TNPSC Thervupettagam

பள்ளிக் கல்விக்கு நிதி: தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்!

September 2 , 2024 136 days 226 0

பள்ளிக் கல்விக்கு நிதி: தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்!

  • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.), தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு விடுவிக்காத விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டத்துக்கு நிதி வழங்க மறுப்பதாக மத்திய அரசின் மீது விமர்சனமும் எழுந்திருக்கிறது.
  • ‘அனைவருக்கும் கல்வி’ திட்டம், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக்ஷா அபியான், ஆசிரியர் கல்வித் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி 2018-19இல் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ என்கிற திட்டம் அமல்படுத்தப்பட்டது.
  • இதன்படி மழலையர் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சமமான, தரமான கல்வி வழங்குவது, பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், புதிய கல்வி முயற்சிகள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட தேவைக்கு ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கிவருகிறது.
  • இத்திட்டத்தின்படி, 60% நிதிக்கு மத்திய அரசும், 40% நிதிக்கு மாநில அரசும் பொறுப்பு. 2024-25ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டுக்கான நிதியாக ரூ.3,586 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு (60%) தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் வழங்கப்பட வேண்டும். முதல் தவணையாக ரூ.573 கோடி ஜூன் மாதமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்தும், இதுவரை அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
  • புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 2022 இல் தொடங்கப்பட்ட ‘பி.எம். ஸ்ரீ பள்ளிகள்’ என்கிற திட்டத்தில் இணைந்தால்தான், எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு நிதி வழங்க முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நிபந்தனை விதிப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
  • கடைசி இரண்டு தவணைகள் வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், “புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் தருவது நியாயம் இல்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இந்நிலையில், “பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. அதன்படி அத்திட்டத்தில் இணைய வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
  • ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்படி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியைப் பெறுவதற்கு பி.எம். ஸ்ரீ திட்டத்தில் சேர வேண்டும் என்பதை முன்நிபந்தனையாக எப்படி விதிக்க முடியும் என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது.
  • மேலும், கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. விரும்பிய கல்விக் கொள்கையைப் பின்பற்றும் உரிமை மாநில அரசுக்கும் உண்டு. பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைவது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் பேசி முடிவு செய்துகொள்ள முடியும். ஆனால், ஏற்கெனவே நிதி உதவி வழங்கப்பட்டுவரும் ஒரு திட்டத்துக்கு அத்திட்டக் காலம் முடியும் வரை நிதி உதவியைத் தங்கு தடையின்றி உரிய நேரத்தில் வழங்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
  • இதில் தாமதம் செய்வது அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்கிற அடிப்படையுடன் தொடங்கப்பட்ட எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். மத்திய அரசு இதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories