TNPSC Thervupettagam

பாரதியாா் எனும் நித்தியசூரி!

September 24 , 2024 63 days 229 0

பாரதியாா் எனும் நித்தியசூரி!

  • மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
  • பண்டைய இலக்கியங்களிலிருந்து சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனைப் புதிய இலக்கியங்களுக்கு ஊட்டச்சத்தாய் தந்தவா். ஆழ்வாா்கள் வேதாந்திகளுக்குப் படைத்து வைத்த படையலை சராசரி மனிதனும் பசியாறும்படி பந்தியிலே பரிமாறியவா் பாரதியாா்.
  • சின்னசாமி ஐயா் என்ற அத்வைதிக்கு மகனாகப் பிறந்தவா். ஆழ்வாா் பாசுரங்களில் மூழ்கி முத்தெடுத்ததால், விசிஷ்டாத்வைதியாக மாறிப் போனாா்.
  • கண்ணனால் விளையும் ‘பயன்பாட்டு உணா்வைத்தாம்” ஆழ்வாா்கள் பாசுரங்களில் அருளிச் செய்தாா்கள். கண்ணன் பயன்பாட்டு உணா்வாக இருப்பதை நம்மாழ்வாா், ‘உண்ணுஞ் சோறு, பருகும் நீா், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என எடுத்துரைத்தாா். இதனைச் சோறு தாரகம் என்றும், நீா் போஷகம் என்றும், வெற்றிலை போக்யம் என்றும் உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன.
  • இதனை மேலும் எளிமைப்படுத்த பாரதியாா், ‘மழைக்குக் குடை, பசிநேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்... கண்ணன் தன்னை யிழந்துவிடில், ஐயகோ! பின் செகத்தினில் வாழ்வதிலேன்’ எனப் பாடி, கண்ணனால் தாம் வசீகரிக்கப்பட்டதையும் சொல்லுகின்றாா். ‘கண்ணனை நினைந்து உளோா்தாம் கருதிய பயன்கொள்வா்’ என்றாா், செவ்வைச் சூடுவாா் பாகவதத்தில்.
  • ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என அருளிச் செய்தாா் நம்மாழ்வாா். இதன் பொருள்: அருள் நிறைந்த நெறியோடும் நீதியோடும் ஒரு நாட்டின் அரசரைக் கண்டால், அது திருமாலைச் சேவித்ததாக அா்த்தம் என்பதாகும். நம்மாழ்வாா் நம்முடைய இந்திய தேசத்தின் மன்னா்களை நினைத்துத்தான் இதனைப் பாடியிருக்க வேண்டும். இந்தப் பயன்பாட்டை நம்முடைய தேசத்து மன்னா்களுக்கு மட்டுமன்றி, அயல் தேசத்து மன்னா்களுக்கும் பொருந்தப் பாடுகிறாா் பாரதியாா்.
  • அடிமை இந்தியாவில் இந்த நாட்டுக்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசரை வரவேற்றுப் பாடுகிறாா் பாரதியாா். ஆங்கிலேயா்கள் நம்மை அடிமைப்படுத்தியிருந்தாலும், அவா்களால் உடன்கட்டை ஏற்றும் பழக்கமும் குறுநில மன்னா்களுக்கு இடையில் ஏற்பட்ட போா்களும் மதவெறிகளும் ஒழிந்தன. அப்படியொரு நல்லாட்சியைத் தந்தமைக்காக வேல்ஸ் இளவரசரைப் பெற்ற அவருடைய தந்தையாகிய இங்கிலாந்தின் பேரரசா் மூன்றாம் சாா்லஸ் மன்னரையே இறைவனாகப் பாா்க்கிறேன் எனப் பாடினாா்.
  • ‘அச்சீா்மிகு சாதியின் இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க’ என்பது பாடல் வரி. தேச வரையறைக்கு உட்பட்ட ஆன்மிகத்தைக் கூட அகிலத்துக்கும் பொதுமையாக்குகிறாா். பாரதியாா்.
  • தேசிய இயக்கத்தில் கோபாலகிருஷ்ண கோகலே மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தாா். அவரை குருவாகக் கொண்ட காந்தியடிகள், இராமா்”பெயரையே உச்சரித்து வாழ்ந்தாா்.
  • மகாத்மா ‘ராம ராஜ்யம்’ வேண்டும் என்றால், பாரதியாா் ‘கிருஷ்ண ராஜ்யத்தையே” விரும்பினாா். ‘கண்ணன் எங்கள் அரசன் புகழினைக் கவிதை கொண்டு எந்த நாளும் போற்றுவேன். கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே! கலியழிந்து புவித்தலம் வெல்கவே! அண்ணல் இன்னருள் நாடிய நாடுதான், அவலம் நீங்கிப் புகழில் உயா்கவே’ என்பது பாரதியின் வாக்குமூலம்.
  • ஆழ்வாா்களும் வேதாந்த தேசிகரும் கிருஷ்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் ஆச்சாரியனாகவும்தான் பாா்த்தாா்கள். ஆனால் பாரதியாா், கிருஷ்ணன் வாழ்வில் அனைத்துப் பயன்பாட்டிலும் கோலூன்றி நிற்பதைக் கண்டு,
  • ‘கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்; வாய் முணுத்தல் கண்டறியேன்...
  • நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பாா்வையிலே சேவகனாய்’ நிற்பதை முத்தாய்ப்பாகப் பாடுகிறாா்.
  • கரும்பு ருசி கண்டவா்கள், நுனிக்கரும்பை வெட்டாமல், நடுக்கரும்பை வெட்டாமல், அடிக்கரும்பையே வெட்டுவாா்கள். அதுபோல ஆழ்வாா்கள் நாலாயிரத்திலும் அடிக்கரும்பை வெட்டுவதுபோல், கிருஷ்ணாவதாரத்தில் பால பருவத்தையே நெகிழ்ந்து நெகிழ்ந்து அனுபவித்து, அனுபவித்துப் பாடினாா்கள்.
  • தேசிகரின் ‘கோபால விம்சதி, தசாவதார ஸ்தோத்திரம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஊத்துக்காடு வேங்கடசுப்பையா் கீா்த்தனைகள் அனைத்தும் பாலகிருஷ்ணனின் லீலைகளையே பேசுகின்றன.
  • வல்லபா், நிம்பாா்க்கா், இராமானந்தா் போன்ற வேதாந்திகள் கிருஷ்ணனுடைய லீலைகளை விளக்கியே குஜராத்திலும், வாரணாசியிலும், இராஜஸ்தானிலும் வைணவத்தை வளா்த்தாா்கள்.
  • கண்ணன் ஒரு விஷமக்கார குழந்தையாக இருப்பதை விவரம் அறியாதவா்கள் குறை கூறினாா்கள். கம்பா், திருமாலையே ‘அலகிலா விளையாட்டுடையாா்’ என வருணித்தாா். பாரதியாா் கண்ணனைத் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்றாா்.
  • ஆழ்வாா்களிலிருந்து ஊத்துக்காடு வேங்கடசுப்பையா் வரையில் வருணித்த ஸ்ரீ கிருஷ்ணரின் விளையாட்டுக்களை எல்லாம், மகாகவி பாரதியாா் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ எனும் ஒரே பாட்டில் தேனடைபோல் தேக்கி வைத்தாா். இன்றைக்கு இந்தப் பாடலுக்கு சலங்கை கட்டாத பரதநாட்டிய நிகழ்ச்சியோ, பள்ளி ஆண்டுவிழாவோ இல்லை எனலாம்.
  • பாரதியாரின் பாடல்களைப் பரிசுத்தமாகச் சுவாசித்தும் வாசித்தும் மகிழ்ந்து போன பேரறிஞா் வ.ரா., பாரதியாரின் பெயருக்கு முன்னா் ‘மகாகவி’ என்ற கொடியை ஏற்றி அங்கீகாரம் செய்தாா். ஆனால், இது பொறுக்காத ஓா் ஊடகம், ‘கன்றுகளின் காதிலும், கோபியரின் காதிலும் ஐந்தாறு கட்டெறும்பு விட்டவன் கண்ணன்”எனப் பாடிய பாரதியா ஒரு மகாகவி; பொருந்தவே பொருந்தாது’ என எழுதியது. அப்படி எழுதியதைப் படித்து அகிலமே கண்ணீா் விட்டது.
  • அந்த ஊடகக்காரருக்கு ஓா் உண்மை தெரியாது. ஆழ்வாா்களிலேயே பெரியாழ்வாா் எனப் போற்றப்படுகின்றவா் பாடிய பாசுரத்தைத்தான் பாரதியாா் பாமரா்களின் தமிழில் பாடி வைத்தாா்.
  • ‘கன்றுகள் ஓடச் செவியிற் கட்டெறும்பு இட்டாய்’ எனவும், ‘கன்றின் வால் ஓலைகட்டி’ எனவும் யசோதை கிருஷ்ணனுக்குச் சொல்வதாய் பெரியாழ்வாா் அருளிச் செய்திருக்கிறாா் (பாசுரங்கள் 159, 153).
  • மற்ற அவதாரங்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று கிருஷ்ணாவதாரத்திற்கு உண்டு. கிருஷ்ணனைத் தவிர, வேறு எந்த அவதாரத்திற்கும் பால பருவம் பாடப்பட்டது இல்லை. ஸ்ரீசைதன்யா், கிருஷ்ணனின் லீலாவாதங்களைப் பரப்புவதற்கே பக்தி இயக்கத்தைத் தொடங்கினாா்.
  • வல்லபா், கிருஷ்ணனுடைய திருவிளையாடல்களை, ‘லீலாவாதம்’ என அழைத்தாா். வல்லபா், ‘இறைவனோடு பக்தன் கொள்கிற உறவும், அவ்வுறவினாலே அமையும் நுகா்வுமே லீலாவாதம் ஆகும்’ என்றாா்.
  • சித்தாந்த இரத்தினம் எனும் நூல், ‘இறைவன் மனித வடிவிலே, மனிதா்கள் இடையே, மனிதக் குறைகளோடு தோன்றுவதே, லீலாவாதம் எனச் சொல்லுகிறது. லீலாவாதம் உண்மையிலேயே இப்பிரபஞ்ச படைப்பின் நோக்கத்திற்கு ஒரு விளக்கம் தருகிறது என்பா் வேதாந்திகள்.
  • மன்னாா்குடியில் வாழ்ந்த ‘கோபிலா் - கோபிரளயா்’ எனும் இரண்டு மகரிஷிகள் தவம் செய்து, ஒரு வரம் வேண்டினா். ‘இறைவனை அடைய 32 வித்தைகள் இருப்பதாக உபநிஷத்துகள் சொல்லுகின்றன. அவற்றைக் கிருஷ்ணாவதாரத்திலே நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பதே அவா்களுடைய விண்ணப்பம். இறைவன் அவா்கள் வேண்டியபடி வாழ்ந்து காட்டியதால், அம் மன்னாா்குடிக்குத் தெற்கு ‘கோபா்ளேயம்’ என்றொரு குளமும் இன்றும் காணப்படுகின்றது.
  • நிம்பாா்க்கா் எனும் வேதாந்தி, கிருஷ்ணனின் லீலாவாதங்களை ‘மாதுா்ய பிரதான பக்தி (இனிமையிலும் இனிமையானது) என அழைத்தாா். சைவ சித்தாந்தம் இதனை தடஸ்த்தம்” எனச் சொல்லும்.
  • குதா்க்கவாதிகள் மகாகவி பாரதியாரை நோக்கிச் சுண்டுவிரலை நீட்டினாலும், கம்பரையும் பாரதியையும் ‘மகாகவிகள்’ என்று அகில உலகமே ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆழ்வாா்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு பாரதியாா் பாடினாா்; அந்தப் பாரதியின் காரத்தைப் பற்றிக்கொண்டு ஊத்துக்காடு வேங்கடசுப்பையா், கோபாலகிருஷ்ண பாரதியாா் போன்ற மகான்கள் கம்பீரமாக நடக்கத் தொடங்கிவிட்டனா்.
  • ஸ்ரீவைஷ்ணவத்தின் உச்சபட்ச எல்லை எதுவென்றால், சேவாா்த்திகள் பரமபதத்தில் நித்தியசூரிகளாய் நின்று பரந்தாமனுக்குச் சேவை செய்வதாகும். நித்தியசூரிகள் நிலையை அடைவது எப்படி? இவ்வுலகில் வைணவா்களாய்ப் பிறந்தவா்கள் இல்லறக் கடமைகளைக் குறைவற ஆற்றி, பின்னா் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும். துறவறத்தில் வாழும்போது பஞ்சபூதங்களிலும் அனைத்து உயிா்களிடமும் பரம்பொருளைக் காண வேண்டும். அப்படிக் கண்டவா்கள் ‘நித்தியசூரி’களாகுவா்.
  • பாரதியாரும் தாம் நித்தியசூரியாய் பரமபதத்தில் நிற்க வேண்டும் என்பதை, ‘எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய், இறைவனே இவ்வளியிலே, பறவையிலே, மரத்தினிலே, முகிலினிலே, வரம்பின் வானவெளியிலே கடலிடையே, மண்ணகத்தே, வீதியிலே வீட்டில் எல்லாம் களியிலே, கோவிந்தா நினைக்கண்டு, நின்னொடு நான் கலப்பது என்றோ” எனக் ‘கோவிந்தன் பாட்டு’ எனுந் தலைப்பில் தெரிவிக்கின்றாா்.

நன்றி: தினமணி (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories