- அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள "பிபர்ஜாய்' (வங்க மொழியில் "பேரழிவு') குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியை நாளை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது குஜராத் மாநிலத்தின் கட்ச், துவாரகா, ஜாம் நகர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். கடலோரம் வசிக்கும் ஏறத்தாழ 30,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- கிழக்கு மத்திய அரபிக் கடலில் ஒருவாரம் முன்பு உருவான இந்தப் புயல், கரையைக் கடக்கும்போது பலத்த மழையுடன் 125 முதல் 150 கி.மீ. வரையிலான வேகத்தில் சூரைக்காற்றுடன் விரைவதால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது. புயலுக்குப் பிறகும்கூட இரண்டு, மூன்று நாள்கள் அதிகன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
- புயல் காற்றுடனும் அடைமழையுடனும் தாக்கும் பிபர்ஜாய் காரணமாக பயிர்கள், வீடுகள், சாலைகள், மின்சாரம், தொலைத் தொடர்பு கம்பங்கள் உள்ளிட்டவை கடும் சேதத்தை எதிர்கொள்ளும். கடற்கரை பகுதிகளில் அலைகள் 6 மீட்டர் முதல் 14 மீட்டர் உயரம்வரை எழ வாய்ப்புள்ளதால், கடற்கரை பகுதியில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகள், கப்பல் போக்குவரத்து, மீன் பிடித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 6-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு உருவான பிபர்ஜாய், இதுவரை ஒன்பது நாள்களைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடப்பதற்கு மேலும் மூன்று நாள்கள் பிடிக்கும். 2018-ஆம் ஆண்டு வங்கக் கடலில் உருவான "கஜா' புயலும், 2019-ஆம் ஆண்டு அரபிக் கடலில் உருவான "க்யார்' புயலும் ஒன்பது நாள்கள், 15 மணிநேரம் இருந்தன. அவற்றோடு ஒப்பிடும்போது, பிபர்ஜாயின் ஆயுள் கூடுதலாகவே இருக்கும் என்பது உறுதி.
- பிபர்ஜாய் புயல் முன்னேற்பாடுகளை பிரதமரே நேரடியாக ஆய்வு செய்திருப்பது வரவேற்புக்குரியது. புயலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார். மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உறுதிப்படுத்த 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
- கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முந்தைய "கஜா' புயலும், "க்யார்' புயலும் தந்த அனுபவங்கள் கைகொடுக்கின்றன.
- புயல்கள் தொடர்ந்து தாக்குவது வழக்கமாகவே மாறியிருக்கிறது. ஒவ்வொரு புயலும் பல கோடி ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட கட்டமைப்புகளை முற்றிலுமாக சிதைத்து சீரழித்து பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. நாம் முன்னெடுக்கும் கட்டமைப்புகளும், பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளும் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே நமது முதலீட்டுச் செலவினங்கள் விரயமாகாமல் தடுக்க முடியும்.
- பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு குறைவுதான். 1960-க்கும் 2021-க்கும் இடையிலான நமது கரியமில வாயு வெளியேற்றம், உலகளாவிய பங்களிப்பில் வெறும் 3.4% மட்டுமே. அதனால், பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்துவிடாது.
- பருவநிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் அசிரத்தையாகவும், அசட்டையாகவும் கடந்துபோகும் காலம் முடிந்துவிட்டது. அவை உண்மையான பேராபத்துகள் என்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும்.
- புயல், வறட்சி, வெள்ளப்பெருக்கு, பருவம் தவறிய அடைமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், மனித இனம் தனக்குத்தானே கேட்டு வாங்கிவந்த வரம் என்றுதான் கூற வேண்டும். அறிவியல் சாதனைகள் என்று நாம் கருதும் ஒவ்வொரு வாழ்க்கை வசதியும், அதனுடன் ஆபத்தையும் சேர்த்தே வழங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
- மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நாம் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களானாலும், உருவாக்கும் கட்டமைப்பு வசதிகளானாலும் அவை எந்தவொரு பருவநிலையையும் எதிர்கொள்வதாக அமைக்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் தாக்குதல்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவது அவசியம்.
- தொழில்நுட்பம் நமக்குப் பல உதவிகளை செய்திருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஓரளவுக்கு குறைக்க முடிகிறது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்பை முன்னெச்சரிக்கையால் தடுத்துவிட முடியாது. பாதிப்புகளை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளும், வாழ்க்கை முறையும்தான் ஓரளவுக்கு இழப்பை குறைக்கும்.
- பருவநிலையை எதிர்கொள்ள முடியாத கட்டமைப்போ, வளர்ச்சிப் பணிகளோ இந்தியா போன்ற அதிகம் மக்கள்தொகையுள்ள வளர்ச்சி அடையும் நாட்டுக்கு மிகப் பெரிய பணவிரயம். 2030-க்குள் பருவநிலைக்கு ஏற்ப கட்டமைப்பை உருவாக்க ரூ. 85.6 லட்சம் கோடி தேவைப்படும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பு. பணவிரயத்தைத் தடுக்க செய்யப்படும் முதலீட்டை மூலதனச் செலவாகக் கருதி மேற்கொள்ள வேண்டும்.
நன்றி: தினமணி (14 – 06 – 2023)