TNPSC Thervupettagam

பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையா

February 4 , 2024 341 days 317 0
  • சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மூன்று சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பில் நாம் எந்த அளவுக்கு அசட்டையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுமியர் மூவரும் 7 முதல் 10 வயதுக்கு உள்பட்டவர்கள். சாக்லெட் தருவதாக ஆசை காட்டப்பட்டு அவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் குற்றச் செயலுக்கு விவரம் அறியாத எட்டு வயதுச் சிறுவன் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
  • குற்றச் சம்பவம் பள்ளிக்கு அருகில் இருக்கும் இடத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளியிலிருந்துதான் அந்தச் சிறுமியர் குற்றவாளியால் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். பள்ளி தம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கிருந்து ஒரு குழந்தையை மிக எளிதாகத் தாங்கள் நினைக்கிற இடத்துக்குக் குற்றவாளிகளால் அழைத்துச் சென்றுவிட முடியும் என்றால், குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது? ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்தாலும் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டியது பள்ளியின் பொறுப்புதானே.
  • குற்றவாளியின் மிரட்டலுக்குப் பயந்துதான் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையை வெளியே சொல்லவில்லை. இப்படியான சூழ்நிலையை மாற்றியமைக்க வேண்டியது ஆசிரியர் - பெற்றோரின் கூட்டுப் பொறுப்பு. அனைத்துப் பெற்றோரும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்துப் போதிய விழிப்புணர்வோடு இருப்பார்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத சூழலில், ஆசிரியர்களே அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். குழந்தைகள் என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற அடிப்படைப் பாடங்களில் தொடங்கித் தங்களுக்கு நேர்கிற அனைத்தையும் ஒளிவு மறைவின்றித் தங்களிடமோ பெற்றோரிடமோ பகிர்ந்துகொள்ளும் அளவுக்குக் குழந்தைகளைத் தயார் செய்ய வேண்டும். காரணம், பாடங்களைச் சொல்லித் தருவதோடு பள்ளியின் கடமை முடிந்துவிடுவதில்லை. பெற்றோரும் பள்ளியில் நடந்தவற்றைக் குழந்தைகளிடம் தினமும் கேட்டறிய வேண்டும். இப்படிச் செய்தாலே பள்ளியிலும் அதைச் சுற்றியும் நடக்கிற பெரும்பாலான குற்றங்களைத் தடுத்துவிடவோ கண்டறியவோ முடியும்.
  • குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் காவல் துறைக்கும் சமூகத்துக்கும் பொறுப்பு உண்டு. அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவராவது, ‘ஏன் பள்ளிக் குழந்தைகள் இங்கே வருகிறார்கள்?’ என்று கேட்டிருந்தால் குற்றம் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கலாம். பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கத்தான்போக்சோசிறப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குழந்தைகளை அச்சப்படுத்தாத சூழலில் விசாரணை நடைபெறுவது அவசியம். குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்கப்படுவதும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பெறுவதும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும்.
  • குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அவர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குலைத்துப்போடும். வருங்காலத்தைக் கட்டமைப்பதில் அவர்கள்தாம் முக்கியப் பங்கு வகிக்கப்போகிறார்கள் என்பதால் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு தீவிரத்துடன் செயலாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories