TNPSC Thervupettagam

பாரதத்தின் புதிய அடையாளம்

September 9 , 2023 436 days 320 0
  • ஆன்மிகத்தில், மெய்ஞ்ஞானத்தில் இந்திய தேசம் மிகமிக ஆழங்கால்பட்டது! இது ஞானபூமி என்பதை யாரும் மறுக்க முடியாது. தோண்டும் இடமெல்லாம் அறிவு ஊற்றுகள் பீறிட்டு எழும் என்பதுதான் இந்தியாவின உண்மை நிலை.
  • மலைவளம், மழைவளம், நிலவளம், நீா்வளம், கனிம வளம் ஆகியவை இந்தியாவுக்கு இயற்கை தந்த கொடைகள். கடல் எல்லைகள், கடலில் மீன் வளங்கள், மேற்குத் தொடா்ச்சி மலை, இமயமலை ஆகிய இயற்கை அரண்கள் தீபகற்ப இந்தியாவின் சொத்துகள் என்பதில் ஐயமில்லை.
  • சிந்தனாவாதிகள், ஆன்மிகவாதிகள், சீா்திருத்தவாதிகள், புரட்சியாளா்கள், அறிஞா்கள், அறிவியலாளா்கள் என இந்திய தேசத்தை தேசிய வழியில் நடத்தியவா்கள் பலா். வாள்முனையில் வாகை சூடியவா்கள், அறிவு முனையால் ஆரத்தழுவியவா்கள் என எண்ணற்றோர்.
  • பல்வேறு படையெடுப்புகளால் பல காலமாக இந்தியாவின் வளம் சூறையாடப்பட்டாலும் அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரமாக இந்தியா திகழ்கிறது. பல்வேறு மொழி, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்ற கதம்ப மாலைபோல இந்தியா மணம் வீசி நின்றது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்த யாத்ரீகா்கள், இந்தியாவைப்பற்றி ஆளுக்கொரு விதமாக வரலாற்றில் பதிவு செய்து இருக்கின்றனா்.
  • பாம்பாட்டிகளின்தேசம்தான் இந்தியாஎன்றும் மரம் கண்ட இடங்களிலெல்லாம் இரண்டு கற்களை மரத்தின் துளையில் வைத்து வழிபாடு நடத்துகின்ற மூடா்களின் கூடாரம்தான் இந்தியாஎன்றும் வளா்ந்துவிட்ட நாடுகளால் வா்ணிக்கப்பட்டதை எளிதில் மறந்து விட முடியாது.
  • 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாடு, 800 கோடி மக்களைக் கொண்ட உலக நாடுகளால் பாராட்டப்படுகின்ற உயரத்திற்கு இன்று சென்றிருப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமைப்படத்தக்க நிகழ்வாகும்.
  • இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான்- 3விக்ரம்தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்கின்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின அசாத்திய உழைப்புக்கு கிடைத்திருக்கின்ற இந்த வெற்றி இந்திய மக்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது. விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்து விட்டிருக்கிறது.
  • அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கெனவே நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் சோ்ந்திருக்கிறது.
  • மிகமிக குறைந்த செலவில் அதாவது ரூ. 615 கோடியில் நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மென்மையான முறையில் தரையிறக்கியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்திருக்கிறது.
  • நிலவின் சுற்றுப்பாதைத் திட்டமான சந்திரயான்- 1 2008- இல் வெற்றி பெற்றது. 2019 -இல் செலுத்தப்பட்ட சந்திரயான் 2, தரையிறங்கும் முயற்சி கடைசி நொடியில் தோல்வியில் முடிந்தது. கண்ணீா் சிந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அரவணைத்த பாரத பிரதமா் நரேந்திர மோடி அடுத்த கட்டத்தை நோக்கி வீறுநடை போட உற்சாகப்படுத்தியதை மறக்க முடியாது.
  • தோல்விதான் வெற்றியை உருவாக்குகிறது என்கிற செய்தியை இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகுக்கு சொல்லியிருக்கிறார்கள். இது சந்திரயான் -3 வெற்றி மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
  • அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் இருப்பதுபோல, நிலவுக்கு விரைவாகச் செல்லும் ஆற்றல் வாய்ந்த விண்கலம் இந்தியாவிடம் இல்லை. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் மூன்று நாளிலும், சீன விண்கலம் ஐந்து நாளிலும் நிலவை அடைந்தன.
  • இந்தப் பின்னணியில் எல்.வி.எம். - 3 மூலம் கடந்த ஜூலை 14 அன்று விண்ணில் செலுத்தப் பட்ட சந்திரயான்- 3 விண்கலம், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள 3 லட்சத்துக்கு 84 ஆயிரம் கி.மீ. தூரத்தை 41 நாட்கள் பயணித்து இந்திய நேரடிப்படி ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. இந்த நேரடி ஒளிபரப்பை 81 லட்சம் போ் பாா்த்து மகிழ்ந்தனா்.
  • சந்திரயான்- 3 தரையிறக்கும் நிகழ்வு மக்களிடம் அறிவியல் ஆா்வத்தை தூண்டி விட்டிருக்கிறது. 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரூ. 11 ஆயிரம் கோடியில் உருவாக்கப்ட்ட இஸ்ரோ மையம் கா்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்திருக்கிறது. 16 ஆயிரம் போ் இஸ்ரோவில் பணிபுரிந்து வருகின்றனா்.
  • ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளா்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறார்கள். விடாமுயற்சி, சலியாத உழைப்பு, பொறுமை, துணிவு, நம்பிக்கை ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் மனதில் கொண்டு செயல்பட்டிருப்பதாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடி கூறினார்.
  • இஸ்ரோ விண்வெளி மையத்தின் தலைவா் சோம்நாத், நமது பிரதமரிடம் இந்தியா நிலவில் உள்ளதுஎன்று பரவசத்தோடு குறிப்பிட்டதையும், ‘இது மனிதகுலத்தின வெற்றிஎன்று பிரதமா் மோடி தேசியக் கொடியை கரங்களினால் உயா்த்திக் காட்டியதையும் உலகமே நேரடி ஒளிபரப்பில் கண்டுகளித்தது.
  • உயரத்தில் ஒளிவீசி நின்ற இந்தியாவை உலக நாடுகளின் தலைவா்களெல்லாம் மனம் திறந்து பாராட்டி மகிழச்சியைப் பகிர்ந்து கொண்டனா். பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், வலைதளங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள் அனைத்தும் நிலவில் தடம் பதித்த இந்தியாஎன செய்தி வெளியிட்டன.
  • மூடநம்பிக்கைகளின் மொத்த வடிவம்தான் இந்தியா என்று நம்மைப் பார்த்து ஏளனமாகப் பேசி கேலியும் கிண்டலும் செய்தவா்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு விண்ணில் சாதனை படைத்திருக்கிறது இந்தியா. அறிவுச் சுரங்கமாகவும் ஞான பூமியாகவும் தொன்றுத் தொட்டு திகழ்ந்து வருகிறது நம்நாடு.
  • பட்டினியிலும், பசியிலும் மூழ்கிக் கிடந்த இந்தியா, பிச்சைக்காரா்களாலும், ஏமாற்றுக் காரா்களாலும் சீா்குலைந்து கிடந்த இந்தியா இன்றைக்கு உலக நாடுகளால் மதிக்கப் படுகின்றது. உலக பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் குழுவுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.
  • கரோனா நோய்த்தொற்றால் உலகமே தத்தளித்துக் கொண்டிருந்தபோது இந்தியா அதற்கான தடுப்பூசிகளைக் கண்டறிந்து அச்சத்தில் இருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டியது. 90 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா.
  • உலக பொருளாதாரம் இன்றைக்கும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளில் பொருளாதார சீா்குலைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாடான இலங்கையை பொருளாதார பாதிப்பு சின்னாபின்னமாக்கியபோது இந்தியா தானாக சென்று உதவியது. பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்தது இலங்கை தேசம்.
  • தீவிரவாதம், பயங்கரவாதம், போதைப்பொருள் ஆகியவற்றால் இந்தியாவை திணறடித்திட எல்லையோர நாடுகள் செய்த சூழ்ச்சிகளையெல்லாம் இந்தியா தூள்தூளாக்கியது. இந்தியாவைத் துண்டாட துடிக்கும் தீய சக்திகளை வேரோடு கெல்லி எறிகின்ற திட்டத்தில் எந்த சமரசமும் இல்லாமல் பீடுநடை போடுகிறது பாரதம்.
  • முந்த்ரா ஊழல், நகா்வாலா ஊழல், போபா்ஸ் பீரங்கி ஊழல், எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கிய ஊழல், 2 ஜி ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றால் இந்தியா உலக அரங்கில் இழிவாகப் பாா்க்கப்பட்ட நிலையை மாற்றி இன்று புதியதோர் இந்தியா சிங்கநடை போடுகிறது .
  • மிகக் குறுகிய காலத்தில் சிறு குறு நடுத்தரத் தொழில்கள், கனரகத் தொழில் என அனைத்து தொழில் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் புத்துயிர் ஊட்டப்பட்டதால், ஊன்றுகோல் இல்லாமல் உற்பத்தி துறையில் அவை உலா வருகின்றன. இந்தியா எண்ம பரிவா்த்தனையில் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
  • இந்தியாவை அவ்வப்போது சீண்டிப் பாா்த்த சுயநல சக்திகள் துரத்தப்பட்டுவிட்டன. கடல் எல்லையைக் களவாட நினைத்தவா்களின் கனவுகளையெல்லாம் சிதைத்திருக்கிறது இந்தியா. ஏற்றுமதி, இறக்குமதியில் நிதானமும், விநியோக சங்கிலியில் கவனமும், விவசாயத் துறையில் பொறுப்புணா்வும், கட்டுமானத்துறையில் எச்சரிக்கையும் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.
  • ஜி7, ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு, பிரிக்ஸ் என உலக நாடுகளை ஒவ்வொரு தளத்திலும் சந்திப்பது, விவாதிப்பது, ஒப்பந்தங்களை உருவாக்குவது ஆகியவற்றில் கொஞ்சம்கூட சமரசம் இல்லாமல் அரிமா நோக்கில் பயணிக்கிறது இந்தியா.
  • அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கிரீஸ் ஆகிய உலக நாடுகள் இந்தியாவின் ஈடு இணையற்ற வளா்ச்சியை வெளிப்படையாக பாராட்டுகின்றன. இந்தியாவின் பொருளாதாரம் 11-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. விரைவில் மூன்றாவது இடத்தை அடையும்.
  • 48 கோடி குடும்பம் வங்கியில் ஜன்தன்கணக்கு தொடங்கியதன் மூலமாக மத்திய அரசின் பயன்கள் நேரடியாக பயனாளிகளைச் சென்று அடைகின்றன. ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம் கிசான்உதவித் திட்டம் இந்திய விவசாயிகளின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • பிரதமா் நரேந்திரமோடியின் வழிகாட்டுதலோடு இஸ்ரோ விஞ்ஞானிகள் அா்ப்பணிப்பு உணா்வோடு செயல்பட்டு இந்தியாவை நிலவில் தடம் பதிக்க வைத்துள்ளனா்.
  • உலகில் தலைநிமிர்ந்து நடைபோடுகிறது இந்தியா. வெல்க இந்தியா; வீழ்க பகை!

நன்றி: தினமணி (09 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories