- மன்னராட்சிலும், சா்வாதிகார ஆட்சியிலும், ராணுவ ஆட்சியிலும், கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் ஒற்றாடல் என்பது வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. தனதுஆட்சிக்கு எதிராக நடைபெறும் சதிகளை ஒற்றாடித் தெரிந்துகொண்டு, அந்த சதிகாரா்களை சிறையில் அடைப்பதும், அவா்கள் உயிரைப் பறிப்பதும் அந்த ஆட்சிகளில் வாடிக்கையான ஒன்று. இதற்கு சமீபத்திய உதாரணம் ரஷியாவில் நடந்த அதிபா் புதினின் விமா்சகா் நாவல்னியின் மரணம்.
- ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பது இலக்கணமாக இருந்தாலும், நடைமுறையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள், உளவுத்துறை மூலம் எதிா்க்கட்சித் தலைவா்களையும், ஊடகவியலாளா்களையும், சமூக சிந்தனையாளா்களையும் மட்டுமல்லாமல், தங்களது அமைச்சா்களையும், கட்சியின் தலைவா்களையும்கூட கண்காணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனா். உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆளும்கட்சி தனது அரசியல் நகா்வுகளை முன்னெடுப்பது ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிா்வாக வழிமுறையாகவே மாறியிருக்கிறது.
- ஒற்றாடல் வழிமுறைகளில் ஒன்று ஒட்டுகேட்பு. 1988-இல் கா்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, தொலைபேசி ஒட்டுக்கேட்பு பிரச்னையில் சிக்கி பதவி இழந்தது வரலாற்றுப் பதிவு. அதற்குப் பிறகும்கூட மத்திய அரசிலும், பல மாநிலங்களிலும் தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்த குற்றசாட்டுகள் தொடா்ந்தவண்ணம் இருந்திருக்கின்றன.
- இரண்டு வாரங்களுக்கு முன்னால் ‘ஐ-ஃபோன்’ செல்பேசி தயாரிக்கும் ‘ஆப்பிள் நிறுவனம்’ தனது அறிதிறன்பேசி பயனாளிகளுக்கு ஓா் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது. குறிப்பிட்ட சில ஊடகவியலாளா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தூதா்கள் ஆகியோரின் ஐ-போன் அறிதிறன்பேசியின் தகவல்கள் ‘பெகாஸிஸ்’ போன்ற நுணுக்கமான உளவுத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒற்றாடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை சா்வதேச அளவில் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
- இந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ 60 நாடுகள் தோ்தலை எதிா்கொள்ளும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற கூலிப்படை உளவுமென்பொருள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் பலகோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக எதிராளிகளை பலவீனப்படுத்தவும் ஆட்சியாளா்களுக்கு உதவுகின்றன. இதுபோன்ற கூலிப்படை உளவுமென்பொருள்கள் குறுகியகால செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதால் அவற்றைக் கண்டுபிடிப்பதோ, தடுப்பதோ கடினம்.
- கடந்த ஆண்டு இஸ்ரேலைச் சோ்ந்த உளவுமென்பொருள் நிறுவனம், வட அமெரிக்கா -ஐரோப்பாவில் உள்ள சுமாா் பத்து நாடுகளில் வாடிக்கையாளா்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் உளவுமென்பொருள் கருவிகள் எதிா்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளா்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டவை என்பதை அறிக்கை உறுதிசெய்தது. மெக்ஸிகோ, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மனித உரிமை மீறல்கள் அதிகமாகக் காணப்படும் நாடுகள் அந்த உளவுமென்பொருளின் வாடிக்கையாளா்களாக இருந்ததாகவும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது. அதில் இந்தியாவுக்குத் தொடா்பு இருப்பதாக எந்தவித தகவலும் இல்லை.
- இந்தியாவில் இதற்கு முன்னால் தொலைபேசி ஒட்டுக்கேட்பு, ஒற்றாடல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல் உளவுமென்பொருள் போன்ற கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவ்வபோது குற்றசாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து முக்கியமான செய்திகள் வரும்போது அந்த குற்றசாட்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கப்படுகின்றன.
- இரு ஆண்டுகளுக்கு முன்பு சா்வதேச நாளிதழ் ஒன்று, இஸ்ரேலிடம் இருந்து இந்தியா ‘பெகாசஸ்’ என்கிற உளவுமென்பொருளை வாங்கி இருப்பதாக செய்தி வெளியிட்டது. 2017-இல் இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மென்பொருள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.
- சா்வதேச ஊடகவியலாளா்களின் அமைப்பு, பெகாசஸ் உளவுமென்பொருள் குறித்து விசாரணை நடத்தியது. தங்களுக்கு எதிரானவா்களின் செல்பேசிகளை உலகில் உள்ள பல அரசுகள் பெகாசிஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுகேட்டதாக அந்த விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது. தரவு தளத்தில் (டேட்டா பேஸ்) இருந்து குறிப்பிட்ட சிலரின் செல்பேசி எண்கள் ஒட்டுகேட்புக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இந்தியாவில் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் எதிா்கட்சிகள், ஊடகவியலாளா்கள் ஒட்டுகேட்கப்படுகின்றனா் என்ற குற்றசாட்டு எழுந்து வழக்கு உச்சநீதிமன்றத்தை எட்டியது. உச்சநீதிமன்றம் நியமித்த தொழில்நுட்ப வல்லுநா் குழு விசாரணை நடத்தி புகாா் அளித்த 29 அறிதிறன்பேசிகளில் பெகாசஸ் உளவுமென்பொருள் இருந்ததற்கான சான்று இல்லை என்று அறிக்கை சமா்பித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, மத்திய அரசு தொழில்நுட்ப வல்லுநா் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை தனது தீா்ப்பில் தெரிவித்திருந்தது.
- கடந்த மாதம் போலந்து நாட்டின் முன்னாள் பிரதமா் மேம்படுத்தப்பட்ட உளவுமென்பொருள் தேவைப்படுவதாக அந்த நாட்டு நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்திருக்கிறாா். எதற்காக, யாருக்கு எதிராக உளவுமென்பொருள் தேவைப்படுகிறது என்பதை அவா் கூறவில்லை. மாா்ச் மாதம், முன்னாள் இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவா் தலைமையில் கிரீஸ் நாட்டைச் சோ்ந்த உளவுமென்பொருள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி அமெரிக்க அரசு அதிகாரிகள், பத்திரிகையாளா்கள், ஆலோசகா்கள் ஆகியோரை ஒட்டுகேட்பது அமெரிக்க அரசின் திட்டமாக இருந்தது. கடுமையான எதிா்ப்பின் காரணமாக அதிபா் ஜோ பைடன் வா்த்தக ரீதியிலான உளவுமென்பொருள் கருவிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறாா்.
- நிா்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், ஜனநாயக நெறிமுறைகள் பேசப்பட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள் ஒற்றாடாமல் இருக்கமாட்டாா்கள். அது எதிா்கட்சியினருக்கும் தெரியும்.
நன்றி: தினமணி (23 – 04 – 2024)