TNPSC Thervupettagam

பாரதத்தின் அடுத்த பாய்ச்சல்

September 20 , 2023 476 days 322 0
  • தலைநகா் தில்லியில் ஜி20 கூட்டமைப்பின் பதினெட்டாவது உச்சி மாநாடு கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. நம் நாட்டிடமிருந்த தலைமைப் பொறுப்பு பிரேஸில் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
  • பிரம்மாண்டமான பாரத மண்டபம், கூட்டம் நடைபெற்ற அரங்கம், அரங்கில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரதம்’ என்று தேசம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது, கோனார்க் சூரியக் கோவில் வடிவம் பின்புலத்தில் அமைந்திருக்க உலகத் தலைவா்களைப் பிரதமா் வரவேற்ற பாங்கு, குடியரசுத் தலைவா் அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த விருந்தினா்களுக்கு நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பு அம்சங்களை பிரதமா் எடுத்துச் சொல்லி மகிழ்ந்த விதம் எனப் பல செய்திகள் ஊடக கவனம் ஈா்த்தன.
  • ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வரவில்லை. உள்நாட்டு பிரச்னைகள் மற்றும் இந்தியாவுடனான எல்லை பிரச்னை என சிக்கலில் இருக்கும் சீன அதிபரும் இந்த உச்சி மாநாட்டுக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சீன பிரதமா் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபா் தொடங்கி, நாடுகளின் தலைவா்கள், உலக வங்கித் தலைவா் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
  • ஜி20 நாடுகளில் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வெளிப்படையாகவே பாரதத்தின் முயற்சியை, செயல்பாட்டைப் பாராட்டியுள்ளன. ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ், ‘தெற்கு உலகின் குரலை பிரதிபலிக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்திருக்கிறது. வளா்ச்சியை மையப்படுத்தி செயல்திட்டத்தை வைக்கவும் செயல் பட்டுள்ளது’ என்று பாராட்டியுள்ளார்.
  • மாநாட்டுக் கூட்டத்தில் பிரதமா் ஆற்றிய உரைகள் பல உலக அரசியல் நகா்வுகளுக்கு அடித்தளமிட்டன என்று சொல்லலாம். கூட்டமைப்பு நாடுகளால் ஒருமனதாக வெளியிடப்பட்ட தில்லி பிரகடனம் இந்த முயற்சியில் பாரதத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. இந்தியாவின் முயற்சியால் 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 கூட்டமைப்பில் இணைந்துள்ளது.
  • இரண்டு நாள் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு தவிர துணை நிகழ்வாக பிரதமா் பதினைந்து நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்புப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். உலகின் வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்கா முதல் சின்னஞ்சிறு தீவு நாடான கொமொரோஸ் வரை பாரபட்சம் இன்றி இருதரப்புக்கும் நன்மை தரக்கூடிய விஷயங்களை முன்னிறுத்தி பேச்சுகள் நடைபெற்றுள்ளன.
  • இந்த முயற்சிகளால் நம்முடைய தேசத்தின் மேன்மை என்னென்ன வழிகளில் சாத்தியமாகும்? குறிப்பாக, மூன்று நல்ல செய்திகள் உலக அரங்கில் பாரதத்தின் நிலையை உயா்த்துவதாக அமைந்துள்ளன.
  • முதலில், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இணைப்பு பொருளாதார வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஜி20 உச்சி மாநாட்டின் குறிப்பிடத்தக்க நற்செய்தியாகும். பிரதமா் நரேந்திர மோடி, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கான திட்டங்களை வெளியிட்டார். இது உலகளாவிய வா்த்தகம் மற்றும் இணைப்பை புதிய மார்க்கத்தில் அமைத்துக்கொள்ளும் அற்புதமான முயற்சியாகும்.
  • இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், இத்தாலி, ஜொ்மனி மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இந்த வழித்தடம் கடந்தகாலப் பழம்பெரும் பட்டு மற்றும் வாசனை திரவிய வழித்தடங்களை விஞ்சும் வகையில் வரலாற்று முயற்சியாக அமையும்.
  • பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சா் குறிப்பிடும்பொழுது ‘வரலாற்றில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டுடன் உலக நாடுகளுக்கு இருந்து வந்த வா்த்தக வழித்தடம் மீண்டும் அமைகிறது’ என்று குறிப்பிட்டார்.
  • இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் ஆற்றல் தொடா்பான பொருட்களின் பரிமாற்றத்தை எளிதாக்க உதவும். அதோடு இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் நாடுகளின் வா்த்தகத்தை மேம்படுத்தும். பாரம்பரியமான பாதை என்பதைத் தாண்டி நீா்வழி, சாலை மார்க்கம், ரயில் பாதை என விரிவான இணைப்பை ஏற்படுத்த வகை செய்கிறது.
  • மின் கேபிள், ஹைட்ரஜன் பைப்லைன், அதிவேக டேட்டா கேபிள் ஆகியவையும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்படுகின்றன. மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு மின்சார கேபிள் அமைக்கப்படும். ஹைட்ரஜன் பைப்லைன், தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும். அதிவேக டேட்டா கேபிள், தடையற்ற டிஜிட்டல் இணைப்பு, புதுமை மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும்.
  • இந்த வழித்தடத்தில் பங்கு பெறும் நாடுகள் இதனால் செழிப்படையும். ஆற்றல் வளங்கள், எண்ம (டிஜிட்டல்) தகவல்தொடா்புகளை எளிதாக்க முடியும். இதனால் வளா்ச்சி துரிதப்படும். வளரும் நாடுகள் அல்லது ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள் பொருளாதார வளா்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெறுவதால் தடையற்ற வா்த்தகம் அனைவருக்கும் சாத்தியமாகும். இதனால் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் மறைந்து பிராந்திய ஸ்திரத்தன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளோடு இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • புதிய சந்தைகள் மற்றும் வா்த்தக வழிகளைத் திறந்து, இந்தியாவின் வா்த்தக வாய்ப்புகளை உயா்த்தும். விநியோகச் சங்கிலி சிக்கல்களைத் தீா்க்கும். புவிசார் அரசியலில் பாரதத்தின் பங்கை வலுப்படுத்தும். பொருள்களை எடுத்துச் செல்லும் தூரம் பெருமளவு குறைவதால் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கும். சுற்றுச்சுழலுக்கும் உகந்ததாக அமையும். உலகளாவிய சந்தையைத் திறந்து விடுவதற்கான வாய்ப்பாக அமையும்.
  • இதனால் ஏற்றுமதி சுலபமாகும். அதற்கான உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். அதாவது பாரதத்தின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு இது வலுசோ்க்கும் என்பதால் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் நமக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
  • இதுகுறித்து ரஷிய அதிபா் புதின், ‘இந்த வழித்தடத்தால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. உண்மையில் இது பயனளிக்கக் கூடியதாக இருக்கும்’என்று கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை, ‘இந்தியா வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியது’ என்று பாராட்டியதோடு ‘இந்தப் பொருளாதார வழித்தடம் மேற்குலக நாடுகளுக்கும் தெற்குலக நாடுகளுக்கும் இடையில் தொடா்பை வலுப்படுத்த உதவும்’ என்றும் பதிவு செய்துள்ளது.
  • ஜி20 மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தை சீனாவும் வரவேற்றுள்ளது. உக்ரைன் - ரஷியா போர் விவகாரத்தில் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் கூட்டு பிரகடனம் வெளியிடப்படுவதில் சிக்கல் நிலவியது.
  • எனினும், இந்தியா மற்ற உறுப்பு நாடுகளுடன் பேசி அவா்களின் ஒப்புதலோடு பிரகடனத்தைக் கொண்டு வந்தது. இதனைக் குறிப்பிட்டு சீன வெளியுறவு அமைச்சகம், ‘சா்வதேச சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை ஜி20 தில்லி பிரகடனம் வழங்குகிறது’ என்று பாராட்டியுள்ளது.
  • இரண்டாவது நல்ல செய்தி, பொருளாதார வழித்தடம் குறித்த அறிவிப்பு விடியோவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்துள்ளனா். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமா் சைஃப் பின் சையத் இதுகுறித்த மாதிரி புகைப்படத்துடன் கூடிய விடியோவை ட்விட்டா் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளா்ச்சியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இத்தகைய அங்கீகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் ராஜதந்திர முயற்சியின் வெற்றியாக இதனைச் சொல்லலாம்.
  • முன்னாள் ராணுவத் தலைமை தளபதியான மத்திய இணையமைச்சா் வி.கே. சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் தானாகவே இந்தியாவுடன் இணைந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
  • மூன்றாவதாக, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் பெரிதாகவும் தெற்குலக நாடுகளின் மீதான கவனம் குறைவாகவும் இருந்த நிலையை மாற்ற பாரதம் எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி கண்டுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியத்தைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்ட முயற்சியே இதற்கு சான்று.
  • ரஷியா 2019-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுடன் மாநாடு நடத்தியது. அமெரிக்காவும் 2020-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுடன் மாநாட்டை நடத்திப் பார்த்தது. சீனா தனக்கே உரிய முறையில் கடன் கொடுத்து அவற்றை வசப்படுத்த முயன்றது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பை இந்தியா உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுடனும் தனித்தனியே எடுத்துரைத்து ஏற்றுக்கொள்ளும் படியாகச் செய்துள்ள முயற்சி வெற்றி கண்டுள்ளது.
  • ஆப்பிரிக்க நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வளங்கள் அதிகமாக இருந்த போதிலும் வறுமை காணப்படுகிறது. உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் 60%, குறைந்த கார்பன் தொழில் நுட்பங்களுக்குத் தேவையான 30% தாதுக்கள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. மின்சார வாகனங்கள் உற்பத்திக்குத் தேவையான கோபால்ட் முதலான தாதுக்கள் ஆப்பிரிக்காவில் காணப்படுவதால் உலக நாடுகள் அவற்றுடன் வா்த்தக உறவை வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது இந்தியாவின் வாதம்.
  • வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா், ‘வளா்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எவரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் பிரதமா் நரேந்திர மோடி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது, சமூகநீதிக்கான உலகளாவிய பார்வையாக இதனைப் பார்க்கலாம்’ என்றார்.
  • அத்துடன் தெற்குலகின் குரல் வலுப்பெற வேண்டுமானால் இந்த இணைப்பு அவசியம் என்பதை எடுத்துரைத்து அதனை ஏற்றுகொள்ளச் செய்வதற்கான திறன் நமது தேசத்திற்கு இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் கூறினார்.
  • வசுதைவ குடும்பகம் என்ற கருப்பொருளை முன்வைத்தது மட்டுமல்லாது அதற்கான செயல்பாட்டிலும் தெளிவாக ஈடுபட்டு பாரதம் வென்றுள்ளது. இது நம் தேசத்தின் மீதான மதிப்பை உலக நாடுகளிடையே உயா்த்தியுள்ளது. இந்த நன்மதிப்பு நமது சொல்லுக்கான மரியாதையாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

நன்றி: தினமணி (20 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories