TNPSC Thervupettagam

பாக்டீரியாக்களை உண்ணும் பாக்டீரியாக்கள்

September 1 , 2020 1608 days 884 0
  • ஹென்றி என்.வில்லியம்ஸுக்குப் பிடித்தமான திரைப்படக் காட்சித் துணுக்கு ஒரு சிறிய கண்ணாடிப் பட்டையில் இடம்பெறுகிறது.
  • இரண்டு பாக்டீரியாக்களுக்கு இடையிலான திரைப்படப் பாணியிலான மோதல் இது: பெரியதும் கட்டை வடிவத்தில் இருக்கும் கடல் வாழ் கிருமியான விப்ரியோ கோரலீலிட்டிகஸுக்கும், அதன் மீது ஒட்டிக்கொண்ட ஹாலோபாக்டீரியோவோராக்ஸ் என்ற சிறிய பாக்டீரியாவுக்கும் இடையிலான போராட்டம்.
  • தன் மீது தாக்குதல் தொடுக்கும் கிருமியை உதறித் தள்ளும் தவிப்பில் விப்ரியோ ஒரு திரவத்தில் நெளிந்து வளைந்து செல்கிறது; கடைசியில், ஒன்றும் செய்ய முடியாமல் சட்டென்று ஓரிடத்தில் நின்றுவிடுகிறது. அடுத்ததாக, ஹாலோபாக்டீரியோவோராக்ஸ் தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்கிறது: விப்ரியோவின் மேற்பரப்பில் ஓட்டை போட்டு அதன் உள்பகுதியை நோக்கித் துளையிடுகிறது; அங்கே தனது ஓம்புயிரியின் (host) உள்ளுறுப்புகளைக் கபளீகரம் செய்ய ஆரம்பிக்கிறது, தன்னைத் தானே பல முறை பிரதியெடுத்துப் பெருகி, அங்கிருந்து வெளியேறி அடுத்த வேளை உணவைத் தேடிச் செல்கிறது.

இரைகொல்லி பாக்டீரியாக்கள்

  • அமெரிக்காவின் ஃப்ளோரிடா ஏ&எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் டாக்டர் வில்லியம்ஸ் இந்த வேட்டையாடும் பாக்டீரியாக்களின் காணொலிகளை மாணவர்களுக்குக் காண்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறார்.
  • அந்த பாக்டீரியாக்கள் பலரையும் வாவ்சொல்ல வைக்கின்றன. இதுவரை சிங்கங்கள், சுறா மீன்கள், புலிகள் போன்ற இரைகொல்லிகள்தான் நம் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றைப் போலவே மூர்க்கமான மிக நுண்ணிய இரைகொல்லிகளும் இருக்கவே செய்கின்றனஎன்கிறார் அவர்.
  • இரைகொல்லி பாக்டீரியாக்கள் அளவற்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. சரியான சூழலில் அவற்றைப் பயன்படுத்தினால் சுற்றுப்புறத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்க அவை உதவும் அல்லது உணவுப் பொருளிலுள்ள நோய்க்கிருமிகளை அழிக்க உதவும்.
  • எல்லா சிகிச்சையும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நோயாளிகளின் உடலிலுள்ள, மருந்துகளை எதிர்க்கக் கூடிய கிருமிகளை இந்த பாக்டீரியாக்களைக் கொண்டு அழிக்கும் நாள் வரலாம் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.
  • இந்த வகையிலான கிருமிகளை உயிருள்ள நோயுயிர்முறியாக (antibiotics) பயன்படுத்துவதற்கு அவை எப்படி வளர்கின்றன என்று அறிவது அவசியம்என்கிறார் நுண்ணுயிரியலாளர் டெரென்ஸ் சாக்கி.
  • பாக்டீரியாக்களிடம் தொற்றி, அவற்றைக் கொல்லக்கூடிய பாக்டீரியாஃபெய்ஜ் அல்லது ஃபெய்ஜ் என்று அழைக்கப்படும் வைரஸ் பற்றிய ஆய்வின்போது தற்செயலாக இரைகொல்லி பாக்டீரியாக்களைக் கண்டறிந்தார்கள்.
  • ஆராய்ச்சியாளர்களின் கண்களிலிருந்து இந்த இரைகொல்லி பாக்டீரியாக்கள் வெகுகாலம் தப்பின என்பது ஒருவகையில் ஆச்சரியத்துக்குரியதுதான்.
  • பல டஜன் இனங்கள் கடல்களிலும் மண்ணிலும் காணப்படுகின்றன. விலங்குகளின் குடல்களிலும், நமது குடல்களிலும் தாக்குப் பிடித்து நீடிக்கக் கூடியவையாக அவை கருதப்படுகின்றன.
  • சாக்கடைகளில் தொடங்கி நண்டுகளின் செவுள் வரை இந்த பாக்டீரியாக்கள் பல இடங்களிலும் காணப்படுவதுபோல் தோன்றுகிறது.
  • பாக்டீரியா இருக்கும் இடங்களிலெல்லாம் அவற்றைக் கபளீகரம் செய்ய முயலும் இரைகொல்லிப் பாக்டீரியாக்களும் இருக்கக்கூடும்என்கிறார் இரைகொல்லி பாக்டீரியாக்கள் பற்றி ஆய்வு செய்துவரும் லாரா வில்லியம்ஸ்.
  • மற்ற நுண்ணுயிர்களெல்லாம் ஊட்டச்சத்து மிகுந்த விருந்துகளை உண்ண விரும்புபவை; இரைகொல்லி பாக்டீரியாவோ உயிருள்ள உணவு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவை.
  • எனினும், அவற்றின் இரைகொல்லி வாழ்க்கை முறை அவற்றுக்கு மிகவும் பலனளிக்கும் வகையில் உள்ளது; ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அவை பரிணாமமடைந்ததுபோல் தோன்றுகிறது.
  • ரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப் போன்ற மைக்காவிப்ரியோ தனது பலிகடாக்களின் மீது ரத்தக்காட்டேரிகளைப் போல ஒட்டிக்கொண்டு, உறிஞ்சி அவற்றை உலரவைத்துவிடுகின்றன.
  • மைக்ஸோகாக்கஸ் போன்ற மற்ற பாக்டீரியாக்கள் தேர்ந்த வில்லாளிகள் போன்றவை; தூரத்திலிருந்தே வெள்ளம்போல் நொதிகளைச் சுரக்கும். அந்த நொதிகள் தூரத்தில் உள்ள இரைகளைக் கரைக்கக்கூடியவை. சில மைக்ஸோகாக்கஸ் கிருமிகள் கூட்டுசேர்ந்து ஒத்திசைவுடன் வேட்டையாடக் கூடியவை.

கொலைகார இயந்திரங்கள்

  • இவற்றில் மிகவும் மோசமான குழுக்கள் ப்டெல்லோவிப்ரியோ என்பவைதான்; அவை ஹாலோபாக்டீரியோவோராக்ஸ் பாக்டீரியாவின் உத்திகளைப் பிரதிபலிப்பவை.
  • அவை தங்களின் ஓம்புயிரியின் உடலுக்குள் ஊடுருவி, அவற்றினுள் இருந்து கொண்டே அவற்றைக் கொன்றொழிப்பவை. ஒட்டுமொத்தமாக, இரைகொல்லி பாக்டீரியாக்கள், “திறமை வாய்ந்த கொலைகார இயந்திரங்கள்என்கிறார் நுண்ணுயிரியலாளர் டேனியல் கடோரி.
  • அவற்றை முதன்முறை பார்த்தபோது நான் பார்த்ததிலேயே மிகவும் கவர்ச்சிகரமான உயிரிகள்என்று நினைத்தேன்என்கிறார் அவர்.
  • இந்த இரைகொல்லி பாக்டீரியாக்கள் தங்கள் இரைகளுக்குள் ஊடுருவிவிட்டன என்றால், அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. நோயெதிர்முறிகளும் பாக்டீரியாஃபெய்ஜ் வைரஸ்களும் ஒரு பாக்டீரியாவின் குறிப்பிட்ட பாகங்களைக் குறிவைப்பவை என்றால், இரைகொல்லி பாக்டீரியாக்களோ சமரசம் ஏதுமற்ற பெருந்தீனிக்காரர்கள்: ஒரு ஓநாய்க்கு எதிராக ஒரு முயலால் எப்படி எதிர்ப்புசக்தியை வளர்த்துக்கொள்ள முடியாதோ அப்படித்தான் ஒரு நுண்ணுயிரியால் தங்களை வேட்டையாடி உண்ணும் இரைகொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்புசக்தியை வளர்த்துக்கொள்ள முடியாது.
  • தங்கள் இரைகளின் மீது ஒட்டிக்கொள்வதற்கும் முன்பே இந்த இரைகொல்லி பாக்டீரியாக்கள் மிகவும் பயங்கரமான எதிரிகளாக இருப்பவை. தங்கள் இரைகளை மோப்பம் பிடித்துத் துரத்துபவை; ஃப்ளேஜெலம் என்ற திருகுபோன்ற வால் பகுதியைச் சுழற்றி முன்னோக்கிச் செல்லக்கூடியவை.
  • ஒரு நொடியில் தங்கள் உடல் நீளத்தைவிட நூறு மடங்கு அதிகமான தொலைவை இவற்றால் கடக்க முடியும். உடல் எடை அடிப்படையிலான விகிதாச்சாரத்தின்படி பார்த்தால் சிறுத்தையின் வேகத்தைவிட அதிகம் இதுஎன்கிறார் டாக்டர் கடோரி.
  • சால்மோனெல்லா, பிளேக் நோயை ஏற்படுத்தும் யெர்ஸினியா பெஸ்டிஸ் ஆகிய நோய்க்கிருமிகள் தொடர்பான ஆய்வுகளில் இரைகொல்லி பாக்டீரியாக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
  • டாக்டர் கடோரியும் நுண்ணுயிரி மரபணுவியலாளர் நான்ஸி கானெலும் எலி, சுண்டெலி ஆகியவற்றின் நுரையீரல்களில் ப்டெல்லோவிப்ரியோஸ் பாக்டீரியாக்களை விட்டனர். அங்குள்ள பெரும்பாலான பாக்டீரியாக்களை அவை விழுங்குவதை அவர்களால் காண முடிந்தது. கோழிகளிலும் வரிக்குதிரை, மீன்களிலும் மேற்கொள்ளப்பட்ட வெள்ளோட்டங்கள் ஊக்கமூட்டும் முடிவுகளைத் தந்திருக்கின்றன.
  • குறிப்பாக, இரைகொல்லி பாக்டீரியாக்கள் நுண்ணுயிரல்லாத செல்களின் மீது நாட்டம் கொள்வதில்லை. உடலின் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதுபோலவும் தெரியவில்லை; முயலொன்றின் கண்ணுக்கு மேலே நேரடியாக விட்டபோதும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
  • மனிதர்களுக்கு இது பாதுகாப்பானது என்பதை உணர்த்துகிறது. ஆனால், தங்கள் இரைகள் காணப்படும் இடத்தில் மட்டும்தான் இந்த இரைகொல்லி பாக்டீரியாக்களால் தழைத்தோங்க முடியும்.
  • ஆகவே, ஒட்டுமொத்த நுண்ணுயிர்க் கூட்டத்தையும் தாங்களாகவே அழித்தொழிப்பதில் அவை சிரமப்படுகின்றன. அவை நுண்ணுயிரிகளாக இருப்பதால், உடலில் நோயெதிர்ப்பு செல்களால் கடைசியில் அழித்தொழிக்கப்படும்; அதற்கெதிராக அவற்றிடம் எந்தத் தடுப்பு சக்தியும் இல்லை என்கிறார் டாக்டர் கானெல்.
  • இதன் விளைவாக, உடலெங்கும் ஏற்கெனவே பரவிவிட்ட தொற்றுக்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் இந்த இரைகொல்லி பாக்டீரியாக்களை முழுவதும் நம்பிவிட முடியாது.
  • உடலின் நோயெதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து இயங்கும் வகையில் சரியான விதத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் அவற்றின் இலக்கை அழித்தொழிக்கலாம்.

தொடரும் ஆய்வுகள்

  • மேலும் மேலும் செய்யப்படும் ஆய்வுகள் மூலம் நாம் அடிப்படை மருத்துவச் சேவை அளிக்கும் விதத்தை இரைகொல்லி பாக்டீரியாக்களைக் கொண்டு மாற்றியமைக்க முடியும் என்கிறார் டாக்டர் சாக்கி; தனது தாய்நாடான சுவரிநாமில் எல்லோருக்கும் மருத்துவ உதவி கிடைக்கும் நாளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.
  • இரைகொல்லி பாக்டீரியாக்கள் முழுவதுமாக அழிவின் ஆயுதமாக மட்டும் இருப்பதில்லை. குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியா சமூகங்களுடன் சேர்ந்து அமைதியாக இயங்கும் வகையிலான இந்த பாக்டீரியாக்களின் பண்பை ஜெர்மனியின் டாக்டர் ஜான்கீ ஆராய்ந்துவருகிறார்.
  • இரைப்பை, குடல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகப் பலரும் குடலில் உள்ள நுட்பமான சமனத்தை இழந்திருப்பார்கள். அவர்களின் குடலுக்குள் இந்த இரைகொல்லி பாக்டீரியாக்களைச் செலுத்துவதால், அந்தச் சமனத்தை மீட்டெடுக்கலாம் என்று டாக்டர் ஜான்கீ கூறுகிறார். பெல்ஜியத்தில் டாக்டர் சாக்கியும் அவரது ஆலோசகர் ஜெரால்டின் லாலோக்ஸும் ப்டெல்லோவிப்ரியோ பாக்டீரியா எப்படி மற்ற பாக்டீரியாக்களுக்குள் தன்னைப் பிரதியெடுத்துக்கொள்கிறது என்பதைக் கண்டறிய முயல்கிறார்கள்.
  • இந்த பாக்டீரியா தொடர்பான நிறைய புதிர்கள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. அவையெல்லாம் அநேகமாக அடுத்த தலைமுறை இரைகொல்லி பாக்டீரியா ஆய்வாளர்களால் அவிழ்க்கப்படலாம்.
  • ஐந்து தசாப்தங்களுக்கு முன்னதாக இந்த நுண்ணுயிரிகளைப் பற்றி பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர் வில்லியம்ஸ் கேள்விப்பட்டார்.
  • தற்போது அந்த நுண்ணுயிர்களைப் பற்றி மாணவர்களுக்கு உற்சாகமாக உரையாற்றிக்கொண்டிருக்கிறார். இந்த நுண்ணுயிர்களைப் பற்றி நான் கேள்விப்பட்ட முதல் நாள் எவ்வளவு பரவசத்துடன் இருந்தேனோ அதே பரவசத்தை இன்றும் அந்த நுண்ணுயிர்கள் தருகின்றனஎன்கிறார் டாக்டர் வில்லியம்.’’

நன்றி:  தி இந்து (01-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories