TNPSC Thervupettagam

பழமையான அணைக்கட்டுகளின் பிரச்சினை

February 4 , 2021 1390 days 748 0
  • அணைக்கட்டுகளும் நீர்த்தேக்கங்களும் எதிர்காலத்தின் நீர்த் தேவையைப் பாதுகாப்பதற்கானவை என்று நம்பப்படுகின்றன. எனினும், தரவுகளும் ஆய்வுகளும் அவை நமது நீர்ப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும் என்று காட்டுகின்றன. எப்படி என்று பார்ப்போம்.
  • இந்தியாவின் அணைக்கட்டுகள் பலவும் தற்போது மிகவும் பழமையாகிவிட்டன என்பதிலும் அதே நேரத்தில் நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவுகள் குவிந்துகிடக்கின்றன என்பதிலும் ரகசியம் ஒன்றுமில்லை.

பயனற்றுப்போகும் நிலை

  • மிகப் பெரிய அணைக்கட்டுகளைக் கொண்ட நாடுகளில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இதுவரையில் 5,200 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஏறக்குறைய 1,100 அணைக்கட்டுகள் ஏற்கெனவே 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டன.
  • அவற்றில் சில 120 ஆண்டுகளைக் காட்டிலும் பழமையானவை. 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அணைக்கட்டுகளின் எண்ணிக்கை 2050-ல் 4,400 ஆக அதிகரிக்கும். அதாவது, நாட்டின் பெரிய அணைக்கட்டுகள் பயனற்றுப்போகும் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை கட்டப்பட்டு 50 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரையில் ஆகியிருக்கும்.
  • பல்லாயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறு அணைக்கட்டுகளின் நிலையும் நிச்சயமற்றதுதான். அவற்றின் பயன்பாட்டுக் காலம் என்பது பெரிய அணைக்கட்டுகளைக் காட்டிலும் குறைவானது.
  • கிருஷ்ணசாகர் அணைக்கட்டு 1931-ல் கட்டப்பட்டது. இப்போது அந்த அணைக்கட்டின் வயது 90. அதைப் போல, மேட்டூர் அணைக்கட்டு 1934-ல் கட்டப்பட்டது. அதன் வயது 87. இந்த இரண்டு நீர்த்தேக்கங்களுமே தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளன.
  • அணைக்கட்டுகளுக்கு வயதாகிக்கொண்டிருப்பதைப் போலவே, நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவுகளும் குவிந்துகொண்டே இருக்கின்றன. இதனால் 1900-களிலும் 1950-களிலும் சொல்லப்பட்ட நீர்க் கொள்ளளவு இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
  • நம்முடைய பெரும்பாலான அணைக்கட்டுகளின் வடிவமைப்பு குறைபாடுகள் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் ஆய்வுகள், நிலைமை இன்னும் மோசமாகிவிடக்கூடும் என்கின்றன.
  • ‘எகானமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் 2003-ல் ரோஹன் டி சௌஸா எழுதிய ‘விநியோகப் பார்வையில் நீர் வள இயல்: ஒரு கடைசி அச்சம்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவின் சின்னங்களில் ஒன்றான பக்ரா அணைக்கட்டில் அனுமானிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 139.86% அதிகமான வண்டல்மண் படிவு உள்ளதாகக் கூறுகிறார்.
  • இந்த அளவைக் கொண்டு பார்த்தால், ‘ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப் பிறகு பக்ரா அணைக்கட்டின் நீர்க் கொள்ளளவு 88 ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் பாதியாகக் குறைந்திருக்கும்’ என்று அவர் கூறுகிறார்.
  • அதேபோல, ஹிராகுட், மைதான், கோத் அணைக்கட்டுகளின் வண்டல் படிவுகளும் அனுமானிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் முறையே 141.67%, 808.64%, 426.59% அதிகமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் அதேபோன்ற முடிவுகள்தான் கிடைத்துள்ளன.
  • நீர்த்தேக்கங்களின் வண்டல்மண் படிவுகள் குறித்த ஒவ்வொரு ஆய்வுமே வண்டல்மண் படிவுகள் தொடர்பான அறிவியலில் போதிய புரிதல் இல்லாமலேயே இந்திய அணைக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.
  • வண்டல்மண் படிவுகளின் விகிதத்தைக் குறைவாகவும் நீர்க்கொள்ளளவை அதிகமாகவும் அவை தவறாகக் கணக்கிட்டுள்ளன. எனவே, இந்திய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவுப் பரப்பானது எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வேகமாகக் குறைந்துவருகிறது.
  • அடுத்த சில பத்தாண்டுகளுக்கு உள்ளாகவே, நீர்த்தேக்கங்கள் இதுவரையில் சொல்லப்படாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான சாத்தியங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

விளைவுகள் என்னவாகும்?

  • அணைக்கட்டுகளில் நீர் தேங்கிநிற்கும் இடத்தில் வண்டல்மண் படிவுகள் அதிகரித்தால், நீர் விநியோகம் ஸ்தம்பித்துவிடும். பயிரிடப்படும் பரப்பளவு பெறுகின்ற நீரின் அளவு படிப்படியாகக் குறைந்துவிடும்.
  • அணைக்கட்டு நீரால் பாசனம் பெறுகின்ற பரப்பு சுருங்கிவிடவோ மழையை நம்பியிருக்கவோ அல்லது நிலத்தடி நீரை அளவுகடந்து பயன்படுத்தவோ நேரிடும்.
  • பயிர்களின் விளைச்சல் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்படும். பாசன நீரைப் போலவே விவசாயிகளின் வருமானமும் குறைவது விளைச்சலுக்கு மட்டுமின்றிக் கடன், பயிர்க் காப்பீடு, முதலீடு ஆகியவற்றுக்கும் முக்கியமான ஒரு காரணமாகிவிடும்.
  • பருவநிலை மாறுபாட்டைப் போலவே வண்டல்மண் குவிந்துள்ள அணைக்கட்டுகளைக் குறித்தும் நம்மிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
  • வண்டல்மண் படிவுகள் குறித்த, குறைபாடு கொண்ட மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டும் பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே நிலவிவரும் ஒரு வாதத்துக்கு வலுசேர்க்கின்றன. அதாவது, ஆற்று வடிநிலங்களில் அமைந்துள்ள பல நீர்த்தேக்கங்களின் வெள்ளத்தடுப்பு அமைப்புகள் ஏற்கெனவே படிப்படியாக வலுவிழக்க ஆரம்பித்துவிட்டன.
  • அடிக்கடி நீர் வெளியேற்றப்படுவதே அதற்கான காரணம். 2020-ல் பரூச்சிலும், 2018-ல் கேரளத்திலும், சென்னையில் 2015-லும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளுக்கு நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரே காரணம்.
  • முடிவாக, 2050-ல் அதிகரிக்கவிருக்கும் மக்கள்தொகைக்கு உணவளிக்கும் வகையில் மிதமிஞ்சிய பயிர்களை வளர்க்கவும் நிலையான நகரங்களை உருவாக்கவும் வளர்ச்சியை உறுதிப்படுத்தவுமான 21-ம் நூற்றாண்டின் நீர்த் தேவையை நமது நாடு சமாளிக்க முடியாமலாகும்.
  • எனவே, அணைக்கட்டு நீரால் பயனடையும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண முயல்வது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories