TNPSC Thervupettagam

பாண்டியன் - ஒடிஷா அணைக்கும் தமிழ் மருமகன்

December 22 , 2023 367 days 261 0
  • ஜெய் ஜெகந்நாத்!
  • மேடையில் நின்றபடி கார்த்திகேய பாண்டியன் இப்படி முழங்க, பல்லாயிரக்கணக்கான மக்களும் கூடவே முழங்குகின்றனர்: ‘ஜெய் ஜெகந்நாத்!’
  • பழங்குடி வேர்களைக் கொண்ட தெய்வமான பூரி ஜெகந்நாதர் ஒடியர்களுக்கு முக்கியமான தொன்மம். ஜெகந்நாத் என்றால், ‘உலகின் கடவுள்என்று பொருள். ஒடிய மக்களின் புகழ் பெற்ற தலைவரான பிஜு பட்நாயக் வார்த்தைகளில் சொல்வது என்றால், ‘எந்த ஒடியரும் ஒரே எஜமானுக்குத்தான் கட்டுப்பட்டவர்அவர் பூரி ஜெகந்நாத்!’
  • கார்த்திகேய பாண்டியன் ஒடிஷா சமூகத்தைத் துல்லியமாக நாடி பிடித்திருக்கிறார் என்றும் சொல்லலாம்; ஒடிஷா சமூகத்துடன் கலந்துவிட்டார் என்றும் சொல்லலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகேய பாண்டியன் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் இன்று அரசில் இருப்பவர். “என் மூச்சில் ஒடிஷா கலந்திருக்கிறது; தாய்வழி மரபைக் கொண்ட பழங்குடிகள் மிகுந்த இந்த மாநிலம் என்னை சரியாகப் புரிந்துகொண்டதால்தான் இவ்வளவு வாரியணைக்கிறது!” என்கிறார்.
  • ஒடிஷா மக்களுக்குகார்த்திகை பூர்ணிமாவிசேஷமான ஒரு நாள். ‘போயித பந்தாணாஎன்று குறிப்பிடப்படும் கொண்டாட்டம் இந்த நாளில்தான் அங்கே நடக்கிறது.
  • ஒடியர்கள் வாழைத்தண்டிலும் காகிதத்திலும் தயாரிக்கப்பட்ட சிறு படகுகளில், விளக்குகளை ஏற்றி நீர்நிலைகளில் அனுப்புகிறார்கள்; கோயில்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பண்டைய கலிங்கத்தின் பொற்காலத்தை, கடல் வழி வரும் வர்த்தகத்தை நினைவுகூர்வதோடு, வரவிருக்கும் புதிய செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அவர்கள் வரவேற்கும் நாளும் அது.
  • ஒடிஷாவில் இந்த ஆண்டு கார்த்திகை பூர்ணிமை நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. தன்னுடைய மனதுக்கு நெருக்கமானவராகச் செயல்பட்டுவந்த கார்த்திகேய பாண்டியனை பிஜு ஜனதா தளத்தில் அந்த நாளில் இணைத்துக்கொண்டது வரவிருக்கும் காலம் தொடர்பில் முதல்வர் நவீன் பட்நாயக் விடுத்த சூட்சம செய்தியாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

தனித்துவமான முதல்வர்

  • பல வகைகளிலும் தனித்துவமான முதல்வர் நவீன். 2000 முதலாக ஆட்சியில் இருக்கும் அவர் ஒடிஷாவின் நீண்ட கால முதல்வர், இந்தியாவில் நீண்ட கால ஆட்சியாளர்களில் ஒருவர் என்பதோடு, வங்கத்தின் ஜோதிபாசு, சிக்கிமின் பவன் சாம்லிங்குக்கு இணையாக ஐந்து முறை தொடர்ந்து முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • நவீனுடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக் ஒடிஷா கண்ட பெரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவர்; காங்கிரஸிலும் பிற்பாடு ஜனதா தளத்திலும் கோலோச்சியவர் என்றாலும், அவருடைய காலத்தில் குடும்பத்தை அரசியலில் ஈடுபடுத்தியவர் அல்ல. அடிப்படையில் நவீன் ஓர் எழுத்தாளர். டெல்லியின் மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்.
  • நவீனுக்கும் அரசியலுக்கும் அவருடைய 50 வயது வரை எந்தத் தொடர்பும் இல்லை. பிஜு பட்நாயக் 1995இல் மறைந்த பிறகு, அவருடைய ஆதரவாளர்களின் நிர்ப்பந்தத்தால் அரசியலுக்கு வந்தவர் நவீன். மோசமான நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்களால் ஏழ்மையோடு அடையாளம் காணப்பட்ட ஒடிஷாவை வெளிப்படையான நிர்வாகத்தால், கடந்த இரு தசாப்தங்களில் பெரிய அளவில் வளர்ச்சி நோக்கி நகர்த்தியிருக்கிறார் நவீன்.

நவீன் பட்நாயக்

  • தனக்கென்று குடும்பம் இல்லாதவர், சொத்துகள் சேர்க்காதவர், தன் உடன்பிறந்தோரைக்கூட அருகில் ஊக்குவிக்காதவர் என்று பல கதைகளும் சேர்ந்து ஒரு தந்தைமை ஸ்தானத்தை நவீனுக்கு ஒடிஷா சமூகத்தில் உருவாக்கியிருக்கின்றன.
  • ஆட்சியில், நேர்மையான அதிகாரிகளைச் சரியான பொறுப்புகளில் அமர்த்தி அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட ஊக்குவிப்பது நவீனுடைய நிர்வாகப் பாணி. கட்சியில் அவர் வைத்ததே சட்டம். இரு தசாப்தங்களுக்குப் பிறகும் கட்சியின் செல்வாக்கு நீடிக்கிறது. கடைசியாக நடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் சென்ற முறையைக் காட்டிலும் 1.3% கூடுதலாகப் பெற்று 44.71% வாக்குகளைக் குவித்தது பிஜு ஜனதா தளம். மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டும் தனக்கான இடத்துக்காகப் போராடுகின்றன.

கவனம் ஈர்த்த அதிகாரி

  • நவீன் முதல்வரான அதே 2000இல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக ஒடிஷாவில் கால் பதித்தவர் பாண்டியன். தமிழ்நாட்டில், மேலூர் அருகிலுள்ள கூத்தன்பட்டியில் 1974இல் பிறந்தவர். வேளாண் பட்டதாரியான ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயாரான காலகட்டத்தில், தன் எதிர்கால மனைவியான சுஜாதாவைச் சந்தித்தார்; ஒடிஷாவைச் சேர்ந்தவர் சுஜாதா. இருவரும் ஒரே காலகட்டத்தில் ஒடிஷாவில் ஆட்சிப் பணிக்குள் நுழைந்தார்கள்.
  • மிக விரைவில் நேர்மையான அணுகுமுறை, துடிப்பான செயல்பாடு, புதிய முயற்சிகளுக்காக அறியப்படுபவரானார் பாண்டியன். விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தார். தான் பணியாற்றும் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களின் முறையான செயல்பாட்டுக்கு அவர் எடுத்த நடவடிக்கைகள் பேசுபொருளாயின.
  • தன்னுடைய மாவட்டமான கஞ்சாம் ஆட்சியராகப் பாண்டியனை நியமித்தார் நவீன். மன்மோகன் சிங் அரசால் மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் கீழ் வேலை செய்தவர்களுக்கு நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கின் மூலம் கூலியைப் பெறும் முறையை நாட்டிலேயே முதலாவதாக அறிமுகப்படுத்தினார் பாண்டியன். 2008இல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்த மாவட்டத்துக்கான தேசிய விருதைப் பெற்றார்.
  • அடுத்தடுத்து பாண்டியனிடம் அளிக்கப்பட்ட பணிகள் முடிக்கப்பட்ட வேகத்தைப் பார்த்த நவீன் பட்நாயக் 2011இல் முதல்வர் அலுவலகப் பணிக்குச் செயலர் பொறுப்புக்கு அவரைக் கொண்டுவந்தார். 2013இல், வீரியமான ஃபாய்லின் புயலை ஒடிஷா எதிர்கொண்டபோது, நவீன் அரசு செயல்பட்ட விதம் .நா.சபையின் பாராட்டை அதற்குப் பெற்றுத் தந்தது.
  • எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலைத் துறையால் கணிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியைப் புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது ஒடிஷா அரசு. வீடுகள் காலி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டது சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் இடமாற்றங்களில் ஒன்று. லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள், ஆயிரக்கணக்கில் மருந்துப் பொதிகள் என்று முழு முன்தயாரிப்பில் செயலாற்றியது அரசு இயந்திரம்.
  • முன்னதாக 1999இல் இத்தகு கடும்புயலை ஒடிஷா எதிர்கொண்டபோது 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 2 கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், ஃபாய்லின் புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது சர்வதேச அளவிலான செய்தியானது. இந்தப் பணிகளை எல்லாம் முதல்வர் அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைத்தவர் பாண்டியன்.
  • இதற்குப் பின் படிப்படியாக முதல்வர் அலுவலகம் பாண்டியன் கைகளில் வந்தது.

முதல்வரின் நிழல்

  • நவீன் பட்நாயக்பாண்டியன் இருவருக்கும் இடையிலான தலைமுறை இடைவெளி அவர்கள் இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. இளைய தலைமுறையின் பிரதிநிதியாகவும், அவர்களுடைய குரலைப் பிரதிபலிப்பவராகவும் பாண்டியனைப் பார்த்தார் நவீன். பாண்டியனின் வெளிப்படைத்தன்மையும் எளிமையும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
  • அரசூழியருக்கும் ஆட்சியாளருக்கும் இடையிலான நெருக்கம் இரு பக்க வாள். நிர்வாகத் தளத்தைத் தாண்டி நவீன் கண்ணசைவில் கட்சித் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்படலானார் பாண்டியன். 2014, 2019 இரு தேர்தல்களிலுமே கட்சியின் வியூகங்களில் அவருடைய மறைமுகப் பங்களிப்பும் இருந்தது என்கிறார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள். ஆளுங்கட்சிக்குள் முணுமுணுப்புகள் இருக்க எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சித்தன. தேர்தல் வெற்றிகள் இந்த விமர்சனங்களைக் காற்றில் தள்ளின.

ஒடிஷா அடையாள அரசியல்

  • இந்திய வரலாற்றில் அமைக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம் ஒடிஷா. 1936இல் பிஹார்வங்காளம் இரு பிராந்தியங்களிலும் ஒடியா பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டுஒரிஸா மாகாணம்உருவாக்கப்பட ஒடியர்கள் வாழும் பகுதியில் ஒடியா ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று எழுந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போராட்டங்களே காரணம்.
  • வரலாறு நெடுகிலும் படையெடுப்புகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்ட பிராந்தியம் இது. வெவ்வேறு கால ஆட்சியாளர்களுடைய பாதிப்பினால், இந்தி, வங்கம், தெலுங்கு, ஆங்கிலம் என்று பன்மொழி ஊடுருவல்கள் அதிகம். மாநிலத்தைச் சூழ்ந்திருந்த வறுமை மக்களுடைய உணர்வுகளையும் கீழே அழுத்தி வைத்திருந்தது.
  • சமூகத்தின் பீறிட்டெழும் தருணத்தைச் சரியாக அடையாளம் கண்டார் நவீன். தேர்ந்த நிர்வாகத்தின் மூலம் வறுமையிலிருந்து மெல்ல மாநிலத்தை மீட்பவர் சமூகத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப புது உருவகத்தையும் அதற்கு அளிக்கிறார்.
  • பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தவறுதலாக உச்சரிக்கப்பட்டு, அதுவே அதிகாரபூர்வமாகவும் நீடித்த மாநிலத்தின் பெயர்ஒரிஸ்ஸாஎன்பதைஒடிஷாஎன்றும், மொழியின் பெயர்ஒரியாஎன்பதைஒடியாஎன்றும் 2011இல் மாற்றினார் நவீன்.
  • ஒடிஷாவின் இளைய தலைமுறை கடந்த காலப் பெருமிதத்தைக் கைப்பற்றி, சமகாலத் தாழ்விலிருந்து, எதிர்காலம் மீதேறும் வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒடியர்களால் கட்டியெழுப்பப்பட்டகலிங்கப் பேரரசு கதையாடல்மீளப் பேசப்படுகிறது.
  • பண்டைய ஒடிஷாவின் பெருமையைப் பறைசாற்றும் அருங்காட்சியகங்கள், பழங்குடிகள் உள்பட ஒவ்வொரு சமூகத்தின், பிராந்தியத்தின் வெளிப்படுத்தும் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பஞ்சம், வறட்சி, ஏழ்மை, ஊழல் என்று எதிர்மறைச் செய்திகளாலேயே தேசிய ஊடகங்களால் சுட்டப்பட்ட ஒடிஷாவின் அடையாளத்தை ஆக்கபூர்வமானதாக மாற்ற விளையாட்டுத் துறையை ஒரு கருவியாகக் கையாள்கிறது அரசு. பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த 2018 உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அப்படியான ஒன்று. இந்திய ஹாக்கி அணியின் புரவலராகவும் ஒடிஷா இன்று செயல்படுகிறது.
  • நவீன ஒடிஷாவின் அரசியல் முகமாக நவீன் பட்நாயக் முன்னிறுத்தப்படுகிறார். அரசியல் தளத்தில் பாஜகவின் தேசியவாத கதையாடலை எதிர்கொள்ளவும் பிஜு ஜனதா தளத்துக்கு இந்த உத்திகள் உதவுகின்றன. இந்த உத்திகளுக்கு எல்லாம் பின்னணியில் பாண்டியன் நிற்கிறார்.

அரசிலிருந்து அரசியலுக்கு

  • அடுத்த ஆறு மாதங்களில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலையும் ஒடிஷா எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமான அளவில் அரசின் குறைகேட்பு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டது அரசு. மக்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு கையோடு நடவடிக்கை எனும் உத்தரவாதத்தோடு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகளின் பின்னணியில் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திட்டமே பிரதானமாக இருந்தது.
  • நெடும் பயணங்களை உடல்நிலை காரணமாகத் தவிர்க்கும் நவீன் இந்த நிகழ்ச்சிகளுக்கு அரசு சார்பில் பாண்டியனை அனுப்பினார். மாநிலம் எங்கும் 190 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், எல்லாப் பகுதிகளிலும் மக்களிடம் பாண்டியனுக்குக் கிடைத்த அசாதாரண வரவேற்பு அவரது வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கியது.
  • அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரவேற்பை பாண்டியனுக்குக் கொடுத்தார்கள் ஒடிஷா மக்கள். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிகளில், அவரைப் பார்க்க கூட்டம் முண்டித்தது; அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள இளைஞர்கள் போட்டி போட்டனர். குறிப்பாக, பெண்கள் அவரிடம் பெரும் அன்பை வெளிப்படுத்தினர்.
  • பிஜு ஜனதா தளத்தில் இது வியப்பாகப் பார்க்கப்பட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக நவீனைச் சாடின. ஆட்சியாளருக்கும் அதிகாரிக்கும் இடையிலான கோட்டை பாண்டியன் அழித்துவிட்டார் என்றும் நவீன் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவை பேசின.
  • விமர்சனங்கள் ஓரளவுக்கு மேல் அதிகரித்த நிலையில், சட்டமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார் நவீன். அவரது அரசியல் வாழ்வில் வேறு எவர் ஒருவருக்காகவும் சட்டமன்றத்தில் இவ்வளவு நீண்ட விளக்கம் அளித்ததில்லை என்று அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படும் இந்த விளக்கத்தின்போது, ‘பாண்டியனுடைய செயல்பாடுகள் அரசின் வரைமுறையை எந்த வகையிலும் தாண்டவில்லைஎன்று நவீன் குறிப்பிட்டாலும் காட்சிகள் விரைவில் மாறின.
  • இன்னும் பத்தாண்டுகளுக்கு அரசுப் பணிக் காலம் உள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெற்றார் பாண்டியன். அடுத்த நாளே ‘5டிஎன்று சொல்லப்படும் மாநில அரசின் அத்தனை துறைகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் குழுவுக்கான பொறுப்பில், கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்துடன் பாண்டியன் அமர்த்தப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே பிஜு ஜனதா தளத்தில் பாண்டியன் சேர்ந்தார். வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; மாநிலத்தின் 147 சட்டமன்றத் தொகுதிகள், 21 மக்களவைத் தொகுதிகளில் கட்சி வெற்றிக்குப் பணியாற்றுவதே அடுத்த பணி என்று அறிவித்திருக்கிறார் பாண்டியன்.

உருவாக்கப்படும் அடுத்த தலைமை

  • அமைதியாகக் காய் நகர்த்துவதில் கில்லாடி நவீன். பாண்டியனுடைய அரசியல் பிரவேசம் பிஜு ஜனதா தளத்தின் எதிர்காலத்துடன் பிணைந்தது என்றே ஒடிஷா முழுவதும் பேசப்படுகிறது. “அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் இரண்டையும் முன்னே நின்று பாண்டியன் வென்று காட்ட வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாண்டியனுடைய இடத்தை நவீன் முடிவெடுப்பார்என்று பிஜு ஜனதா தளத்தினர் கூறுகிறார்கள்.
  • கட்சிக்குள்ளே பாண்டியனுக்கு வரவேற்பு இருக்கிறது; இதுவரை வெளிப்படையான எதிர்ப்பு ஏதும் இல்லை என்றாலும், எதிர்க்கட்சிகள்ஒடிஷாவுக்கு வெளியாள் தலைமையை ஏற்க முடியாது. நவீன் நிழலில் பாண்டியன் பதுங்கியிருக்கிறார். வெளியே அவர் வரும்போது அடி வாங்குவார்என்கின்றன.
  • பிஜு ஜனதா தளத்தினர் பதிலடி தருகின்றனர். “நவீன் அரசியலுக்கு வந்தபோது அவரையும் டெல்லிவாலா என்று பேசியவர்கள்தான் இதே எதிர்க்கட்சியினர். அவர்கள் பேச்சு இன்றைக்கு என்ன ஆனது? பாண்டியன் எங்கள் மருமகன். ஒடியராகவே மாறிவிட்டவர். ஒடியர்கள் எந்த அளவுக்கு ஒடிய அடையாளத்தை நேசிக்கிறவர்களோ அதே அளவுக்கு ஒடிஷாவுக்கு உழைத்தவர்களையும் அணைத்துக்கொள்பவர்கள்!” என்கிறார்கள். நவீனும் இதையே கோட்டிட்டு காட்டுகிறார். “ஒடியாவுக்கு உழைக்கும் எவரும் ஒடியர்தான்!”
  • சாத்தியமா இது? தெரியவில்லை. பாண்டியன் அரியணை ஏறினால், ஒடிய தேசிய அரசியலின் பன்மைத்துவம் மேலும் மின்னும். பிறப்பால் மலையாளியான எம்ஜிஆரைத் தமிழ்நாடு அரவணைத்துக்கொண்டது போன்று புதிய வரலாறு ஒன்று ஒடிஷாவிலும் உருவாகும்!

நன்றி: அருஞ்சொல் (22 – 12– 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories