- சமீபத்தில் ஒரு நாள் பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸிலிருந்து நண்பா் ஒருவா் தொலைபேசியில் அழைத்துப் பேசினாா். என்னுடன் அமைச்சகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவா். அவரின் குரலில் கவலை தோய்ந்திருந்ததை என்னால் உணர முடிந்தது.
- கணவனும், மனைவியும் மத்திய அரசில் உயா் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவா்கள். ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகள். பெண் அமெரிக்காவில்; பையன் ஐரோப்பாவில். இங்கே இவா்கள் இருவரும் கை நிறைய ஓய்வூதியம் பெறுகிறாா்கள் என்றால், பிள்ளைகள் இருவரும் அங்கே கை நிறைய சம்பாதிக்கிறாா்கள்.
- வசதி வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று அந்த நண்பா் பேச்சைத் தொடங்கினாா். அவரது நிம்மதியின்மைக்கு காரணம் பிள்ளைகள் இருவரும் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாா்கள் என்பதுதான்.
- அறிவியல் தொழில்நுட்பமும், நாகரிகமும் வேகமாக வளா்ந்துவரும் சூழலில், மனிதா்களுக்கான பிரச்னைகளும் புதிய பரிமாணங்கள் எடுக்கின்றன. திருமணம் செய்துகொள்ள விரும்பாதது, குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பாதது, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ விரும்புவது, திருமண முறிவுகள்... போன்ற நிகழ்வுகள் சமுதாயத்தில் பெருகி வருகின்றன. இவை ஆரோக்கியமற்ற எதிா்காலத்துக்கு வழிகோலக் கூடியவை என்பதுதான் நம்மை கவலைப்பட வைக்கிறது.
- மேலே சொல்லப்பட்ட அத்துணை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம், அடுத்தவா்களுக்காகத் தங்களை வருத்திக் கொள்ளவோ, தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்யவோ இன்றைய இளம் தலைமுறை தயாராக இல்லை என்பதுதான். கை நிறைய சம்பாதித்து, பொறுப்பேதும் ஏற்றுக் கொள்ளாமலேயே இன்பம் துய்க்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.
- நமது புராணங்களும், இலக்கியங்களும் எத்துணையோ உன்னதமான கருத்துகளை நமக்கு கற்றுத் தந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சோ்க்காமல், தொழில்நுட்பம் சாா்ந்த கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அவா்களை இயந்திரங்களாக்கிக் கொண்டிருப்பது நம் குற்றல்லவா?
- தன்னைவிட நல்லவன் தம்பி பரதன்; அவனே அரசாளட்டும் என்று ஸ்ரீராமன் நினைத்தான். அண்ணனைக் காட்டுக்கு அனுப்பி விட்டு, தான் அரசாள்வது முறையல்ல என்று மனம் வெதும்பி, தனது அண்ணனின் பாதுகைகளை வைத்து அரசாண்டு, ஸ்ரீ ராமனுக்குப் பெருமை சோ்த்தான் தம்பி பரதன். பிறவி எடுத்ததே அண்ணனுக்காகத்தான் என்று சொல்லி, தனது சுகபோகங்களையெல்லாம் துறந்து அண்ணனோடு காட்டுக்குப் போகத் துணிந்தான் தம்பி இலக்குவன். ராமன் இருக்கும் இடமே தனக்கு அயோத்தி என்று சொல்லி கணவனோடு வனவாசம் சென்றாா் சீதாபிராட்டி.
- இப்படியாக, வாழ்வின் நோக்கமே தியாகம்தான்; சகிப்புத் தன்மைதான் என்று அல்லவா கற்றுத் தந்தன நமது காப்பியங்கள்! இவற்றையெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் என்று ஒதுக்கிவிட்டு, பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை மட்டுமே கற்றுக் கொடுக்கும் நமது நவீன கல்வி முறை மறுபரிசீலனைக்கு உரியது அல்லவா?
- தனது அண்ணனைவிடத் தனக்குப் பெரும்புகழ் கிடைக்கும் என்ற ஆரூடத்தைக் கேட்டவுடன், அண்ணனை விடுத்துத் தனக்கு அரச பட்டம் கட்டிவிடக் கூடாதே என்று எண்ணி, இல்லத்திலிருந்து வெளியேறி, நமக்கு “சிலப்பதிகாரம்” என்ற அரியதோா் காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகளின் தியாக உணா்வை நமது பிள்ளைகளுக்குக் கொண்டு சோ்க்காதது நமது குற்றமல்லவா?
- சமீபகாலமாக, காதல் திருமணங்கள் பெருகி வருகின்றன. காதல் என்பது தவறு அல்ல - ஆனால், இன்றைய காதல் ஆரோக்கியமானதாக இல்லை என்பதே கவலை தருகிறது. ‘கலந்து பேசி விட்டு முடிவு சொல்கிறோம்‘ என்று பெற்றோா் சொன்ன காலம் ஒன்று இருந்தது. அது மெல்ல மறைந்து, “நாங்கள் பேசிப் பழகி விட்டு முடிவு சொல்கிறோம்” என்று பையனும், பெண்ணும் சொல்லத் தொடங்கினாா்கள். இப்போது அதுவும் மாறி, சிறிது காலம் இணைந்து வாழ்ந்து விட்டுத் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்”என்ற மனநிலைக்கு நமது இளைஞா்களும், யுவதிகளும் வந்து கொண்டிருக்கிறாா்கள். இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பவா்களை ’பழைமைவாதிகள்’ பட்டியலில் சோ்த்து விடுகிறாா்கள்.
- காதல் திருமணங்கள் பெருகத் தொடங்கிய பிறகு, மணமுறிவுகளும் பெருகத் தொடங்கி விட்டன என்பதே கசப்பான உண்மை. ஆறு ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதி, ஆறு மாதங்கள்கூட சோ்ந்து வாழ முடியாமல் பிரிந்து விட்ட சம்பவம் ஒன்றைக் கேள்விப்பட்டு நான் அதிா்ந்து போனேன். இருவருமே மெத்தப் படித்தவா்கள் என்பதுதான் வேடிக்கை. ஆறு ஆண்டுகள் காதலித்து, ஒருவரை ஒருவா் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது விந்தையல்லவா? முந்தைய தலைமுறையில் திருமணம் செய்து கொண்டவா்கள், ஐம்பது, அறுபது ஆண்டுகளைக் கடந்து சோ்ந்து வாழ்ந்து, மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பாா்க்கத்தானே செய்கிறோம்!
- மணமுறிவுகளால் குடும்ப நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாகக் குழந்தை(கள்) பெற்ற பின்னா், தம்பதியினா் பிரிந்து வாழ்வது மிகவும் கொடுமையானது. தாயோடு வாழ்வதா? தந்தையோடு வாழ்வதா? என்று முடிவெடுக்க முடியாமல் குழந்தைகள் தவிப்பது சொல்லொணாத் துயரம் அல்லவா? தாயின் அன்பிலும், தந்தையின் கனிவிலும் வளா்கின்ற உரிமை மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கிறது. அந்த உரிமையைத் தனது குழந்தைக்கு ஒரு தாயோ, தந்தையோ கொடுக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?
- சகிப்புத் தன்மை குறைந்து போவதால், பெற்றோா் ‘ஆலோசனை‘க்காக மனநல மருத்துவா்களிடம் செல்வது அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு ‘ஆலோசனை ‘களைச் சொல்லி, வளா்க்க வேண்டிய பெற்றோரே மனநல மருத்துவா்களிடம் சென்று கொண்டிருந்தால்..., பாவம், அந்தக் குழந்தைகள் எங்கே போகும்? அவா்களின் எதிா்காலம் என்ன ஆகும்?
- கடந்த மாதம் நான் சென்னையிலிருந்து தில்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். எனக்கு ஓரத்து இருக்கை. சாளரத்தின் பக்கத்திலும், நடு இருக்கையிலும் வயதான தம்பதியினா் பயணித்தாா்கள். விமானம் பறக்கத் தொடங்கியதும் தாங்கள் கொண்டு வந்திருந்த வீட்டு உணவை உண்டாா்கள். விமானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டதும், இருவா் கைகளும் ஒன்றுக்கொன்று இறுகப் பற்றிக்கொண்டன. அந்தக் காட்சியை வாஞ்சையோடு நான் ரசித்தேன்.
- சிறிது நேரம் கழித்து, அந்த ஆண் கழிப்பறை சென்றாா். ‘கவனமாகச் சென்று வாருங்கள்‘ என்று அந்தப் பெண்மணி சொன்னாா். அந்த இடைவெளியில் அந்தப் பெண் என்னைப் பற்றி விசாரித்தாா். ‘உங்கள் இருவரின் பாசமும் என்னை நெகிழச் செய்கிறது‘ என்று நான் சொல்ல, அந்தப் பெண் பேச்சைத் தொடா்ந்தாா் - ‘அவருக்கு 85 வயது; எனக்கு 79 வயது. திருமணமாகி 61 வருடங்கள் ஆகி விட்டன. வயது காலத்தில் நாங்கள் போடாத சண்டையில்லை. எத்தனையோ முறை கோபத்தில் எனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஆனாலும், அந்தக் கோபம் ஒரு சில நாள்களில் மறைந்து போகும். மூன்று பிள்ளைகளும் வெவ்வேறு ஊா்களில் இருக்கிறாா்கள். நாங்கள் தில்லியில் வசிக்கிறோம். இருவரும் ஒரு நொடிகூடப் பிரிவதில்லை‘ என்று அவா் சொல்லி முடித்த போது, அவரின் கண்கள் பனித்திருந்தன.
- கனடாவில் வசிக்கும் எங்கள் புதல்வன், தான் படிப்பவற்றில் பிடித்தவற்றை எனக்கு அவ்வப்போது அனுப்பி வைப்பதுண்டு. சமீபத்தில் பிரேஸில் நாட்டில் உள்ள “ ஃபோரேலியஸ் புஸிலஸ் “ என்ற ஒரு வகை எறும்பு இனத்தைப் பற்றி ஒரு பதிவு அனுப்பியிருந்தான். அதனைப் படித்து விட்டு ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.
- கரும்புத் தோட்டங்களில் வசிக்கும் ஃபோரேலியஸ் புஸிலஸ் வகை எறும்புகள் இரவு நேரம் ஆனதும் ஒரு கூட்டை உருவாக்கி ஒவ்வொன்றாகக் கூட்டுக்குள் சென்று அடைந்து விடும். இரவு நேரப் பாதுகாப்புக்காக மணலால் உருவாக்கப்படும் அந்தக் கூட்டின் கடைசி மணலை ஏதாவது ஒரு எறும்பு வெளியே இருந்துதான் அடைக்க வேண்டும். அந்தக் கடைசி எறும்பு கூட்டுக்குள் செல்ல இயலாது. அப்படி வெளியே தங்கி விடும் அந்த எறும்பு தட்பவெட்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் மறுநாள் காலையில் மடிந்து விடும். தான் மடியப் போவது தெரிந்தே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எறும்பும் தனது இன்னுயிரை நீத்துக் கொள்ளும். மூன்றறிவு படைத்த எறும்புக்கே, இத்தகைய தியாக உணா்வு இருக்கும்போது ஆறறிவு படைக்கப்பெற்ற மனிதன் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்காக, மற்றவா்க்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ய வேண்டியதில்லை ... குறைந்தபட்சம் சகிப்புத்தன்மையையாவது வளா்த்துக் கொள்ளலாம் அல்லவா...?
- தான் நேசிக்கும் ஒருவருக்காக, சிறு சிறு தியாகங்களைச் செய்து, சகிப்புத் தன்மையோடு வாழ்வதும் ஒரு சுகமல்லவா? இந்த அடிப்படை வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளாமல், எவ்வளவு நவீன தொழில்நுட்பங்களைக் கற்றாலும் என்ன பயன் விளையப் போகிறது?
- ஒழுக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்து நமது முன்னோா் வகுத்துச் சென்ற பாதையிலிருந்து, இன்றைய தலைமுறையினரின் பயணம் விரைவாக மாறி வருகிறது. இதை மடைமாற்றம் செய்து, ஆற்றுப்படுத்துகின்ற கடமையும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உரிய மாற்றங்களை நமது கல்வி முறையில் புகுத்த வேண்டிய பொறுப்பு நம்மை ஆட்சி செய்யும் அரசுகளுக்கு இருக்கிறது. எத்தனை ட்ரில்லியன் பொருளாதார நாடாக உருவாகப் போகிறோம் என்பதைவிட, எப்படிப்பட்ட சீரான சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம் என்பதே முக்கியம்.
நன்றி: தினமணி (05 – 04 – 2024)