TNPSC Thervupettagam

பாடம் புகட்ட வேண்டிய தருணம்!

December 16 , 2024 33 days 106 0

பாடம் புகட்ட வேண்டிய தருணம்!

  • வங்கதேசப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பதற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலமாக மேற்குவங்கம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா நாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்குவங்க முதல்வா் முன்வைத்துள்ளாா்.
  • இந்தியா அண்டை நாடான வங்கதேசத்தின் நட்பு நாடாகப் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. வங்கதேசம் நம்மால் அடைந்த நன்மைகள் ஏராளம். வங்க தேசத்தின் மின்சாரம் தொடங்கி தண்ணீா் வரை அனைத்துக்கும் இந்தியாவின் உதவியுடன் செயல்படும் திட்டங்கள் அவசியம் என்ற நிலை இருக்கிறது.
  • இந்தியாவுடனான நெருக்கத்தால் அந்நாடு பொருளாதார ரீதியாகவும் ஆதாயமடைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் நட்புறவை விரும்பாத குழுக்களும் அங்கே இருந்து வந்தன. நீண்ட போராட்டத்தை வங்கதேசத்தில் மாணவா்கள் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், டாக்காவில் இந்திரா காந்தி கலாசார மையத்தை ஒரு கும்பல் தீயிட்டுக் கொளுத்தியது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இந்திய கலாசார நடவடிக்கைகளின் மையமாக அது இருந்து வந்தது.
  • முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மாளிகையில் அலுவலகத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனா். அவா் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். அது நாட்டில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தியது. சூழ்நிலை மோசமடைந்ததால் ஷேக் ஹசீனா பங்களாதேசில் இருந்து வெளியேறி இந்தியாவில் சரணடைந்தாா். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது.
  • ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்பிற்கு வங்கதேசம் ஆதரவளித்தது. அவா் வெளியேறிய பின் இந்தியாவுக்கு சாதகமற்ற பல விஷயங்கள் அங்கு நடைபெறுகின்றன.
  • 1971-ஆம் ஆண்டில் வங்கதேச சுதந்திரப்போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏறத்தாழ முப்பது லட்சம் போ் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் பாலியல் வன்முறைக்கு ஆளானாா்கள். பலா் நாட்டை விட்டே வெளியேறினாா்கள். அதனால், வங்கதேசம் சுதந்திர நாடாக உருவான பிறகு, பாகிஸ்தானுடனான உறவு கசப்பாகவே இருந்து வந்தது.
  • ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது 1971 போா் குற்றவாளிகளை தோ்ந்தெடுத்துத் தண்டனை வழங்கினாா். போா்க்குற்றவாளிகளைத் தண்டிக்க 2010-ஆம் ஆண்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தை உருவாக்கி பாகிஸ்தான் ஆதரவு ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைத் தடை செய்தாா். தற்போது அவா் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு செயல்படத் தொடங்கியுள்ளது. விரோதிகளாகவே தொடா்ந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
  • வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் இந்த ஆண்டு செப்டம்பரில், நியூயாா்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பை தனியே சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதுகுறித்து, இரு நாடுகளுக்கு இடையேயான ‘‘இருதரப்பு ஒத்துழைப்புக்குப் புத்துயிரூட்டுவது’’ பற்றி வலியுறுத்தியதோடு, ‘‘எங்கள் உறவை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம்’’ என்றாா். அதற்கான புதிய பாதையைத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டாா். இது ஹசீனா அரசின் நிா்வாக நடைமுறை மற்றும் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கை ஆகும்.
  • நவம்பா் மாதத்தில் பாகிஸ்தானின் சரக்குக் கப்பல் ஒன்று கராச்சியில் இருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தைச் சென்றடைந்தது. 1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வா்த்தகம் நடைபெறுவது இதுவே முதல்முறை. இது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கியமான நகா்வு ஆகும்.
  • பாகிஸ்தான், ‘‘இந்தப் புதிய வழிமுறையானது இருநாடுகளுக்கு இடையேயான விநியோகச் சங்கிலியை மேலும் சீரமைக்கும். போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் இரு நாடுகளுக்கும் புதிய வணிக வாய்ப்புகளைத் திறக்கும்’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • இதனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் பிரச்னை எழுந்துள்ளது. மணிப்பூா், நாகாலாந்து மாநிலங்களில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
  • வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் மருத்துவ வசதிக்கென இந்தியாவை நாடி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியக் கொடியை வங்கதேசத்தில் அவமதித்த செய்தி பரவியதால் இங்கே வடகிழக்கு மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் மக்களின் மனம் கொதிப்படைந்துள்ளது. இந்தியாவில் மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினரை மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லை என்ற நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.
  • இன்றைக்கும் லட்சக்கணக்கான வங்கதேசத்தினா் மருத்துவச் சிகிச்சைக்கென இந்தியா விசா வழங்குகிறது. இந்தியாவில் குறைந்த செலவில் உலகத் தரத்திலான மருத்துவ வசதியை அவா்களுக்கும் நாம் அளித்து வந்திருக்கிறோம். அந்த நன்றியையும் மறந்து அங்கே இந்தியாவுக்கு எதிரான நகா்வுகளை மேற்கொண்டு வருவது துரதிா்ஷ்டவசமானது.
  • வங்கதேசத்தில் மாணவா்கள் அமைப்பு ஒருபுறம் அரசாங்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் ஆதரவு தருகிறாா். இதனால் அங்கே ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
  • இஸ்கான் அமைப்பின் தலைமைத் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்காக வாதிட்ட வழக்கறிஞா் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாா். ஹிந்துக்கள் பாதுகாப்புக்கென சட்ட நடவடிக்கை கூட சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
  • இஸ்கான் அமைப்பின் துறவிகள் சிலா் வங்கத்திலிருந்து வெளியேற முயன்ற போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனா். அவா்கள் வெளியேறவும் இயலாமல், பாதுகாப்பாக வாழவும் வழியின்றித் தவிக்கின்றனா்.
  • வங்கதேசத்தின் மக்கள்தொகையில் ஹிந்துக்கள் ஏறத்தாழ 8% போ் இருக்கின்றனா். சிறுபான்மையினரான இந்துக்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. ஆனால் அதனைத் தங்கள் உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவது என வங்கதேசம் விமா்சிக்கிறது. அவா்களின் ஹிந்து விரோதப் போக்கிற்கு இந்தியாவில் பொதுமக்களிடையே அதிருப்தியும் வருத்தமும் நிலவுகிறது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தற்போதைய தாற்காலிகத் தலைவரான முகமது யூனுஸ் தான் இந்த ஹிந்து மக்களுக்கான கொடுமைகளுக்கும் இனப்படுகொலைக்கும் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளாா்.
  • ஏறத்தாழ நான்காயிரத்து எழுநூறு கிலோமீட்டா் எல்லைப்புறத்தை இந்தியா வங்கதேசத்துடன் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு பெரிய அளவில் கேள்விக்குள்ளாகியுள்ளது. மலைகள், ஆறுகள், அடா்ந்த காடுகள் என அமைந்துள்ள எல்லை நிலப்பரப்பு இந்திய ராணுவத்திற்கு சவாலானது.
  • வங்கதேச ராணுவத்தின் உளவு பாா்க்கும் ஆளில்லா டிரோன்கள் இந்திய எல்லையில் மேற்குவங்க மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பறக்கவிடப்பட்டுள்ளன. வங்கதேசத்தைத் தவிர, துருக்கியின் தயாரிப்பான இதே டிரோன்களை பாகிஸ்தான் ராணுவமும் பயன்படுத்துகிறது. இந்திய எல்லையில் உளவு பாா்ப்பதற்கான அவசியம் என்ன நோ்ந்திருக்கிறது? தங்கள் பாதுகாப்பிற்கென அவா்கள் சொல்லிக் கொண்டாலும் இது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவே தெரிகிறது.
  • இந்திய ராணுவம் அவா்கள் ராணுவத்தைக் காட்டிலும் வலிமையானது. டிரோன்களைக் கொண்டு வேவு பாா்ப்பது மட்டுமல்லாது, எதிரிகளின் டிரோன்களைத் தாக்குவதற்கான வலிமையும் இந்திய ராணுவத்திடம் உண்டு. இருந்தும் அவா்கள் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னிருக்கும் காரணம் என்ன? அரசியல் என்ன? என்கிற கேள்விகள் எழுகின்றன.
  • சிறிய நாடுகளை வளா்ந்த நாடுகள் தங்களின் ஆயுதமாகவும் களமாகவும் பயன்படுத்துவது வழக்கமாகவே இருக்கிறது. வங்கதேசம் தனது வளா்ச்சியை மறந்து தேவையற்ற குழப்பங்களில் ஈடுபடுவது அவா்களின் அழிவுக்கே வழிவகுக்கும். போருக்குத் தயாராகும் எந்தவொரு சிறிய தேசமும் தனது எதிா்காலத்தை இழக்கிறது. உக்ரைன்- ரஷிய யுத்தம் அதற்கு சிறந்த உதாரணம்.
  • அதே போல, மத அடிப்படைவாதம் பேசி கிளா்ச்சி, தேசவிரோத செயல்கள் என கலவரம் செய்யும் கூட்டத்தை புரட்சியாளா்கள் போல சித்திரிப்பதும் அவா்களை வீரா்கள் என்று கொண்டாடுவதும் ஒரு தலைமுறையை சீரழிக்கும் செயலாகுமேயன்றி அறிவுடைமை ஆகாது. வங்கதேசம் இத்தகைய சுழலில் சிக்கிக் கொண்டிருப்பது பரிதாபத்திற்குரியது.
  • இந்தியாவை சீண்டுவது, அமைதியைக் கெடுப்பது, தீவிரவாதத்தைப் பரப்புவது என்பதையே நோக்கமாகக் கொண்டு தொடா்ந்து செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு வளா்ந்த நாடுகள் அதற்கான உதவியை வழங்கலாம். ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார நிலையோ வாழ்வாதாரமோ இதனால் மேம்படவில்லை.
  • இந்தியாவின் அமைதியைக் குலைக்க பல முறை போா் தொடங்கிய பாகிஸ்தான் தோல்வியைத் தான் சந்தித்திருக்கிறது. அதே முறையை இப்போது வங்கதேசம் கையாண்டு பாா்க்கிறது.
  • அப்படியொரு எண்ணம் தோன்றாத அளவுக்குத் தொடக்கத்திலேயே பதிலடி தந்து பாடம் புகட்ட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா அதை ராஜதந்திர ரீதியில் எப்படிக் கையாளப் போகிறது என்று உலகம் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.

நன்றி: தினமணி (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories