- அடுத்து வரும் 2022, ஏப்ரல் 1 முதல், குறிப்பிட்ட ஆண்டுகள் பழையவையான வாகனங்களுக்குக் கூடுதலாக சாலை வரி விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எல்லாத் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று சொல்ல முடியாது.
- இந்தியாவின் பெருமளவிலான வாகனங்களைப் புதுப்பிக்கவும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்தவும் பாதுகாப்பு தர நிர்ணயங்களை மேம்படுத்தவும் இந்தக் கூடுதல் வரி விதிப்பு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- வணிகரீதியிலான போக்குவரத்து வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதிச் சான்றிதழைப் புதுப்பிக்கும்போது 10%-25% கூடுதலாக சாலை வரி விதிக்கப்படும்.
- அதுபோல சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் வரி விதிக்கப்படும். பொதுப் போக்குவரத்துக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும். மின்சார வாகனங்களுக்கும் வேளாண் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும்.
- காற்று மாசால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பெருநகரங்களிலும் டீசல் இயந்திரங்களுக்கும் இந்த வரியானது இன்னும் கூடுதலாக விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் மாநில அரசுகள், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும்.
- அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய கார் வாங்குவதற்கான நிதியுதவித் திட்டம்போல, இந்தத் திட்டத்தில் எவ்விதமான பொருளுதவியும் செய்யப்பட மாட்டாது.
- மாறாக, பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றைக் கைவிடச் செய்யும் வகையில் அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இந்த அணுகுமுறைக்குப் பலன் கிடைத்தால், கைவிடப்படும் வாகனங்களை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, கண்காணிப்புடன் மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
- 2009-ல் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் பேருந்துகளுக்கு அளிக்கப்பட்ட பொருளுதவிகளைப் போல, ஆட்டோ ஓட்டுநர்கள் போன்ற வருமானம் குறைந்த பிரிவினருக்குத் தள்ளுபடி விலையில் மாற்று வாகனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
- பெருந்தொற்றுக்குப் பிறகான மீட்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த வாய்ப்புகள் அமைவதே பொருத்தமானது. அவ்வாறு வழங்கப்படும் புதிய வாகனங்கள் மின்சக்தியால் இயங்கும் வாகனங்களாகவும் இருக்க வேண்டும்.
- பழைய வாகனங்களைக் கைவிட்டு அவற்றுக்குப் பதிலாகப் புதிய வாகனங்களை வாங்குவதைக் குறித்த கொள்கை கடந்த ஆண்டில் விவாதிக்கப்பட்டபோது, மறுசுழற்சி செய்யப்படும் எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கொண்டு மோட்டார் வாகனங்களின் விலையை 20%- 30% குறைக்க முடியும் என்றார் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
- மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்படவிருக்கும் உடனடி சந்தைத் தேவையானது எந்த வகையிலும் வாகனப் பயன்பாட்டாளர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடக் கூடாது. சொந்த வாகனத்தைப் பயன்படுத்தும் பலரும் அவற்றை முழுமையான விலை கொடுத்து வாங்குவதற்கு வசதியில்லாதவர்களாகவும் மறுவிற்பனை வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.
நன்றி: இந்து தமிழ் திசை (29-01-2021)