TNPSC Thervupettagam

பள்ளிக் கல்வியில் ஓர் அமைதிப் புரட்சி

July 8 , 2024 11 hrs 0 min 4 0
  • உள்ளூர்ச் சமூகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என முத்தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற பள்ளிகளின் வளர்ச்சி‌ தனித்துவம் மிக்கதாக விளங்கும். இதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறப்பான வெற்றிகளுக்கு அடித்தளமிட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

புத்துயிர்ப்புடன்...

  • 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், 2011இல் ‘தமிழ்நாடு குழந்தைகளின் இலவச - கட்டாயக் கல்வி உரிமை விதிகள்’ உருவாக்கப்பட்டன. அதன் வழியாகப் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாட்டுக்கு வந்தது. கல்வி உரிமைச் சட்ட அமலாக்கத்தை உறுதிசெய்தல், பள்ளியின் நிதி - வள மேலாண்மை, கல்விக்கான தர உத்தரவாதம், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுதல், ஆசிரியர் மாணவர் வருகையை உறுதிசெய்தல், பள்ளிச் செயல்பாட்டில் சமூகப் பங்கேற்பு, விதிமுறை கண்காணிப்பு, பள்ளியின் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் பாலமாகச் செயல்படுதல் எனப் பல முக்கியக் கடமைகளை நிறைவேற்றப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. நோக்கங்கள் மிக உயர்வானதாக இருந்தாலும், பல பள்ளிகளில் அவை செயலற்றுக் கிடந்தன. தற்போதைய மாநில அரசு பொறுப்பேற்றது முதல், பள்ளி மேலாண்மைக் குழு, தனது முழுப் பரிமாணத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுவை, மறு கட்டமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அதன் அப்போதைய திட்ட இயக்குநர் சுதன், பள்ளிக் கல்வியின் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரையும் அழைத்து, மூன்று நாள் அடிப்படைப் பயிலரங்கம் ஒன்றை நடத்தினார்‌. அவர்கள் முன்வைத்த கருத்துக்களை முழுமையாக உள்வாங்கினார். அவற்றின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மீட்டுருவாக்கம் செய்தார்.
  • அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவந்தன. பள்ளிக் கல்வியில் ஆர்வமுள்ள தனிநபர்கள், கல்விச் செயல்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரையும் இணைத்துக்கொண்டு உயிர்த் துடிப்புடன் அவை செயல்பட்டுள்ளன.
  • 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரை, மாதம் ஒருமுறை முதல் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் கூடுவது உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உறுப்பினர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், 16 முறை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டப்பட்டது. 23.2 லட்சம் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் பங்குபெற்றுள்ளனர். 80% பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தங்கள் வருகையை உறுதிசெய்துள்ளனர்.
  • இந்தக் கூட்டங்கள் வழியே 3,61,450 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‌ இதில் 2,34,650 தீர்மானங்கள் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பானவை. கற்றல் சார்ந்து 57, 955 தீர்மானங்கள், மாணவர்களின் சேர்க்கை - சேர்க்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக 52,674 தீர்மானங்கள், பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த தீர்மானங்கள் 26,450.
  • இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 75,863 தீர்மானங்களுக்குத் தீர்வு கிட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு, தனிநபர்கள், கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்பு ஏற்று இதைச் சாதித்துள்ளனர். பள்ளிக் கல்வியில் இது ஓர் அமைதிப் புரட்சி எனலாம்!

மறுகட்டுமானம்:

  • கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டப்பட்ட இந்த வெற்றிகளோடும், கிடைத்திருக்கும் அனுபவங்களோடும் வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டுமானம் செய்யும் பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.‌
  • அதற்கான அரசு ஆணையைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்ய, நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்தல், பள்ளிக் கல்வியில் ஒரு பெரும் ஜனநாயகத் திருவிழா. உள்ளூர்ப் பள்ளிக் கல்வியை ஜனநாயகப்படுத்தி, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த எடுக்கப்படும் தொடர் முயற்சி.
  • அரசு வெளியிட்டுள்ள மறு கட்டுமான ஆணை விரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெறும் 24 பேரும் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள் என விரிவாகப் பேசுகிறது அந்த ஆணை. பள்ளி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் எந்தெந்த விகிதாசாரத்தில் இருக்க வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. பெற்றோர் பிரதிநிதிகளே பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் வர முடியும். அதிலும், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • பெற்றோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 12 பேர் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெற வேண்டும்‌. அதில், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், நலிவடைந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக, குறைந்தபட்சம் ஏழு பெண்கள் மேலாண்மைக் குழுவில் இடம்பெற வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருவர் இருத்தல் அவசியம். அதில் ஒருவர், பெண்ணாக இருக்க வேண்டும். ஊராட்சி மன்றத்தின் எல்லாப் பிரதிநிதிகளும் மேலாண்மைக் குழுவில் இடம்பெற்றுவிட முடியாது.
  • ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி அமைந்திருக்கும் வார்டு உறுப்பினர் அல்லது அப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் குடியிருக்கும் பகுதி வார்டு உறுப்பினர் அல்லது பள்ளியின் பெற்றோர் வார்டு உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் - பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெற முடியும். சுய உதவிக் குழுப் பெண்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • அதிலும்கூட சிறந்தவர்களை எப்படித் தேர்வுசெய்வது என்பதற்கும் வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதே பள்ளியில் குறைந்தது இரண்டு வருடம் படித்து, தங்கள் பிள்ளைகளையும் அதே பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இருவர் பள்ளி மேலாண்மைக் குழுவில் அங்கம் வகிக்கலாம். முன்னாள் மாணவர் ஒருவரும் இதில் இடம்பெறுவார்.
  • பள்ளி மேலாண்மைக் குழுவின் மறு கட்டுமானத்துக்கு நாள் குறித்து, பள்ளியிலிருந்து அனுப்பப்படும் சுற்றறிக்கைகள், அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சென்றுசேரும் வகையில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதி அனுப்புதல், வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துகொள்ளுதல், துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், அதிக மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி விளம்பரங்களைச் செய்தல் எனப் பல்வேறு செயல்பாடுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படவிருக்கும் முந்தைய நாள் செய்ய வேண்டிய முன்தயாரிப்புகள், தேர்வு நாளன்று என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என அனைத்து விவரங்களும் அரசின் அந்த உத்தரவிலேயே வழங்கப்பட்டுள்ளன.
  • பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் எப்படித் தேர்வு செய்யப்பட வேண்டும், இப்பொறுப்புகளுக்கு வர விரும்புவோர் எவ்வாறு முன்மொழியப்பட வேண்டும், எவ்வாறு வழிமொழியப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இறுதியாக மேலாண்மைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி, அவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல், இறுதியாக - பள்ளி மேலாண்மைக் குழு ஒளிப்படம் எடுத்துக்கொள்ளுதல் வரை பள்ளி மேலாண்மைக் குழுவைப் புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல் நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது. குழுவில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இடையில் யாரேனும் நின்றுவிட்டாலோ, விலகிக்கொண்டாலோ, அந்த இடத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளின் செயல்பாடு, அதன் வெற்றி, பள்ளிக்கல்வி வரலாற்றில் ஒரு புதிய முன்முயற்சி. அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, பள்ளி மேலாண்மைக் குழுவின் தரத்தை உயர்த்திப்பிடிக்கவும், வலிமைப்படுத்தவும், தற்போதைய முயற்சிகள் நிச்சயம் பலன் அளிக்கும். இதன் விளைவாக, பள்ளிக் கல்வியின் வளர்ச்சியில், தரத்தில் வியத்தகு முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் உருவாக வழிவகை கிட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories