- நம் உடல் 60% நீரால் நிரப்பப்பட்டுள்ளது. உடலின் ஒவ்வோர் அணுவும் அது சார்ந்த உறுப்புகளும் நீரின் உதவியுடன் ஒரு தொழிற்சாலையைப்போல் இயங்குகின்றன. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்தில் நீர் 90 % உள்ளது. ரத்தத்தின் ஓட்டம் சீராக செயல்பட நீர் அத்தியாவசியமானது. சருமத்தில் நீரின் பங்கு 64%. இதனால், கோடையில் சுற்றுப்புற வெப்பம் உடலைத் தாக்காமல் சருமம் பாதுகாக்கிறது.
- குழந்தைகள், முதியவர்களே நீர்ச் சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முதுமையில் தாகம் ஏற்படும் உணர்வு குறையும்; பொதுவாக ‘வாசோபிரசின்’ என்கிற நாளமில்லாச் சுரப்பி ஹார்மோன், சிறுநீரகம் வழியாக அதிக நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
- இந்த ஹார்மோன் முதியவர்களுக்குக் குறைவாகச் சுரப்பதால், அவர்களுக்கு அதிகச் சிறுநீர் வெளியேறி உடலில் நீரிழப்பு அதிகரிக்கும். இத்துடன் சருமத்தின் வழியாகவும் கோடையில் வியர்வையாகவும் நீர் வெளியேறுவதால் நீரிழப்பு பன்மடங்கு அதிகரித்து உடல் வற்றிப் பல பாதிப்புகளுக்கு முதியவர்கள் உள்ளாவார்கள்.
நீர் வெளியேறும் வழிகள்:
- சிறுநீர், வியர்வை, மலம், கண்ணீர், சளி போன்றவற்றுடன் நுரையீரல் வெளி சுவாசத்தின் மூலம் நீராவியாகவும் நீர் உடலில் இருந்து வெளியேற்றப் படுகிறது.
- சிறுநீரின் நிறம் இயல்பாக, வெளிர் எலுமிச்சைப் பழ நிறத்தில் தோன்றாமல் ஆப்பிள் பழரச நிறத்தில் இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டுள்ளதை உணரலாம். இதைச் சரிசெய்ய, பருகும் நீரின் அளவை அதிகரித்து உடல்நலம் பேண வேண்டும்.
நீரிழப்பைத் தவிர்ப்பது எப்படி?
- குறைந்தபட்சம் ஒருவர் ஒருநாளைக்கு எட்டு டம்ளர் நீர் பருக வேண்டும் என்கிற நிலைபோய், அவரவர் செய்யும் வேலை, வாழ்விடம், பணிச் சூழல், உணவுமுறை, தட்பவெப்ப நிலை, அணிந்துள்ள ஆடை, உடல் உழைப்பு போன்றவற்றைப் பொறுத்து அருந்தும் நீரின் அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்கிறது. 60 கிலோ எடையுள்ள ஒருவர் குறைந்தபட்சம் 2 லிட்டர் நீர் பருக வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்?
தேநீர் வேண்டாம்:
- கோடையில் அதிகமாகத் தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும். இல்லையேல், தேநீரின் அளவைக் குறைக்க வேண்டும். தேநீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் கழிப்பது அதிகரித்து உடலில் நீரிழப்பு ஏற்படும். மேலும், காபியில் உள்ள கஃபீன் என்கிற மூலக்கூறு உடலில் நீழப்பை ஏற்படுத்தி அயர்ச்சியை உண்டாக்கும்.
பால் நல்லது:
- கோடையில் பசும்பால் உட்கொள்வதால், நீர்ச் சத்து கூடி, நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும். காரணம் பாலை ஜீரணிக்க உடல் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். பொதுவாகத் திரவமாகப் பருகினால் அது உடனடியாக உடலில் இருந்து வெளியேற்றப்படும். ஆனால், பால் அதிக திரவத்தை, உடலில் உறிஞ்சும் திறன் கொண்டது.
- பால் பருகுவதால் குறைந்தது நான்கு மணிநேரம், உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைத்து, சிறுநீர் கழிப்பது குறையும். கோடையில் குளிர்ந்த, கொழுப்பு அகற்றிய பாலைப் பருகினால் நீரிழப்பு தடுக்கப்படும். தேநீருக்கு மாற்றாக, கோடையில் குளிர்ந்த பாலைப் பருகலாம்.
- மோரைத் தேவைக்கேற்ப குறைந்தபட்ச உப்பு கலந்து பருகினால், கோடையில் நீர் - உப்பு இழப்பு உடனடியாகச் சீராகிக் கோடைச் சோர்வு அகலும். மோர் ஒரு சிறந்த பானம். இதில் உயிர்ச்சத்தான விட்டமின் டி, தாது உப்பு, கால்சியம், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு போன்ற அனைத்தும் உள்ளதால் கோடையில் உடல் சோர்வு எளிதில் சரிசெய்யப்படும்.
- இளநீர், நுங்கு, பதநீர் போன்றவற்றில் உடலுக்கு வேண்டிய பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் இணைந்து இருப்பதால் கோடைச் சோர்வைப் போக்கி நன்மை பயக்கும். இளநீரில் வாழைப்பழத்தைவிட மிக அதிக அளவில் பொட்டாசியம் உப்புச் சத்து உள்ளது.
சோயா பால்:
- சோயா பீன்ஸ் பால், குறைந்த கலோரியுடன் கூடிய கொழுப்பு குறைந்த நீர் ஆகாரமாகும். இது பசும்பாலுக்கு இணையான திரவமாகும். ஒரு கப் பசும்பாலில் 8 கிராம் புரதம் உள்ளது என்றால், ஒரு கப் சோயா பாலில் 6 கிராம் புரதம் உள்ளது. சோயா பால், பாதாம் பால் போன்றவை உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யும்.
எலும்பு சூப்:
- அசைவ உணவில் எலும்பு சூப் தயார் செய்து பருகலாம். அதிலுள்ள அமினோ அமிலங்கள் எலும்பிலிருந்து கரைந்து சாறில் இறங்கும். அவை உடலில் ஏற்படும் உப்புக் குறைபாட்டைச் சீர்செய்யலாம். ஆனால், உடல் பருமன் உள்ளவர், உயர் ரத்த அழுத்தம் உள்ள வர்கள் இதைத் தவிர்க்கலாம்.
முதியோருக்கு முதலுதவி:
- கோடையின் தீவிர வெயிலால் முதியவர்களுக்கு நாவறட்சி, கருவிழி உலர்தல், தோல் வறட்சி போன்றவை கடுமையான சோர்வை அளிக்கும். இவற்றைத் தடுக்க ஒரு டம்ளர் குடிநீரில், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஓர் எலுமிச்சையின் பழச்சாறு கலந்து பருகவைத்தால் மயக்கம், சோர்வு போன்றவை தவிர்க்கப்படும்.
உடல் உபாதைகள்:
- ஆண்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 3.7 லிட்டர் நீரும், பெண்கள் 2.5 லிட்டர் நீரும் பருகவேண்டும். கோடையில் குறைவாக நீர் அருந்தினால் உடலில் நீர் வற்றித் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல், மயக்கம், உடல்வலி, சோர்வு, அசதி போன்ற தொல்லைகள் எளிதில் ஏற்படும். மேலும், உடலில் வறட்சி ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையும். உடல்வலி, தலைவலி உண்டாகும்.
பழரசம் பருகலாம்:
- அனைத்துப் பழரசங்களையும் சர்க்கரை சேர்க்காமல் அருந்தும் பட்சத்தில், அவற்றிலுள்ள நீர்ச் சத்து, உயிர்ச் சத்து, நார்ச் சத்து, தாது உப்புகள், எதிர் ஆக்ஸிகரணிகள் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். தர்பூசணி, நீர் நிறைந்த பழம். கோடையில் நீரிழப்பை எளிதில் ஈடுசெய்யும். திராட்சை, தக்காளி, ஆரஞ்சு, ஆப்பிள் அனைத்தும் எதிர் ஆக்ஸிகரணி நிறைந்தவை.
- நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், குறைந்த சர்க்கரையின் பின்விளைவைத் தவிர்க்க பழச்சாறு பருகுவது சிறந்த அணுகுமுறை. கடைகளில் புட்டியில் அடைத்து விற்கப்படும் பழரசங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதால் அவை உடல் பருமனை அதிகரிக்கும். அதற்கு மாற்றாக மோர், அரிசிக் கஞ்சி, பழைய சாதம் போன்றவை சிறந்த நீராகாரம். எலுமிச்சைச் சாறில் உயிர்ச் சத்து ‘சி’ நிறைந்துள்ளது. இதில் சிறிதளவு உப்பைச் சேர்ந்து அருந்தினால் கோடையில் ஏற்படும் உப்பு இழப்பை இது ஈடு செய்யும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 06 – 2024)