- ‘முதுமை என்பது இயற்கையின் வரம்’ என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர். ‘முதுமை என்பது வாழ்க்கையின் பருவம் அல்ல, அனுபவத்தின் சின்னம்’ என்கிறார் ஓஷோ. ஆனால், இன்றைய வாழ்க்கை முறைகளில் முதுமை என்பது நோய்களுக்கான கூடாரமாகவும் மாறிவருகிறது.
- முதுமையில் எதிர்கொள்ளும் நோய்களில் ‘பார்க்கின்சன் நோய்’ (Parkinson’s disease) பாதிப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. அழுத்தங்கள் நிறைந்த - உடற்பயிற்சிகள் குறைந்த - இன்றைய நவீன வாழ்வில் சிலருக்கு நடுத்தர வயதிலும் இது தொடங்கிவிடுகிறது. பெரும்பாலும் ஆண்களிடம்தான் இந்தப் பாதிப்பு அதிகம்.
என்ன காரணம்?
- பார்க்கின்சன் நோய் வருவதற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மரபுப் பண்பும், தொழிற்சாலைக் கழிவுகளும், மாசுபட்ட சுற்றுச்சூழல் தரும் கேடுகளும் இணைந்து இந்த நோயை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. சில பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டுக்கும் இந்த நோய்க்கும் தொடர்பிருப்பது அறியப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அவ்வளவாகக் காய்கறிகளையோ பழங்களையோ உண்ணும் பழக்கம் இல்லாதவர்களுக்கு முதுமையில் இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
- சார்ஜ் குறைந்துபோன பேட்டரிபோல மூளை நரம்பணுக்களில் ‘டோப்பமின்’ (Dopamine) எனும் ரசாயனம் சுரப்பது குறைந்துவிடும்போது, உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படும். அவற்றின் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’. பெரும்பாலும் ‘டோப்பமின்’ சுரப்பு 80% குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.
அறிகுறிகள் என்னென்ன?
- கைகளில் ஏற்படும் நடுக்கம்தான் பார்க்கின்சன் நோயை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறி. இந்த நோயாளிகள் ஆரம்பத்தில் உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பதுபோல் செய்துகொண்டிருப்பார்கள். பிறகு கை விரல்கள் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலுக்கும் தலைக்கும் பரவும்.
- விநோதம் என்னவென்றால், ஓய்வாக இருக்கும்போதுதான் இந்த நடுக்கம் ஏற்படும். ஏதாவது ஒரு வேலை செய்யத் தொடங்கிவிட்டால், நடுக்கம் நின்றுவிடும். உறக்கத்தில் நடுக்கம் இருக்காது. நடுக்கம் நாக்கையும் பாதிக்கும்போது பேச்சில் வேறுபாடு தெரியும். முணுமுணுப்பதுபோல் பேசுவார்கள். அந்தப் பேச்சு மற்றவர்களுக்குப் புரியவும் செய்யாது. கைகுலுக்குவதற்கும் கையெழுத்து போடுவதற்கும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
- அடுத்ததாக, தசைகள் இறுகிவிடும். உடலியக்கங்கள் குறையும். உதாரணமாக, ஓரிடத்தில் உட்கார்ந்தால், மணிக்கணக்கில் எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள். நிற்க வைத்தாலும் நின்றுகொண்டே இருப்பார்கள். எழுந்து நிற்கும்போதும் நடக்கும்போதும் தள்ளாடுவார்கள். படுக்கையைவிட்டு எழும்போது சிறிய அளவில் மயக்கம் ஏற்படும். இதனால், அடிக்கடி விழுந்துவிடுவார்கள்.
- செய்யும் வேலையைத் திடீரென்று பாதியில் நிறுத்திக்கொள்வார்கள். உண்ணும்போது, உடை உடுத்தும்போது, பொத்தான் மாட்டும்போது இம்மாதிரி நடக்கும். எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் முகத்தில் எந்தவிதச் சலனமின்றி இருப்பார்கள். எதிலும் பற்றில்லாமல் இருப்பார்கள். எதிர்காலத்தை நினைத்து பயந்து மனச்சோர்வுக்கு உள்ளாவார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்.
- உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவார்கள். சாப்பிடும் நேரம் நீளும். சாப்பிடும்போது இருமல் இடைஞ்சல் ஏற்படுத்தும். சாப்பிடும் உணவின் அளவும் குறையும். உடல் எடை குறையும். மலச்சிக்கல் ஏற்படும்.
- கழிப்பறை போவது, குளிப்பது, உடை உடுத்துவது, ‘ஏடிஎம்’ இயந்திரத்தில் பணம் எடுப்பது உள்ளிட்ட ஏற்கெனவே பழக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யமுடியாமல் திணறுவார்கள். அடுத்தவர்களின் உதவியைத் தேடுவார்கள். ஞாபக மறதி கைகோக்கும். இரவில் காலை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். கால்வலிக்கும். பாலுறவு பாதிக்கப்படும். சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். இரவில் அடிக்கடி சிறுநீர் போகத் தோன்றும். இதனால் உறக்கம் குறையும். பகலில் சோர்வாக இருப்பார்கள்.
பரிசோதனைகள் என்னென்ன?
- பார்க்கின்சன் நோயைக் கண்டறிய பரிசோதனைகள் இல்லை. இது வர வாய்ப்புண்டா என்பதைத் தெரிவிக்க ‘பயோமார்க்கர்கள்’ (Biomarkers) உண்டு. இவற்றை சில ரத்தப் பரிசோதனைகளில் அறியலாம். இளம் வயதினருக்கு மரபணு சார்ந்த பரிசோதனைகள் உள்ளன. என்றாலும், மருத்துவர்கள் முக்கியமாக நம்புவது மூளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / 18 எஃப் டோப்பா ‘பெட்’ ஸ்கேன் பரிசோதனைகளை மட்டுமே. காரணம், இவர்களுக்கு ஏற்படும் உடல் நடுக்கத்துக்கு மூளையில் வேறு காரணங்கள் இருந்தாலும் இவற்றில் தெரிந்துவிடும்.
சிகிச்சைகள் என்னென்ன?
- முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பார்க்கின்சன் நோயைப் பொறுத்தவரை எல்லோருக்குமான பொதுவான சிகிச்சை பலன் தருவதில்லை. ஒருவருக்குப் பலன் தரும் சிகிச்சை அடுத்தவருக்குப் பலன் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. அவரவர் உடல் தன்மை மற்றும் நோயின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சைக்குப் பலன் கிடைக்கும். இந்த நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.
- பார்க்கின்சன் நோய்க்கு நரம்புநல சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அறிதிறன் நரம்புசார் மனநலப் பயிற்சியாளர் (Cognitive neuropsychologist), பேச்சுப் பயிற்சியாளர், இயன்முறைப் பயிற்சியாளர், உணவியலாளர் ஆகியோரின் உதவியும் தேவைப்படும்.
- உடலில் தோன்றும் அறிகுறிகளின் அடிப்படையில் இந்த நோய் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படும். முதல் நிலையில் உடலில் வலது பக்கம் அல்லது இடது பக்கம் மட்டும் கை நடுக்கம் இருக்கும். இரண்டாம் நிலையில் உடலில் இரண்டு பக்கங்களிலும் நடுக்கம் காணப்படும். அத்தோடு தசை இறுக்கமும் சேர்ந்துகொள்ளும். இவற்றுக்கு ‘செலிகிலின்’, (Selegiline) ‘ராசாகிலின்’ (Rasagiline) போன்ற நரம்பணுப் பாதுகாப்பு மாத்திரைகள் தரப்படும்.
- நோயின் மூன்றாம் நிலையில், பாதிக்கப்பட்டவர் எழுந்து நிற்கவும் நடக்கவும் சிரமப்படுவார். உடலியக்கங்கள் குறைந்துவிடும். கை நடுக்கம் தீவிரமாகிவிடும். இதற்கு ‘எல்-டோபா’ (L-dopa), ‘அமான்டடின்’ (Amantadine) உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் உண்டு. மருத்துவரின் சரியான வழிகாட்டுதலுடன், தொடர்ந்து எடுத்துவர வேண்டும். மனச்சோர்வு, மலச்சிக்கல், உறக்கமின்மை போன்றவற்றுக்கும் சிகிச்சை தேவைப்படும்.
கைகொடுக்கும் நவீன சிகிச்சை!
- நோயின் நான்காம் நிலைதான் மோசமானது. கை நடுக்கம் எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இந்த நோயாளிகள் எழுந்தால், நின்றால், நடந்தால், திரும்பினால் தள்ளாடித் தரையில் விழுந்துவிடுவார்கள். படுக்கையிலிருந்து அல்லது இருக்கையிலிருந்து இவர்களால் தனியாக எழுந்திருக்க முடியாது. அடுத்தவர்களின் உதவி தேவைப்படும். இவர்களுக்கு ‘ஆழ்ந்த மூளைத் தூண்டல் சிகிச்சை’ (Deep brain stimulation - DBS) எனும் நவீன சிகிச்சை பலன் தருகிறது.
- பொதுவாக, ஒருவரிடம் குறைந்தது 5 வருடங்களுக்கு மருந்துகள் பலன் தருகின்றனவா என்று மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். அப்படிப் பலன் தராதவர்களுக்கு அல்லது மருந்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, இந்த நவீன சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள். இது எல்லோருக்குமான சிகிச்சை இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
- இது, இதயத்துடிப்புப் பிரச்சினைக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுவதைப் போல மூளைக்குப் பயன்படுத்தப்படும் நவீன சிகிச்சை. மூளைக்குள் மின்தூண்டல்களை ஏற்படுத்த ஒரு கருவி (Neurostimulator) இருக்கிறது. அது சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும். இதிலிருந்து இரண்டு மின்வயர்கள் கிளம்பும். பேட்டரியில் இயங்கும்.
- பயனாளியின் மேற்புற மார்பில் சிறிய அறுவை சிகிச்சை செய்து, இந்தக் கருவியைப் பொருத்துகிறார்கள். இதன் வயர்களைத் தோலுக்கு அடியில் காதுக்குப் பின்னால், தலைக்குப் போகச்செய்து, மூளைக்குள் செருகிவிடுகிறார்கள். கட்டுப்படுத்தும் கருவியைப் பயனாளியிடம் கொடுத்துவிடுகிறார்கள். தேவைப்படும்போது பயனாளி இதை இயக்கி கை நடுக்கம், நடை தள்ளாட்டம் போன்ற மிகையான உடலியக்கங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.
- மண்டையோட்டைப் பிளக்காமல் செய்யப்படும் இந்த நவீன சிகிச்சை இப்போது சென்னை, மதுரை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின் தூண்டல்களை மூளைக்கு அனுப்பி, அதன் மிகை இயக்கங்ளை குறைக்கும் இந்த சிகிச்சையால் மருந்துகளின் பயன்பாடு குறையும்; பயனாளியின் வாழ்க்கைத் தரம் உயரும். அதேநேரத்தில் ஏற்கனவே மோசமாகிவிட்ட மூளை அறிதிறன் சார்ந்த சீர்குலைவுகள் (Cognitive disorders) குறைய வாய்ப்பில்லை.
- இது ஒரு முதுமை நோய் என்பதால், சலிக்காமல் செய்யப்படும் சிகிச்சைகளோடு, குடும்பத்தாரின் எரிச்சல்படாத வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள், பொறுமையான தொடர் கவனிப்பு, அன்பு, அரவணைப்பு ஆகியவையும் இணைய வேண்டியது முக்கியம்.
எப்படித் தடுப்பது?
- உணவுகள்: வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை உப்பு, வெள்ளை மைதா பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுகளையும் புரதம் மிகுந்த உணவுகளையும் அதிகமாக உண்ணுங்கள். தினமும் ஒரு வண்ணமுள்ள காயும் பழமும் அவசியம். பழைய சோறு, நீராகாரம், ‘புரோபயாட்டிக்’ உணவு, நாட்டுக் காய்கள், மஞ்சள் கலந்த உணவு ஆகியவை நல்லவை. காய்கனிகளை நன்றாகக் கழுவிப் பயன்படுத்துங்கள். பச்சைக் காய்கறிகள் வேண்டாம். தினமும் 12 தம்ளர் வீதம் வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள்.
- உறக்கம்: தினமும் 6 – 8 மணி நேரம் உறக்கம் முக்கியம். உறங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள். தொலைக்காட்சி மற்றும் கைப்பேசிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள். மனச்சோர்வும் மன அழுத்தமும் கூடாது. அதற்குத் தனிமையை விரட்டுங்கள். பணி ஓய்வுபெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு வேலையில் அல்லது சமூக சேவையில் ஈடுபடுங்கள். குடும்ப உறவுகளுடன் உறவாடுங்கள். சமூகத்துடன் தொடர்புவைத்துக்கொள்ளுங்கள்.
- உடற்பயிற்சிகள்: இளம் வயதிலிருந்தே தினமும் 45 நிமிடங்களுக்கு வேகமாக நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால் தசைகளுக்கும் விரல் தசைகளுக்கும் தனிப்பயிற்சிகள் தரலாம். சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், திறந்தவெளி விளையாட்டுகள், உள்ளரங்க விளையாட்டுகள் போன்ற காற்றலைப் பயிற்சிகளும் ‘பார்க்கின்சன் நோயை’த் தடுக்க உதவும் முக்கியப் பயிற்சிகள். வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே ‘ட்ரட்மில்’லில் பயிற்சி செய்யலாம். தியானம் மனச்சோர்வுக்குத் திரைபோடும்.
- மனப்பயிற்சிகள்: குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு, வார்த்தை விளையாட்டு, புதிர் விளையாட்டு போன்ற பயிற்சிகளையும் செய்யலாம். புதிதாக ஓர் இசைக்கருவியைப் பழகிக்கொள்ளலாம். கதை சொல்லுதல், புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுதல் போன்றவை நினைவாற்றலை வளர்க்க உதவும். பார்க்கின்சன் நோயாளிகள் தங்கள் தொழில் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதும், தேவையைப் பொறுத்து பேச்சுப் பயிற்சிகள், அறிதிறன் நரம்புசார் மனநலப் பயிற்சிகள், இயன்முறைப் பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வதும் அவசியம்.
நன்றி: அருஞ்சொல் (21 – 07 – 2024)