TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: கடந்த காலத்திலிருந்து சில படிப்பினைகள்

February 17 , 2020 1795 days 865 0
  • ஒரு காவிரி விவசாயி, “வாய்க்கால் தண்ணீருக்காக இந்த ஆண்டு ஒரு முறைகூட வயலில் மடை திறக்கவில்லை. அளவாக மழை பெய்துகொண்டேயிருந்தது” என்றார். ‘காலால் மடை திறக்கும் காவிரி விவசாயி’ என்ற கேலிப் பட்டம் பெற்றிருந்தவர்கள், இந்த ஆண்டு மடையே திறக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் வாய்க்காலில் அற்றுப்போயிருந்த மீன் புழக்கத்தை இந்த ஆண்டு காண முடிந்தது. சேறும் தண்ணீருமாக இருந்த வாய்க்காலில் பொத்திப் பொத்தி மீன் பிடித்தார்கள். தரிசு கிடக்கும் வயல்கள் என்று எங்கேயும் இல்லை.
  • சரியான பருவ நிலையும், அதை அனுசரித்த விவசாய நடைமுறைகளும் இந்த ஆண்டின் மீட்சிக்குக் காரணம். இப்போது காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாகப் பாதுகாக்கப்போவதாகச் செய்தி. அரசாங்கத்தின் அக்கறையும் சேர்ந்துகொண்டதால், இந்த ஆண்டில் மீண்ட சூழல் வளம் இனி நிரந்தரமாகும் என்று நம்புவோம்.

வேறு பாதுகாப்பு வேண்டுமா?

  • ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் காவிரிப் படுகையைப் பாலைவனமாக்கும் என்று விவசாயிகளுக்கு அச்சம். அதைப் போக்குவது வேளாண் மண்டல அறிவிப்பின் இப்போதைய நோக்கமாக இருக்கும். வேளாண் மண்டலம் என்ற கருத்தின் வீச்சுக்குள் பருவநிலை மாற்றம் வரும்.
  • விளைபொருளுக்கான விலையும் வரும். அந்தக் கருத்தை முழுமையாக விரித்துச் செயல்படுத்த வேண்டும். நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கவில்லையானால், அதுவே காவிரிப் படுகையை வேகமாகப் பாலைவனமாக்கும். நான் ஆதாயமில்லாத விவசாயம் செய்கிறேன்;
  • வேறு பயன்பாட்டுக்காக நல்ல விலை கொடுத்து ஒருவர் என் நிலத்தை வாங்கிக்கொள்வதாகச் சொல்கிறார்; அவர் விவசாயம் செய்யப்போவதில்லையே என்று நிலத்தை விற்க மறுப்பேனா? விளையும் நெல்லே என்னை வளமாக்கிவிடும் என்றால், நான் நிலத்தை விற்பேனா? நெல்லுக்கு நல்ல விலை என்பதைவிட, வேளாண் மண்டலத்துக்குப் பாதுகாப்பு வேறு என்ன வேண்டும்? நெல்லுக்கு மதிப்பு இருந்தபோது கையகல நிலத்தைக்கூட நடவு செய்யாமல் விட மாட்டர்கள்.
  • விவசாயம் என்னை வாழ வைக்காது. வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருப்பதால் வேறு பயன்பாட்டுக்கு நிலத்தை நான் விற்க முடியாது. அப்படி ஒரு நிலைமை வருமானால் வருமானம் இல்லாத விவசாயத்துக்குப் புத்தடிமையாகிப் போவேன்.

அந்தக் காலம் எப்படி இருந்தது?

  • வேளாண் மண்டலக் கருத்து செம்மையான திட்ட வடிவம் பெற்றால் காவிரிப் படுகை எப்படி இருக்கும்? கற்பனை என்று ஒதுக்கிவிடாதீர்கள். எல்லாத் திட்டங்களுமே கற்பனை என்ற வித்திலிருந்துதான் முளைக்கின்றன.
  • அப்போது வந்ததுபோல் காவிரிப் படுகை ஆறுகளில் ஆண்டில் எட்டு மாதங்களுக்குத் தண்ணீர் வரும். ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் வயலுக்கும் வாய்க்காலில் வந்துவிடும்.
  • நாற்று விடவோ, நட்ட பயிரைக் காப்பாற்றவோ டீசல் செலவுசெய்து தண்ணீர் இறைக்க வேண்டாம். கோடையிலும் சுற்றுச்சூழலுக்காக இரண்டு முறையாவது தண்ணீர் விடுவார்கள். ஆற்றுத் தண்ணீருக்கு ஆசைப்பட்டால் நீங்கள் அப்படியே குடத்தில் எடுத்துவந்து குடிக்கலாம்.. நகரின் செங்குளத்தில் எங்கள் பள்ளிக்கூடம் நீச்சல் போட்டி நடத்தியதுபோல் மீண்டும் நடத்தலாம்.
  • தெப்பத் திருவிழாவுக்குத் தண்ணீர் இறைக்க வேண்டாம். தெப்பக்குளம் ஆனி மாதத்தில் ததும்பிக்கொண்டிருக்கப்போகிறது.
  • மதகுக்கு மதகு நின்று மீன் வாங்கலாம். அப்போதுபோல் கேரளத்துக்கு மார்கழி, தை மாதங்களில் கருவாடு அனுப்பி மாளாது. ஆவணியிலோ நாலரை லட்சம் ஏக்கரில் விளையும் குறுவை நெல் ஆண்டுதோறும் கேரளத்துக்குச் செல்லப்போகிறது. நான் சம்பா நடவுக்கு நாற்று பறிக்கும்போது, அடுத்த வயல்காரர் குறுவை அறுவடை செய்வார். நான் சம்பா நட்ட பத்து நாட்களில் அவர் தாளடி நட்டுவிடுவார்.
  • வயலும் வாய்க்காலும் எப்போதும் கோலாகலமாக இருக்கும். மேய்க்காலில் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் மந்தை மந்தையாக மேயும். அந்தி வந்துவிட்டாலோ உங்கள் வீட்டுக் கொட்டிலில் அவை வைக்கோல் கடிக்கும் சத்தமும், கொம்பு சிலுப்பும் சத்தமும் அலாதி ஆனந்தம். குட்டைத் தண்ணீரில் தவம் கிடக்கும் எருமைகளை மல்லுக்கட்டி, வீட்டுக்கு ஓட்டிவர வேண்டியிருக்கும். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வாரச் சந்தையிலும், நீலத்தநல்லூர் வருடச் சந்தையிலும் மாடுகள் வந்து குவியப்போகின்றன.

விவசாயிகளின் உரிமைகள்

  • நாற்றங்காலின் களிப் பிடிப்பைத் தணிக்கக் குறுங்கனிமச் சலுகை விதிகளில் விவசாயிகள் ஆற்று மணல் எடுத்துக்கொள்ளலாம். அது விவசாயிகளின் உரிமையாகும். குழந்தைகள் படிக்க பெற்றோர்கள் நகரங்களுக்கு இடம்பெயர வேண்டாம். சரியாகச் சொல்வதென்றால் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு மறுபெயர்வு நடக்கும். நகரங்கள் இப்போதைய வேகத்தில் பெருக்காது.
  • பெரு நகரங்களில் கிடைக்கும் கல்வியின் தரத்திலேயே உங்கள் கிராமத்திலும் கிடைக்கப்போகிறது. நீங்கள் தனியார் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பிக் கடனாளியாக வேண்டாம். உடம்புக்கு வந்துவிட்டால் நகரத்துக்கோ பெரு நகரத்துக்கோ சிறப்பு மருத்துவரைத் தேடிச் செல்ல வேண்டுமே என்ற கவலை வேண்டாம். கிராமத்திலேயே சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கும்.
  • “விவசாயிகளுக்கு மறுக்கும் உரிமை ஏது?” என்று சொல்லி எல்லா நிலமும் அரசுக்கே சொந்தம் என்ற மேற்கத்தியக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசு நில ஆர்ஜிதம் செய்யாது. விவசாயிகளின் நிலம் விவசாயிகளுடையது; அவர்கள் சம்மதமில்லாமல் அதைக் கையகப்படுத்த இயலாது என்பதை ஏற்றுக்கொள்ளும். உங்களுக்குக் கைமேல் நஷ்டஈடு கொடுப்பார்கள்.
  • விளைந்த நெல்லை வாங்குவதற்கு முன்பணத்தோடு மார்கழியிலேயே உங்களிடம் வியாபாரிகள் வந்துவிடுவார்கள். அல்லது அரசாங்கமே வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளும். நெல்லை விற்கும் இடத்தில் நீங்கள் ரொக்கச் செலவு ஏதும் செய்ய வேண்டாம். இங்கு உற்பத்தியாகும் நெல் எல்லாம் இங்கேயே அரவையாகும்.
  • உணவு பதனிடவும், மதிப்புக்கூட்டவும் மூடிக்கிடக்கும் அரவை ஆலைகளை மீண்டும் திறந்துவிடுவார்கள். காவிரிப் படுகையில் பிரித்துப்போட்ட ரயில் தடங்கள் மீண்டும் பயனுக்கு வரும். இவையெல்லாம் வேளாண் மண்டலத் திட்டங்களை இக்காலத்துக்கு ஏற்ப வகுக்க வேண்டிய தடங்களைக் காட்டும்.

முன்னுரிமைப் பிரச்சினை

  • இரண்டாயிரம் ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்த காவிரிப் படுகைக்கு இப்போது ஆபத்து எப்படி வந்தது? முன்னேற்றம், வளர்ச்சி என்பவை பற்றி இன்றைய நாகரிகம் கற்பிப்பது எதுவோ அந்த நிரந்தர மூலத்திலிருந்துதான் இந்த ஆபத்து வருகிறது. எண்ணெய்க்கும் எரிவாயுவுக்கும் முன்னுரிமை இருந்தது. வேளாண் மண்டல அறிவிப்பு அந்த முன்னுரிமையை விவசாயிகளின் நலனுக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் மாற்றியிருப்பதாக ஊடகங்கள் கருதுகின்றன. முன்னுரிமைக்குப் போட்டியிடுபவற்றுள் எதைத் தேர்ந்துகொள்வது என்பதை அறிவியல் தானாகச் சொல்லாது. நாம்தான் தேர்வுசெய்கிறோம். நம் அரசு உணவுப் பாதுகாப்பை தேர்ந்துகொண்டிருப்பது பொருளாதாரம் சொல்லும் முடிவும் அல்ல.
  • பொருளாதாரச் சிந்தனையானது இறக்குமதியாகும் எண்ணெய்க்கு உள்ளூரில் மாற்று கிடைக்குமா என்பதைத்தான் தீவிரமாக ஆராயும். வேளாண் மண்டல முடிவு அரசியல் முடிவாகவோ, மாற்றுச் சிந்தனைக் கலாச்சாரம் சார்ந்த முடிவாகவோ இருக்கலாம். நம் அரசாங்கத்தின் முடிவுக்கு மாற்றுச் சிந்தனைக் கலாச்சாரம்தான் அடிப்படை என்றால், காவிரிப் படுகை விவசாயிகள் இப்போதுபோல் இரண்டு மடங்கு மகிழலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories