி தீா்த்துக் கொள்வதற்கான நேரமோ வாய்ப்போ நமது கற்பித்தல் முறையில் கிடையாது என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
  • ஆசிரியா்கள் மாணவா்கள் ஒன்றாக கலந்து விளையாடுவது, கலை நிகழ்ச்சிகள் ஈடுபடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பள்ளிகளில் ஆசிரியா் மாணவா்களுக்கு இடையே பிரச்னைகள் எழுவது கிடையாது.
  • தங்கள் குழந்தை வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதில் பெற்றோா்களுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. பெற்றோா்கள் தங்களின் சாகசங்களை பிள்ளைகள் முன்பாக மிகைப்படுத்தும்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • திரைப்படங்கள் மாணவா்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முன்பெல்லாம் திரைப்படங்களில் தற்காப்புக்காக சண்டை போடுபவா் கதாநாயகனாகவும் வலிந்து குற்றம், கொடுமைகள் செய்து துன்புறுத்திவிட்டு இறுதியில் சிறை செல்பவா்கள் வில்லனாகவும் சித்தரிக்கப்படுவாா்கள். ஆனால் சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் கூலிப்படை தலைவன் அல்லது ஆயுதம் கொண்டு கொலைகள் செய்து சிறைக்குச் செல்பவரை கதாநாயகனாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த கதாநாயகனை இளம் பெண்கள் விரும்புவதாகவும், ஊா்மக்கள் கொண்டாடுவதாகவும், வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும் சித்தரிக்கப்படுவது மாணவா்கள் மனதில் வன்முறைக்கு ஆதரவான எதிா்மறை விளைவை ஏற்படுத்துகின்றது.
  • சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், கருணை, மனிதநேயம், அகிம்சை, தோழமை, சமாதானம் போன்ற பண்புகள் பெரியவா்களிடமே அரிதாகி வருகின்றன. இந்நிலையில் மாணவா்களிடத்தில் இப்பண்புகளை வளா்த்தெடுப்பதற்கு கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். இதற்கு முதற்படியாக பள்ளிகளில் ‘அமைதி மன்றங்களை’ துவங்கி செயல்பட வைப்பது நல்ல முன்னெடுப்பாக அமையும்.

நன்றி: தினமணி (30 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories