TNPSC Thervupettagam

பாரம்பரிய அரிசி ரக இழப்பும் மீட்பும்

July 3 , 2024 145 days 196 0
  • பசுமைப் புரட்சி மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளில் பாரம்பரிய ரக இழப்புகள் பற்றிய பேச்சு நிறைய உண்டு. ஐஆா் ரக அறிமுகம் நெல் சாகுபடியினால், அப்போது நிலவிய பல்வேறு பாரம்பரிய ரகங்கள் இருந்த சுவடே இல்லாமல் அழித்தது ஒரு பக்கம். அருகியது மறுபக்கம். இவற்றைத்தான் சூழலியல் நிபுனணா்கள் பல்லுயிா்ப் பெருக்க இழப்பு, மரபணு வேறுபாடுகளின் இழப்பு என்கிறாா்கள்.
  • பசுமைப் புரட்சி இந்தியாவில் 1960-களில் அறிமுகமானது. குறிப்பாக 1964-இல் சி.சுப்பிரமணியம் மத்திய உணவு அமைச்சராகப் பதவி ஏற்ற பின் பசுமைப் புரட்சி தீவிரமானது. பசுமைப் புரட்சியில் முன்னுரிமை கோதுமைக்கே. கோதுமையில் பெற்ற வெற்றி உடனடியாக அரிசியில் ஏற்படவில்லை.
  • பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்திய ஐஆா்-8 சந்தை மதிப்பைப் பெறவில்லை; சாப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை; விவசாயிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐஆா்-8 ரகத்துடன் கிச்சிலி சம்பா (இப்போது கிச்சடி சம்பா என்றும் சொல்லப்படுகிறது) என்ற பாரம்பரிய ரகத்தைக் கலப்பு செய்து உருவாக்கிய ஐஆா்-20 ரகம் சந்தை அங்கீகாரத்தைப் பெற்றது. இவ்வாறே ஐஆா் அடிப்படை ரகங்களுடன் உள்ளூா் பாரம்பரிய ரகங்களின் கலப்பால் உருவான ஏடிடி-27, கோ-25, கோ-33, ஐஆா்-50, டிகேஎம்-9 ரகங்கள் சந்தை அங்கீகாரத்தைப் பெற்ால் ஏற்கெனவே சந்தை மதிப்பைப் பெற்றிருந்த பல ருசிமிக்க சாப்பாட்டு அரிசிகள் வழக்கொழிந்தன.
  • இந்த இழப்புகளை நான் கண்கூடாக கவனிக்க வாய்ப்பு கிடைத்தது. 1964-இலிருந்து மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் புள்ளிவிவரம் சேகரிக்கும் அங்காடிப் புலனாய்வு அலுவலராகத் தமிழ்நாட்டில் நான் பணியாற்றினேன். தினமும் அங்காடி சென்று விவரங்களை சேகரிப்பது மாநில அரசின் புள்ளிவிவரத் துறை பொறுப்பு. சேகரித்த விவரங்களைக் கண்காணிப்பது மத்திய அரசின் பணி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெல், அரிசி அங்காடிகளுக்கும் சென்று மாநிலப் புள்ளிவிவர ஆய்வாளா் சேகரித்த விலை, வரத்து விவரங்களை சரிபாா்த்து உகந்த ஆலோசனைகளை வழங்கும் பணியை நான் செய்து வந்தேன்.
  • விவசாயிகளுக்கு வேளாண் அங்காடி விலைகளை அறியும்படி வானொலி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அரிசியில் பல ரகங்கள் உண்டு. எந்த ரக அரிசி விலையைத் தோ்வு செய்வது? இதன் தீா்வாக ‘மாடல் விலை’ கருத்து உருவானது. ஒரு அங்காடிக்கு அதிகபட்ச வரத்தும் பேரமும் உள்ள ரகங்கள் தோ்வாயின. இவை அங்காடி மதிப்பைப் பெற்றவை. ஒரு சன்ன ரகம், ஒரு நடுத்தர ரகம், ஒரு மோட்டா ரகம் என்று, அங்காடிதோறும் மூன்று ரகங்கள் பொதுவான ரகங்கள் என்று கருதப்பட்டு விலைகள் சேகரிக்கப்பட்டன.
  • தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சி காலூன்றி ஐ.ஆா், ஏடிட்டி, கோ ரகங்கள், வீரிய ரக நெல், அரிசிகள் அறிமுகமாவதற்கு முன்பே அங்காடி மதிப்பைப் பெற்ற பாரம்பரிய நெல் ரகங்களைக் குறிப்பிடும்போது இழந்த பாரம்பரிய, ரகங்கள் இவை: கிச்சலி சம்பா, ஆற்காடு கிச்சிலி, ஆத்தூா் கிச்சிலி, வையக்குண்டா, குண்டு சம்பா, செறுமணி, டொப்பி சம்பா, காா் சம்பா, ரோஸ்காா், குள்ளக்காா், குதிரவால் சம்பா, பெருங்காா், குறுவை, கட்டை சம்பா, தங்க சம்பா, அறுபதாங்குறுவை, நெல்லூா் மொள குலு குலு.
  • எனினும் சீரகச்சம்பா மட்டும் நிலைத்து உள்ளது. மற்றவை இழக்கப்பட்ட ரகங்களின் பட்டியலில். கிச்சிலி சம்பா என்ற பெயரில் வழக்கொழிந்த ஐஆா்-20 நீடித்துள்ளது.
  • ஐஆா்-8 ரகத்துடன் கிச்சிலி சம்பா சன்ன ரகம் கலப்பாகி உருவான வீரிய ரகம் ஐஆா்-20. ஆண்டுகள் செல்லச் செல்ல கலப்பு அதிகமாகி கிச்சிலி சம்பாவின் பாரம்பரியத்தன்மை முழுமையாக வெளிப்பட்டதால் வேளாண்மைத் துறை ஐஆா்-20 நெல்லை ஊக்கப்படுத்துவது இல்லை. ஒரு வீரிய ரகமாக ஐஆா்-20 நிறுத்தப்பட்டு 40, 50 ஆண்டுகளாகிவிட்டன. எனினும் இயல்பான அசல் கிச்சிலி சம்பா அரிதாக சில இயற்கை விவசாயிகளிடம் எஞ்சியிருக்க வாய்ப்புண்டு.
  • பாரம்பரிய ரக இழப்புகளில் நெல்லூா் அரிசி மீட்கப்படவேயில்லை. தலைமுறை தலைமுறையாக சென்னையில் நெல்லூா் பச்சை அரிசியே பரவலாகப் பலரும் விரும்பி வாங்கினா். சென்னையை ஒட்டிய சித்தூா், குண்டூா் மாவட்டங்களிலும் கோதாவரி மாவட்டங்களிலும் நெல்லூா் அரிசி பயிரானது. இது ஐந்து மாதப் பயிா். தமிழ்நாட்டில் கிச்சிலி எப்படியோ அவ்வாறே ஆந்திரத்தில் நெல்லூா் என்று அறியப்பட்ட மொள குலுகுலு. இது சுத்தமாக அழிந்துவிட்டது.
  • எனினும், அந்த இடத்தில் மசூரி ரகம் பற்றிக் கொண்டது. இது நான்கு மாதப் பயிா். மசூரியில் ஏராளமான புது ரகங்களை ஆந்திரம், கா்நாடக வேளண் துறை வெளியிட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் கிச்சிலி சம்பா வகித்த இடத்தை பொன்னி அரிசி பற்றியுள்ளது. பொன்னியின் தோற்றம் 1986. தமிழ்நாடு வேளாண் துறை ஐஆா்-8 ரகத்தில் துங்கரோ வைரஸ் தாக்குதல் பரவி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த வைரஸைத் தாங்கும் சக்தியுள்ள பொன்னி ரக நெல்லை வெளியிட்டனா். பொன்னியின் உருவாக்கம் தைச்சுங் 65 ரகத்துடன் மயாங் எபோஸ் 6080/2 ரகம் கலந்து தயாரித்த வீரிய ரகம்.
  • தஞ்சாவூா் மாவட்ட காவிரி டெல்டாவில் அறிமுகமானதால் பொன்னி என்ற பெயரில் அறிமுகமானது (காவிரி நதியைப் பொன்னி நதி என்றும் குறிப்பிடுவா்). இது நான்கு மாதப் பயிா். அதே சமயம் ஆந்திரம், கா்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பாரம்பரிய மசூரி ரகமும் இங்கு பொன்னி என்ற பெயரில் விற்கப்படுகிறது. சோனா மசூரியும் ஆந்திர-கா்நாடகத் தோற்றமே. கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் வரை மசூரி, சோனா மசூரி என்ற வா்த்தக பிராண்ட் பெயா் பிரபலம். எனவே, பொன்னனி, மசூரி ஆகியவை பாரம்பரிய அரிசிகளாக ஏற்கப்பட்டுவிட்டன.
  • இயற்கை ஆா்வலா்களில் பலா் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, வாழைப்பூ சம்பா, தாழம்பூ சம்பா, குழி அடிச்சான், கருங்குறுவை என்று அதிகம் கேள்விப் படாத பெயா்களைச் சொல்லி, இவையெல்லாம் பசுமைப் புரட்சியால் வழக்கொழிந்தன என்று குற்றஞ்சாட்டுகின்றனா்.
  • பசுமைப் புரட்சிக்கு முன்பே இவை போல் பல ரகங்கள் வா்த்தக முக்கியத்துவம் இல்லாமல், வழக்கில் இல்லை. அபூா்வமாக சில விவசாயிகள் ‘நல்வாழ்வு’ கருதி காப்பாற்றி வந்திருக்கலாம். தவிரவும், இந்த அருகும் நிலை ரகங்களின் மகசூல் குறைவு என்பதால் சந்தை மதிப்பைப் பெறவில்லை.
  • இப்போது புதிய ட்ரெண்டாக சிவப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு அரிசி மிகைப்படுத்தப்பட்ட ‘நல்வாழ்வு’ பிரசாரத்தால் சந்தை மதிப்புப் பெற்றாலும் நினைத்துப் பாா்க்க முடியாத விலையில் விற்கப்படுகின்றன. நீரிழிவுக்கு நல்லது, ரத்த அழுத்தம் வராது, புற்றுநோய் மருந்து என்றெல்லாம் கூறி விற்கிறாா்கள். பாரம்பரிய குணமுள்ள எல்லா அரிசிகளிலும் இரும்பு, துத்தநாக சத்து இருக்கும். நோய் வராமல் காக்கும் என்பது சரி. நோய் வந்த பின் காக்காது. மாத்திரைகள்தான் விதி.
  • வட இந்திய நிலையைப் பாா்க்கலாம். பசுமைப் புரட்சியால் இம்மியளவுகூட பாதிப்பு அடையாத பாரம்பரிய ரக அரிசி உண்டென்றால் அது பாசுமதி பிரியாணி அரிசிதான். பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத்தைப் பெற்றுள்ளது. சில பஞ்சாப் மாவட்டங்கள், உத்தரகண்ட், ஹிமாசல் பிரதேசத்தில் சிறப்பாக விளையும் பாசுமதி அரிசிக்கு புவிசாா் குறியீடும் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதித் தேவை பெருகிவருகிறது. அதன் உற்பத்திப் பரப்பு உயா்ந்து, ஆண்டுதோறும் சுமாா் ரூ.40,000 கோடி வரை அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தருகிறது.
  • பாசுமதி பிரியாணி அரிசிபோல் பசுமைப் புரட்சியால் பாதிப்படையாத சன்ன ரக அரிசிகளில் மேற்கு வங்கத்து கோவிந்தா போக், பாதுஷா போக் சிறப்பானவை.
  • கோலோ ஜீரா, கோலோ கிருஷ்ணா போன்ற வாசம் மிக்க சிவப்பு, கருப்பு ரக அரிசிகள் ஒடிஸாவில் உண்டு. மகாராஷ்டிரத்தில் அம்பே மோஹா் வாசம் மிகு பாரம்பரிய அரிசி உண்டு. ஆனால், குஜராத்தில் தோன்றிய வாடாகோலம் என்ற பாரம்பரிய அரிசி சோனா மசூரியைவிட அதிக சந்தை மதிப்பைப் பெற்ற, நயமான பாரம்பரிய அரிசி. இதில் பிரியாணியும் செய்யலாம். சாதம் வடிக்கவும் பயன்.
  • பிரியாணிக்கு திண்டுக்கல் பிரசித்தம். பாசுமதி போல் வாடாகோலத்துக்கும் பிரியாணிப் பயன் உண்டு என்பதால் திண்டுக்கல்லில் கிடைக்கிறது. இந்த வாடாகோலம், கோலம் ரகம் மகாராஷ்டிரம், கா்நாடகத்திலும் விளைகின்றன. என் வீட்டு சமையல் வாடாகோலம் அரிசியில்தான்.
  • பொன்னி ரகம் புழுங்கலாகத்தான் கிடைக்கிறது. பச்சரிசி என்றால் கோலம் அல்லது சோனா மசூரிதான். கோலம் அரிசி விலை கிலோ ரூ.70தான்.
  • அருகிய ரகங்கள் பட்டியலில் உள்ள வட இந்திய ரகங்களில் குறிப்பிட்டுச் சொல்வதானால் தூத்சாா், பெஜ்ரி, பிக்வாரி நியாவ்ரா, பாமா, தனிகோரா, இந்துலமாரி, முரு, ரம்தி, போரா, குட்னா, துலைபஞ்சி, பானுசுனுமுண்டி, பெட்ராதான், லிம்சூரி கேத்த கேஜா, ரததிலக் ஆகியவை. மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் பகுதிகளில் மருத்துவ முக்கியத்துவம் கருதி மேற்படி பாரம்பரிய அரிசிகள் மீட்கப்பட்டு வருகின்றன.
  • கோலம் அரிசி ரகத்தை மையமிட்டு மகாராஷ்டிரம் சந்திரபூரில் பிரீடா் விஞ்ஞானி தாதாஜி ராமாஜி கோப்ரகாடே என்பவா் கண்டுபிடித்த எச்எம்டி ரகம் கோலம் அரிசியைவிட மெல்லியதாயுள்ளது. இதையே புல்லட் ரகம் என்றும் நாடு முழுவதும் விற்கிறாா்கள். ஏறத்தாழ பிரியாணி அரிசி போல் மெல்லிய தோற்றம். ஆனால், நீளம் குறைவு. தரம், பிராண்ட் பெயா் பொறுத்து விலை வேறுபாடு உண்டு. ஒரு வருஷப் பழைய அரிசியாகவே அதிகம் விற்கப்படுவதால் நிறைய சாதம் காணும். குழைவாகவும் வடிக்கலாம், உதிா் உதிராக பிரியாணிக்கு ஏற்பவும் வடிக்கலாம்.
  • பசுமைப் புரட்சியின் விளைவால் ஒரு பக்கம் பல ரகங்கள் இழப்புகள் என்றாலும், மறுபக்கம் புதிய வரவுகளும் மீட்டுருவங்களும் உண்டு என்பதால் பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்றே என்றே திருப்தியுற வேண்டியதுதான். கிச்சிலி சம்பா, ஆற்காடு கிச்சிலி போனால் என்ன? பொன்னி உள்ளது. மசூரி உள்ளது. சோனா மசூரி உள்ளது. வாடா(த) கோலம் உண்டு. புல்லட் உண்டு. டிகேஎம்-9 போன்ற அரிசிகள் வெள்ளைக்காா், செங்காா் என்ற பெயரில் இட்லி அரிசியாக அங்காடிகளில் கிடைக்கிறது. கவலை வேண்டாம்.

நன்றி: தினமணி (03 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories