பார்வையைப் பறிக்கும் கண்நீர் அழுத்த நோய்
- சமீபத்தில் விபத்தில் காய மடைந்த முதியவர் ஒருவர் கண் பரிசோதனைக்காகக் கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவரின் இரண்டு கண்களிலும் கண்நீர் அழுத்தம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். இதனால் இரு கண்களிலும் பார்வை நரம்பு 90% பாதிக்கப்பட்டு அவருக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டதை உறுதி செய்தார்.
- அந்த முதியவர் சாலையில் பயணிக்கும்போது அவருக்குப் பார்வை தெரியும். ஆனால், பக்க வாட்டில் வரும் வாகனங்கள் எதுவுமே அவர் கண்ணுக்குத் தெரியாது. இத னால் சாலை விபத்துகளும் ஏற்படும். கண்நீர் அழுத்தம் அதிகமாகி, பார்வை நரம்பு பாதிப்பு அடைந்து, பார்வையைப் பாதிப்பதைத்தான் ‘கிளாகோமா’ என்கிறோம். எந்தவித மான அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படும் கிளாகோமா, நம் பார்வையை ரகசியமாகப் பறித்து இருள் சூழ்ந்த உலகிற்கு அழைத்துச் செல்லும்.
கண்நீர் அழுத்தம் என்றால் என்ன?
- நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைய, ரத்த அழுத்தம் 120/80 mmHg ஆக இருக்க வேண்டியது அவசியம். அதேபோலக் கண்களில் சுரக்கும் நீர் அழுத்தம் 10 முதல் 21 mmHg என்கிற அளவிற்குள் இருந்தால்தான் கண்ணின் வடிவமைப்பு பாதுகாக்கப்படுவதுடன் கண் நரம்பு ஆரோக்கிய மாக இருக்க முடியும். இதில், கண்ணில் சுரக்கும் நீர் அழுத்தம் 21 mmHgக்கு மேல் அதிக மானால் அது பார்வை நரம்பின் மீது அழுத்தத்தை உண்டாக்கும்.
- இந்த நாள்பட்ட தொடர் கண் நீர் அழுத்தம் அதிகரிப்பினால் பார்வை நரம்பின்மையப் பகுதி கொஞ்சம் கொஞ்ச மாகச் சிதையத் தொடங்கும். இதனால் முதலில் நம் பக்கவாட்டுப் பார்வை இருட்டாகத் தெரியத் தொடங்கும்; இதே நிலை தொடர்ந்தால் நம் பார்வை முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும். சிலநேரம் அதிகப்படியான உயர் கண்நீர் அழுத்தம் மிகக் குறுகிய காலத்திலே நம் பார்வை நரம்பை முழுவதுமாகச் சிதைத்துவிடும். நம் அனைவருக்கும் கிளாகோமா நோய் வரச் சாத்தியமுண்டு. அதனால், கிளாகோமா உள்ளதா என்று வருடம் ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பரிசோதனைகள்:
- கண்நீர் அழுத்த நோய்ப் பரி சோதனைகளில் கண் மருத்துவர் நம் கண்ணில் நீர் அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை டோனோ மீட்டர் (Tonometer) கருவி மூலம் அளவீடு செய்வார். சிலநேரம் லாசிக் (Lasik) அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, கருவிழித் தடிமன் (corneal thickness) குறைவாக இருப்பதால் கண்நீர் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் குறைவாகவே காட்டும். இதனால், கருவிழித் தடிமனைக் கொண்டு கணக் கீடு செய்து உண்மையான கண்நீர் அழுத்தம் (Corrected IOP) எவ்வளவு என்பதைக் கண்டறிவார்கள்.
- கண்ணுக்குள் சுரக்கும் நீர் வடியும் பாதையை கோனியோஸ் கோபி (Gonioscopy) என்கிற கருவி யின் மூலமாகப் பரிசோதனை செய்வார்கள். கண்ணுக்குள் உள்ள திரவம் வடியும் பாதையில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் அதனால் கண்நீர் அழுத்தம் அதிக மாகி, பார்வை நரம்பு பாதிக்கப்பட்டுப் பார்வை இழப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்க உடனடி யாகச் சில நிமிடங்களில் லேசர் உதவியுடன் ஒரு மாற்றுப் பாதையை உருவாக்குவார்கள். சில நிமிடச் சிகிச்சை உங்கள் வாழ்நாள் முழுவதும் கிளாகோமா என் கிற நோயிலிருந்து பார்வையைக் காக்க உதவும்.
- மேலும், கண் சொட்டு மருந்து கொண்டு கண் பாவையை (Pupil) விரிவடையச் செய்து விழித்திரை பரிசோதனை செய்வார். அதில் பார்வை நரம்பு பாதிப்பு இருந்தாலோ அல்லது கண்நீர் அழுத்தம் அதிக மாகக் காணப்பட்டாலோ கீழ்க்கண்ட சிறப்புப் பரிசோதனைகளுக்குப் பரிந்துரைப்பார்.
- கண் பார்வை நரம்பின் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறியும் OCT ஸ்கேன் எடுக்க வேண்டும். பார்வைப் புலப் பரிசோதனை (visual field Analysis) மூலம் பக்கவாட்டுப் பார்வை எப்படி உள்ளது எனக் கண்டறியலாம். இதில் உள்ள பாதிப்பைப் பொறுத்து உங்களுடைய கண்நீர் அழுத்தத்தை எந்த அளவில் வைக்க வேண்டும் என மருத்துவர் முடிவுசெய்வார்.
- இதன் பிறகே கிளாகோமா சிகிச்சை குறித்து கண் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். இத்தகைய பரிசோதனைகளைச் செய்து உங்கள் பார்வையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறியாமல், எந்தவிதப் பரிசோதனையும் செய்யாமல் கண்ணாடிக் கடைகளுக்குச் சென்று கண்ணாடி மாற்றிக் கொள்வதால் பலர் கிளாகோமா இருப்பதை அறியாமலே பார்வையை இழந்து வருகிறார்கள்.
சிகிச்சை முறைகள்:
- கிளாகோமா பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் கண்நீர் அழுத்தத்தைக் குறைக்கக் கண்சொட்டு மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மருத்துவர் அறிவுரை இல்லாமல் இந்தக் கண் சொட்டு மருந்தை நிறுத்தக் கூடாது. கிளாகோமா நோய்க்கான கண் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இந்தக் கண் சொட்டு மருந்தில் கண்நீர் அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றாலோ, பார்வை நரம்பு பாதிப்பு அதிகமாவதுபோல் தெரிந்தாலோ உடனடியாகக் கண்ணுக்குள் உள்ள திரவம் வேறு வழியாக வடிய ஒரு சிறிய அறுவைசிகிச்சையை மேற்கொண்டாக வேண்டும்.
அறியாத உண்மை:
- கவனக்குறைவால் நோய் முற்றிய நிலையில் மருத்துவரை மீண்டும் அணுகும்போது முழுவதும் பார்வையிழந்து காணப்படுகிறார்கள். இதற்குக் காரணம் கிளாகோமா நோய் குறித்த சரியான புரிதலுடன் கூடிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததுதான். கிளாகோமா நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர் கண் பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கிளாகோமா கண் சொட்டு மருந்தை நிறுத்தக் கூடாது.
உலக கிளாகோமா வாரம்:
- கிளாகோமா நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மார்ச் 9 முதல் 15ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கிளாகோமா விழிப்புணர்வு வாரம்
- ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது. கிளாகோமா நோய் பற்றிய புரிதலைக் கடைக்கோடி மக்களுக்கும் எடுத்துச் சென்று கிளாகோமா இல்லாத உலகைப் படைப்போம். இருளை நோக்கிச் செல்லும் மனித குலத்தைக் காப்போம்.
அறிகுறிகள்:
- பெரும்பாலும் எந்தவித அறிகுறிகளையும் கண்நீர் அழுத்த நோய் ஏற்படுத்துவதில்லை. ஆனால் பாதிப்பு அதிகமானால் பார்வை இழப்பை இந்நோய் ஏற்படுத்தும். இதனால்தான் இந்த நோயை ரகசியப் பார்வைத் திருடன் என்கிறோம். எனினும் சில நேரம் கீழ்க்கண்ட அறிகுறிகளுடன் காணப்படலாம்.
கிளாகோமா பரிசோதனையை மிக அவசியமாகச் செய்து கொள்ள வேண்டியவர்கள்
- 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்
- கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்கள்.
- ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்காக ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள்.
- கால் வலி, உடல் வலிக்காக மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்துபவர்கள்.
- மனநல மாத்திரை உட்கொள்பவர்கள்
- நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள்.
- கண்ணில் அடிபட்டவர்கள்.
- கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கண்ணுக்குள் ஊசி மருந்து செலுத்திக் கொண்டவர்கள்.
- (உலக கிளாகோமா நாள்: மார்ச் 12)
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)