TNPSC Thervupettagam

பாதுகா பட்டாபிஷேகம்

October 17 , 2024 8 hrs 0 min 15 0

பாதுகா பட்டாபிஷேகம்

  • சரணாகதி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ராமாயண மகாகாவியம் அமைந்துள்ளது. மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனே மனிதராக அவதரித்து வாழ்ந்து காட்டியுள்ளார். ராமபிரான் வேறு, தர்மம்வேறு என்று பிரிக்க முடியாத வகையில் அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்திருந்தது. விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் பரதன். எவ்வித தவறும் செய்யாமல் இருந்தபோதும், அனைவரிடம் இருந்தும் வீண் பழிச்சொல்லை பெற்றுக் கொண்டவர் பரதன்.
  • ராமபிரானுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறவில்லை. நடந்த சம்பவங்களை அறியாமல், அயோத்தி அரண்மனைக்குள் நுழையும் பரதனைப் பார்த்து, வசிஷ்ட முனிவர்,“இனி ராஜ்யம் உனக்குத்தான். உடனேபட்டாபிஷேகம் செய்துகொள்” என்கிறார்.ஏதும் புரியாத பரதன், “எனக்கு என்ன தகுதிஉள்ளது? இது தொடர்பாக எனக்கு ஏதும்தெரியாது” என்கிறார்.
  • ராமபிரானின் தாயார் கோசலை உட்பட யாரும் பரதனை நம்பவில்லை.ராமபிரானை தன்னுடன் எப்படியாவது தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன், கானகம் வருகிறார் பரதன். அவரைக் கண்டதும்குகன், மிகவும் கடுமையாகப் பேசுகிறார். உடனே பரதன், “எம்பெருமானுக்கு பிரியமானவனாக இருக்கும் நீ, இவ்வாறு பேசக் கூடாது? உனக்கு இருக்கும் அதே உணர்வுகள் எனக்கும் உண்டு. ராமபிரான் எனக்குத் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். என்னுடன் அழைத்துப் போகவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
  • அடுத்ததாக பரத்வாஜ முனிவரை சந்திக்கிறார் பரதன். முனிவர் பரதனைப் பார்த்து,“பரதா.. இப்போது நீ வந்திருப்பது எதற்காக? உனக்குத்தான் ராஜ்யம் கிடைத்துவிட்டதே? நீ நல்லவனாக இருந்தாலும், உனது செயல் எனக்குப் பிடிக்கவில்லை” என்கிறார். அதற்கு பரதன், “எனக்குத் தெரியாமல் எனது தாய் இவ்வாறு செய்துவிட்டார். ராமபிரானை மீண்டும் அழைத்துப் போகவே வந்துள்ளேன்” என்கிறார்.
  • பரதன் வந்திருப்பதை அறிந்த லட்சுமணர் கடும் கோபத்துடன் ராமபிரானைப் பார்த்து, “இந்த ராஜ்யம் தனக்கே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கேட்கவேபரதன் வந்திருப்பான். இப்போதே உத்தரவிடுங்கள். நான் அவனை இருக்கும் இடம் தெரியாமல் செய்கிறேன்” என்கிறார்.
  • அதற்கு ராமபிரான், “பரதன் யார் தெரியுமா? தமையன் என்ற சொல்லைக் கேட்டதுமே பாசம் பொழிபவன். தந்தை ஸ்தானத்தில் என்னை நினைத்துக் கொண்டிருப்பவன். தனக்கு இந்த ராஜ்யமே வேண்டாம் என்று கூறவே இங்கு வந்துள்ளான்” என்கிறார்.
  • ராமபிரானிடம் வந்த பரதன், தன்னுடைய இயலாமையை எடுத்துச் சொல்லி, ‘நீயேசரண்’ என்கிறார். ஓர் உயிருக்கு மிகப் பெரிய துன்பமாக இருப்பது ‘நான் சுதந்திரன்’ என்ற எண்ணமே ஆகும். தான் சுதந்திரன் அல்ல, ராமபிரானின் கட்டளைப்படியே தன் வாழ்க்கை நடக்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் ராமபிரானிடம் சரணாகதி செய்தார் பரதன். மானம் (கௌரவம்), அபிமானம் (பாசம்), பகுமானம் (பெருமதிப்பு) ஆகியன அனைவரும் பரதனை சந்தேகப்படும்படி செய்துள்ளன.
  • பரதனின் உள்ளத்தில் இருக்கும் ராமபக்தியை புரிந்துகொண்ட ராமபிரான், தமது பாதுகைகளை பரதனிடம் அளித்து அவற்றுக்கு பட்டாபிஷேகம் செய்ய வைத்தார்.‘பாதுகா பாதுகா பாதுகா’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தால் ‘பாதுகாப்பா’ என்று வரும். இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்தினால், அவை நம்மை நிச்சயம் பாதுகாக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories