TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எப்படி இருக்க வேண்டும்?- ஒரு மாதிரி வரைவு

February 19 , 2020 1793 days 925 0
  • கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகை மண்டலத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி அரசின் முக்கியமான கொள்கை முன்னெடுப்பாகும்.
  • காவிரிப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிபொருட்களுக்காகப் பல நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருந்ததானது வேளாண்மையையே நம்பியிருக்கும் இந்த மாவட்டங்களைப் பெரிதும் பாதிக்கும் என மக்களும் வேளாண் அறிஞர்களும் அஞ்சிய நிலையில், இந்த அறிவிப்பு அனைவரையும் ஆசுவாசப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் கொள்கை அறிவிப்பு மட்டுமே போதாது. அதையும் தாண்டிய செயல்திட்டம் தேவை.
  • இதற்கு முன்பு அமெரிக்காவில் டென்னிசி பள்ளத்தாக்கு, இந்தியாவில் தாமோதர் பள்ளத்தாக்கு என மண்டலங்களுக்கான தனித்துவத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அந்தப் பகுதிகளில் ஓடும் நதிகளில் நிகழும் கட்டற்ற வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை மாற்றியமைக்க ஏற்படுத்தப்பட்டவை. அணைகள், நீர்மின் திட்டங்கள், அனல்மின் திட்டங்கள் என அடிப்படைக் கட்டமைப்போடு நின்றுவிட்டவை. அவற்றால் அந்தப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு நிலையான நீர்ப்பாசனமும் மின்சாரமும் கிடைத்தன. ஆனால், ஒரு வேளாண் தொழில் கட்டமைப்பு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
  • ஐரோப்பாவின் டென்மார்க், நாட்டின் மத்தியப் பகுதியில் ஒரு வேளாண் தொழில் மண்டலத்தை உருவாக்கி, வேளாண்மையையும் அது தொடர்பான தொழில்களையும் ஒருங்கிணைத்துப் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. பால் மற்றும் இறைச்சிப் பொருட்கள் உற்பத்தியை மையமாகக் கொண்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களும், தனியார் உணவுத்தொழில் பூங்காக்களும் அங்கே நிறுவப்பட்டன. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் உழவர்களுக்குமான சங்கிலித் தொடர்புகள் உருவாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பன்றிகளை அறுத்துப் பதப்படுத்தும் மாபெரும் இறைச்சிப் பதனிடும் நிறுவனமானது பன்றி வளர்க்கும் உழவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்புச் சங்கிலி நவீன தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இன்று உலகின் மிகப் பெரும் பன்றி இறைச்சி ஏற்றுமதியாளர் டென்மார்க்தான்.
  • 2001-ல் 31 ஆயிரம் கோடியாக இருந்த டென்மார்க் வேளாண் பொருள் ஏற்றுமதி, 2011-ல் 1.24 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது (400% வளர்ச்சி). மேற்கத்திய அரசுகளும் பொருளியல் திட்ட நிபுணர்களும் சிலிக்கான் பள்ளத்தாக்குபோல நவீனத் தொழில்நுட்பப் பிராந்தியங்களை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தபோது, டென்மார்க் வேளாண்மைப் பொருளாதார மண்டலத்தை வெற்றிகரமாக உருவாக்கியது மிக முக்கியமான நிகழ்வாகும். உற்பத்தியும் நுகர்வும் இடைத்தரகர்கள் இல்லாத வகையில் இணைக்கப்படும்போது, உழவர்கள் தங்கள் உற்பத்திக்குச் சரியான விலை பெற்று உற்பத்தியைப் பெருக்குகிறார்கள்.

இந்தியாவில்...

  • இந்தியாவில் பால் உற்பத்திக் கூட்டுறவுகள் அந்தச் சாதனையைச் செய்துள்ளன. 1950-ல் 17 மில்லியன் டன்னாக இருந்த இந்தியப் பால் உற்பத்தி, சென்ற ஆண்டு 170 மில்லியன் டன்னைத் தாண்டி உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக மாறியதன் பின்னணி இதுதான். டென்மார்க் வேளாண் தொழில் மண்டல மாதிரியை அப்படியே இந்தியாவில் நகலெடுப்பது மிகப் பெரும் தவறாகிவிடும்.
  • டென்மார்க் உழவர்கள் சராசரியாக 150 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள். நம் உழவர்களின் சராசரிப் பண்ணை அலகு 5 ஏக்கருக்கும் குறைவானது. மேற்கத்திய உணவு பெருமளவில் பதப்படுத்தப்படுவது. நம் ஊரின் சூழல் அப்படி அல்ல.
  • ஆனால் டென்மார்க், டென்னிசி, தாமோதர் பள்ளத்தாக்கு, அமுல் போன்ற திட்ட வெற்றிகளின் அடிப்படைகளைக் கொண்டு வெற்றிகரமான காவிரி வேளாண் மண்டலத்தை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

காவிரி வேளாண் மண்டலம்

  • தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையம்போல காவிரி வேளாண் மண்டலத்தை ஒரு பொருளாதாரத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக அரசு உருவாக்க வேண்டும். அரசின் திட்டங்கள் பலவும் உற்பத்திப் பெருக்கம் என்னும் குறிக்கோளை முன்வைத்து இயங்குகின்றன.
  • ஆனால், நீடித்த உற்பத்திப் பெருக்கம் என்பது, உற்பத்தியாளருக்கு லாபகரமாக இருந்தால் ஒழிய நிகழாது. உற்பத்தி அதிகரித்தாலும் இன்று வேளாண்மை லாபகரமாக இல்லை. வேறு வழியின்றிச் செய்யப்படும் ஒன்றாக இருக்கிறது.
  • எனவே, இந்த நிலை மிக வேகமாக மாற்றப்பட வேண்டும். காவிரி வேளாண் மண்டலத்தின் அடிப்படை அலகு – சிறு உழவர். அவரது வருமானத்தை அதிகரிப்பதே இந்த நிறுவனத்தின் முக்கியமான, உடனடி நோக்கமாக இருக்க வேண்டும்.

சூரிய மின்உற்பத்தி

  • இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், வேளாண்மையில் ஒரு சிறு பகுதியாக இருந்த பால் உற்பத்தி, இன்று உழவரின் வருமானத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல, உழவருக்குக் கூடுதல் வருமானம் ஏற்படுத்தித் தரும் திட்டம்தான் மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் உழவர் சூரிய மின்உற்பத்தித் திட்டம்.
  • காவிரி வேளாண் மண்டல ஆணையமானது, அனைத்து உழவர்களையும் உடனடியாக இணைத்து, அவர்களின் பண்ணைகளில் சூரிய மின்உற்பத்திக் கலன்களை நிறுவி, அவற்றை மின்சார விநியோக நிறுவனத்துடன் இணைக்க உதவ வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு வருடம் 20-30ஆயிரம் வரும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இது குறுகிய காலத்தில் சிறு உழவர்களுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒரு கூடுதல் வருமானத்தை அதிகரிக்கும் வழி. உழவர்களுக்குப் பகலில் மின்சாரம் கிடைக்கும். அரசுக்கு மின்சார மானியம் மிச்சமாகும். சுற்றுச்சூழல் மேம்படும்.

இடைத்தரகர்கள் இல்லா தொடர்புச் சங்கிலி

  • காவிரிப் படுகை கிட்டத்தட்ட 35 லட்சம் டன் வரை நெல் உற்பத்திசெய்கிறது. தற்போது, அதில் ஒரு பங்கு அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. பெரும் பங்கு வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டு அரிசி மில்களுக்குச் செல்கிறது. அங்கிருந்து மீண்டும் அரிசி வணிகர்கள் மூலம் நகரங்களை அடைந்து கடைகளில் விற்கப்படுகிறது. பண்ணையிலிருந்து செல்லும் நெல், குறைந்தபட்சம் மூன்று லாப நோக்கம் கொண்ட நிறுவனங்களின் வழியாக நுகர்வோரை அடைகிறது.
  • இந்த முறையை மாற்றி, அமுல் போன்ற ஒரு கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கி, உழவர்களின் வயலிலிருந்து நுகர்வோரின் இல்லம் செல்லும் ஒரு நேரடித் தொடர்புச் சங்கிலியை உருவாக்க வேண்டும். இதை வழக்கமான அரசு நிறுவனமாக அரசு ஊழியர்களின் நிர்வாகத்தில் உருவாக்காமல், நாட்டின் மிகச் சிறந்த வேளாண் தொழில் வல்லுநர்களை அழைத்து அவர்கள் தலைமையில், வழிகாட்டுதலில் முன்னெடுக்க வேண்டும். இதுதான் மிக முக்கியம். ‘அமுல்’, வல்லபபாய் படேலின் வழிகாட்டுதலில், திருபுவன் தாஸ் படேல் என்னும் தன்னலம் கருதாத் தலைவரின் தலைமையில், டாக்டர். குரியன் என்னும் சிறந்த தொழில்நுட்ப மேலாளரின் மேலாண்மையில் உருவாக்கப்பட்டது. அதே தீவிரத்துடன், வெளிப்படையான செயல்பாட்டுடன் உருவாக்கப்பட்டால் இது வெற்றிபெரும் சாத்தியங்கள் அதிகம்.
  • காவிரி வேளாண் மண்டலத்தில் இருக்கும் மில்களில் நெல் பதப்படுத்தப்பட்டு, பிராந்தியக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு, நகர விற்பனை நிலையங்களைத் தேவைக்கேற்ப அடையும் வகையில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • நகர விற்பனை நிலையங்களிலிருந்து நுகர்வோர் வீடுகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப அரசு நிறுவனங்கள் எரிவாயு உருளைகளை விநியோகிப்பதுபோல எளிதில் செய்துவிடலாம். காவிரிப் படுகை பெருமளவில் உளுந்தும் உற்பத்திசெய்கிறது. அரிசியுடன் சேர்த்து இதையும் விநியோகிக்க முடியும்.
  • சராசரிக் குடும்பத்தின் மிகப் பெரும் நுகர்வு அரிசி, இட்லி அரிசி, உளுந்து ஆகும். இந்த முறையில், உற்பத்தியாளரும் நுகர்வோரும் தங்களுக்கான நியாயமான விலையைப் பரஸ்பரம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

கலப்புப் பண்ணை உருவாக்கம்

  • டென்மார்க் வேளாண் மண்டலம் மற்றும் ‘அமுல்’ நிறுவனத்தின் வெற்றிக்குப் பின் உள்ள முக்கியக் காரணம், உணவு தானிய உற்பத்தியைத் தாண்டிய, புரதம் மற்றும் கொழுப்பு என்னும் அதிக மதிப்புள்ள பொருட்களின் உற்பத்தியாகும்.
  • தானிய உற்பத்தி, பால் உற்பத்தி, மின்சார உற்பத்தி இவற்றோடு விலங்குப் புரத உற்பத்தியையும் உழவர்கள் சேர்த்துக்கொண்டால் கூடுதல் வருமானத்துக்கு வழிவகுக்கும். ஆடு, கோழி, முயல், மீன் எனப் பிராந்தியத்துக்கு ஏற்ற வகையில் விலங்குகளை வளர்ப்பது, பால் உற்பத்தியில் பெருமளவு ஈனப்படும் காளைக் கன்றுகளை இறைச்சிக்காக வளர்ப்பது எனப் பல முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
  • இப்படி வளர்க்கப்படும் விலங்குகள், பால்போல உள்ளூர்க் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்டு நேரடியாக நுகர்வோருக்கு விற்பனைசெய்யும் ஒரு வழியை உருவாக்க வேண்டும். இதற்கான பதனத் தொழிற்சாலை மற்றும் தொடர்புச் சங்கிலியை உருவாக்குவது கடினமான செயல். மிகக் கடினமான தரநெறிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். பதன நிலையம், குளிரூட்டப்பட்ட கிடங்குகள், வாகனங்கள், விற்பனையகங்கள் இவை அனைத்தினுடைய ஒருங்கிணைப்பும் இதில் கட்டாயம் தேவை. நிர்வாகமானது இதில் நன்றாகப் பயிற்சிபெற்ற ஒரு தனிக் குழுவின் கீழ் இருக்க வேண்டும். கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தத் துறையின் வளர்நுனியில் இருக்கும் டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் உதவியை நாடலாம்.
  • மின்சார உற்பத்தி, வேளாண் பொருள் (அரிசி, உளுந்து) நுகர்வோரை நேரடியாகச் சென்றடையும் வகையிலான இடைத்தரகர் இல்லா தொடர்புச் சங்கிலி, கலப்புப் பண்ணை/இறைச்சி உற்பத்தி/நேரடி விற்பனை என்னும் இந்த மூன்று வழிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், 5 ஆண்டுகளில் காவிரி வேளாண் மண்டலச் சிறு உழவர்களின் வருமானம் மேம்பட்டு, அவர்கள் வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும். காவிரி வேளாண் மண்டலப் பொருளியல் செயல்பாடுகள் ஒரு நீடித்த வளர்ச்சி நிலையை அடையும்.

காவிரி நதிநீர் மேலாண்மை மன்றம்

  • ராஜஸ்தான் மாநிலம் ஆள்வர் மாவட்டத்தில் 45 கிமீ நீளமுள்ள ஆர்வரி என்னும் வறண்டுபோன நதி ஒன்று இருந்தது. 650 மிமீ மழை பெய்யும் அந்தப் பகுதியின் மலைப் பகுதிகளில் காடுகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டு, அதன் நீர்ச்சேகரிப்புப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டபோது அது 1995-ல் உயிர்பெற்றது.
  • தற்போது, அந்த நதியால் பயன்பெறும் 72 கிராமங்களில் ஊருக்கு 2 பிரதிநிதிகள் என மொத்தம் 144 பிரதிநிதிகள் கொண்ட நதிநீர் மேலாண்மை மன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நதியில் வரும் நீரைக் கிராம மக்கள், நதிநீர் மேலாண்மை மன்றம் வழியாகத் தங்களுக்குள் சமரசமான வகையில் பங்கிட்டுக்கொள்கிறார்கள். நதியைப் பராமரிப்பதையும் அவர்களே மேற்கொள்கிறார்கள்.
  • காவிரி, அதன் துணை நதிகள், கால்வாய்கள் என அதனால் பயன் பெறும் மண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மேலாண்மை மன்றம் உருவாக்கப்பட வேண்டும். நீர்ப்பங்கீடு, கால்வாய்களைப் பராமரித்தல், நீர்வழிச் சீரழிவுகளைத் தடுத்தல் போன்றவற்றை இவர்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுப்பார்கள்.
  • கால்வாய்களைப் பராமரிக்கும் வேலைகளில் உள்ளூர்த் தொழிலாளர்களைத் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதிகள் மூலம் கோடை காலத்தில் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். காவிரி மண்டலத்தில் இருக்கும் பொதுப்பணித் துறையின் இந்தப் பிரிவு, காவிரி மண்டல ஆணையத்துடனும் நதிநீர் மேலாண்மை மன்றத்துடனும் இணைந்து இயங்க வேண்டும். மிக முக்கியமாக, நீர்நிலைகளிலிருந்து மணல் அள்ளுவது உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும்; மீறி அள்ளுபவர்களைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.

தொழில்நுட்பம்

  • காவிரி வேளாண் மண்டலத்தில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் நெல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் வாழை ஆராய்ச்சி நிறுவனம் எனப் பல வெற்றிகரமான ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.
  • பல்வேறு விதைப் பண்ணைகளும் உள்ளன. எனவே, காவிரி மண்டலத்தின் முக்கியமான பிரச்சினைகளை, தேவைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் காவிரி மண்டல ஆணையத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அந்தத் தொழில்நுட்ப நிறுவனம், உழவர்களுக்குத் தேவையான விதைகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் போன்றவற்றைத் தேவைப்படும்போது வழங்கும் வகையில் அனைத்து அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் நிறுவனமாக இருக்க வேண்டும். ஒரு அரசு மருத்துவமனைபோல இயங்க வேண்டும்.

வேளாண் வங்கி

  • காவிரி வேளாண் மண்டலத்துக்கென உழவர்களின் முதலீட்டோடு கூடிய ஒரு வங்கி உருவாக்கப்பட வேண்டும். வேளாண் மண்டலத்தில் இயங்கும் நூறு சதவீத உழவர்களுக்கும் வங்கிக்கடன் என்னும் நோக்கத்துடன் இது செயல்பட வேண்டும்.
  • கடன்கள் தொடர்பான செயல்பாடுகள் உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த ஒரு நேர்மையான உழவுச் செயல்பாட்டுக்கும் கடன் எளிதில் வழங்கும் வகையில் இந்த நிறுவனம் இயங்க வேண்டும்.

காவிரி மேலாண் ஆணையம் - நிறுவன அமைப்பு

  • பெரும் அலகு வேளாண் பண்ணைகள் கொண்ட மேற்கத்திய நாடுகளில்கூட வேளாண் தொழில்களானது கூட்டுறவு அமைப்பின் மூலமாகத்தான் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, டென்மார்க் எனப் பல நாடுகளிலும் மிக வெற்றிகரமான கூட்டுறவு வேளாண் நிறுவனங்கள், குறிப்பாக பால், இறைச்சி போன்ற தொழில்களில் உள்ளன. வேளாண் பொருள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் கொள்ளளவுகள் மிகவும் பெரியவை. அவற்றுக்கான வேளாண் பொருட்களைப் பல்லாயிரம் ஏக்கர்கள் பரப்பிலிருந்தோ அல்லது லட்சக்கணக்கான விலங்குகளிலிருந்தோதான் பெற முடியும்.
  • எனவே, தனிப்பட்ட உழவர்களோ அல்லது பால் உற்பத்தியாளர்களோ தங்களுக்கான பதப்படுத்தும் ஆலைகளை நடத்துவது பொருளியல்ரீதியாகச் சாத்தியமில்லை.
  • எனவேதான் மேற்கத்திய நாடுகளில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உழவர்கள் தங்கள் பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பூட்டி, சந்தைப்படுத்துகிறார்கள். இதன் மூலம், தங்கள் பொருளுக்கு அதிக மதிப்பை ஈட்டுகிறார்கள். பொருட்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதைவிட இது அதிகப் பலன் தரக் கூடியது.
  • எனவே, வேறெந்த நிறுவன அமைப்பையும்விட கூட்டுறவு அமைப்பே காவிரி மேலாண் ஆணையத்துக்கு மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் – உழவர்களின் பொருளியல் மேம்பாடு. எனவே, இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உழவர்களின் நேரடிப் பங்களிப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். வேளாண் மண்டல உழவர்களைக் கிராமக் கூட்டுறவு மூலம் இணைத்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இயக்குநர் குழு (50% பெண்கள்) இந்த நிறுவனத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
  • விதிமுறைகள் மூலம் தொழில் முறை அரசியல்வாதிகள் தவிர்க்கப்படும் சாத்தியங்கள் இருந்தால் மிக நல்லது. எவரும் 2 முறைக்கு மேல் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்னும் விதிமுறை அவசியம். சிறு, குறு உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் என மண்டல உழவுத் துறையின் அனைத்து அங்கங்களுக்கும் சரியான இடஒதுக்கீடு அவசியம். எல்லாத் தளங்களிலும், 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் காவிரி மண்டல ஆணையத்தை ஒரு உயிர்ப்புள்ள இயக்கமாகச் செயல்பட வழிவகுக்கும்.
  • காவிரி வேளாண் மண்டலத்துக்கென முன்னெடுக்க வேண்டிய முக்கியமான திட்டங்களை வடிவமைக்க நாட்டின் மிகச் சிறந்த வேளாண்மை விஞ்ஞானிகள், வேளாண் பொருளியல் ஆலோசகர்கள், சுற்றுச்சூழல் அறிஞர்கள், கிராமத் தொழில், கைவினைத் தொழில் நிபுணர்கள் என ஒரு குழுவை அமைக்கலாம். இவர்கள் இணைந்து இந்த மண்டலத்துக்கென குறுகிய கால (3-லிருந்து 5 ஆண்டுகள்) மற்றும் தொலைநோக்கு (10 ஆண்டுகள்) திட்டங்களை வகுத்து, மக்கள் முன் வைத்து அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களின் ஒப்புதலோடு வடிவமைக்க வேண்டும். அப்படி இறுதிசெய்யும் திட்டங்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு காலாண்டுக்கும் மீளாய்வுசெய்து நிறுவனத்தின் இயக்குநர் குழு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கைகள் எல்லாம் பொதுமக்கள் பார்வைக்குச் செல்லும் வகையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் அனுப்பப்பட வேண்டும்.
  • காவிரி வேளாண் மண்டல ஆணையத்தை வேளாண் தொழில் வல்லுநர்களே நிர்வகிக்க வேண்டும். வேளாண் தொழில் துறையில் நேரடிக் களச்செயல்பாடுகளில் அனுபவமுள்ள நிர்வாகிகளை, நாட்டின் சிறந்த வேளாண் வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இறுதியாக...

  • சிறு உழவர்களின் பொருளியல் தன்னிறைவே தன் நோக்கம் எனக் காவிரி வேளாண் மண்டல ஆணையம் செயல்பட வேண்டும். அதன் செயல்பாடுகளில் பெண்களின் பங்கு 50% இருக்க வேண்டும். அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக, உழவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
  • எடப்பாடி பழனிசாமியின் அரசு தமிழக வேளாண் துறையின் மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், மூன்றாம் உலக நாடுகளில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான வேளாண் பொருளியல் திட்டம் என வரலாறு பேசும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories